உள்ளடக்கத்துக்குச் செல்

மேரியான் கோப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித மேரியான் கோப்
இளமைப் பருவத்தில் மேரியான் கோப்
கன்னியர்; துறவி; தொழுநோயாளருக்கு மறைப்பணியாளர்
பிறப்புசனவரி 23, 1838
ஹெப்பன்ஹைம், ஹெஸ்ஸே மாநிலம் (இன்று செருமனிப் பகுதி)
இறப்புஆகத்து 9, 1918
கலாவுபப்பா, ஹவாயி (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை; எப்பிஸ்கோப்பல் சபை (அ.ஐ.நா.)
அருளாளர் பட்டம்மே 14, 2005, வத்திக்கான் நகர் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
புனிதர் பட்டம்அக்டோபர் 21, 2012 இல் நிகழவிருக்கிறது, வத்திக்கான் நகர் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
முக்கிய திருத்தலங்கள்பிரான்சிஸ்கு சபை சகோதரிகளின் தலைமை இல்லத்தில் அமைந்த கோவிலும் அருங்காட்சியகமும் (சீரக்யூஸ், நியூயார்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
திருவிழாசனவரி 23 (கத்தோலிக்க சபை); ஏப்பிரல் 15 (எப்பிஸ்கோப்பல் சபை, அ.ஐ.நா.)
பாதுகாவல்தொழுநோயாளர், எய்ட்ஸ் நோயாளர்; ஹவாயி

மேரியான் கோப் (Marianne Cope) என்னும் பெண்மணி பிரான்சிஸ்கு சபையைச் சார்ந்த ஒரு துறவி ஆவார். அவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள சீரக்யூஸ் நகரில் அமைந்த பிரான்சிஸ்கு சபையில் உறுப்பினராக வாழ்ந்தார்.

1838, சனவரி 23ஆம் நாளில் பிறந்த மேரியான் கோப் தமது எண்பதாம் வயதில், 1918 ஆகத்து 9ஆம் நாளன்று இறந்தார்.

பிறரன்புப் பணிகளைப் புரிவதில் இவர் தலைசிறந்து விளங்கினார். குறிப்பாக, ஹவாயியில் உள்ள மோலக்காய் தீவில் ஒதுக்கப்பட்டு வாழ்ந்த தொழுநோயாளருக்கு அன்புப் பணி செய்தார். தொழுநோயாளரின் குடியேற்றத்தில் அவர்களோடு மிக நெருங்கிப் பழகி அவர்களுக்குப் பணிசெய்தபோதிலும் மேரியானைத் தொழுநோய் தீண்டவில்லை. சிலர் அதை ஒரு அதிசயமாகவே காண்கிறார்கள்.

மேரியான் கோப் என்னும் இத்துறவிக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2005, மே 14ஆம் நாள் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.[1].

2012, அக்டோபர் 21ஆம் நாள் மேரியான் கோப் புனிதர் நிலைக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் உயர்த்தப்பட்டார்.

பிறப்பும் துறவற அழைத்தலும்

[தொகு]

மேரியான் கோப் திருமுழுக்குப் பெற்றபோது அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் மரியா அன்னா பார்பரா கூப் (Maria Anna Barbara Koob) என்பதாகும். பின்னர் அவரது குடும்பப் பெயர் கோப் (Cope) என்று மாற்றம் பெற்றது. பீட்டர் கூப் (1787-1862) என்பவருக்கும் பார்பரா விட்சன்பாகர் (1803-1872) என்பவருக்கும் மகவாகத் தோன்றிய மேரியான் பிறந்த இடம் இன்றைய செருமனியில் அமைந்த ஹெஸ்ஸே மாநிலத்தின் ஹெப்பன்ஹைம் என்னும் நகர் ஆகும். அவர் பிறந்த நாள் 1838, சனவரி 23.

மேரியானுக்கு ஒரு வயதிருக்கும்போது அவர்தம் பெற்றோர் குடும்பத்தோடு அமெரிக்க ஐக்கிய நாடுகள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குடியேறியது நியூயார்க் மாநிலத்தில் யூட்டிக்கா (Utica) என்னும் நகரில் ஆகும். அங்கு, புனித யோசேப்பு பங்கில் அவர்கள் உறுப்பினர் ஆயினர். அப்பங்கைச் சார்ந்த புனித யோசேப்பு கல்வியகத்தில் மேரியான் கல்வி பயின்றார். மேரியான் எட்டாம் வகுப்பில் படித்தபோது அவருடைய தந்தையின் உடல் ஊனமுறவே அவரால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு மூத்த குழந்தையாகிய மேரியானின் தலைமேல் விழுந்தது. அவர் ஒரு தொழிற்கூடத்தில் வேலைசெய்யப் போனார்.[2]

பின்னர் மேரியானின் தந்தை அமெரிக்க குடிமை உரிமை பெற்றார். அவரோடு குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அமெரிக்கக் குடிமை உரிமை வழங்கப்பட்டது.

பீட்டர் கோப் 1862இல் இறந்தபோது மேரியானுக்கு வயது 24. அவருடைய குடும்பம் தன்னிறைவு பெற்றது. மேரியான் குடும்பப் பொறுப்புகளைத் துறந்துவிட்டு ஒரு துறவியாக முடிவு செய்தார். இவ்வாறு அவரது இளமைப்பருவ ஆவல் நிறைவேறிற்று.

துறவற வாழ்க்கை

[தொகு]

நியூயார்க் மாநிலத்தின் சீரக்யூஸ் நகரில், மேரியான் புனித பிரான்சிஸ்கு மூன்றாம் சபைத் துறவியர் பிரிவில் புகுமுக உறுப்பினராகச் சேர்ந்தார். பயிற்சிக்காலம் முடிந்ததும் பிற சகோதரிகளைப் போல அவருக்கும் துறவு உடை அளிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட துறவறப் பெயர் "மேரியான்" (Marianne). செருமனியிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய செருமன் மொழி மக்களுக்காக நிறுவப்பட்ட பள்ளியொன்றில் மேரியான் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் அத்தகைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர் ஆனார்.

மேரியான் தமது துறவற சபையின் ஆட்சிக் குழு உறுப்பினராக 1870இல் நியமிக்கப்பட்டார்.

மருத்துவ நிர்வாகப் பணி

[தொகு]

தமது சபையின் ஆட்சிக் குழுப்பொறுப்பில் இருந்தபோது நடு நியூயார்க் பகுதியில் இரு மருத்துவ மனைகள் நிறுவப்பட மேரியான் வழிவகுத்தார். மத, இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி அளிப்பதை அம்மருத்துவ மனைகள் கொள்கையாகக் கொண்டிருந்தன.

1870-1877 காலகட்டத்தில் மேரியான், சீரக்யூசில் புனித யோசேப்பு மருத்துவ மனையின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அப்போது, நியூயார்க் மாநிலத்தின் ஜெனீவா நகரில் அமைந்திருந்த மருத்துவக் கல்லூரியை சீரக்யூசுக்குக் கொண்டுவர மேரியான் துணைபுரிந்தார். சீரக்யூஸ் நகரில் அந்நிறுவனம் "ஜெனீவா மருத்துவக் கல்லூரி" என்னும் பெயர் பெற்றது. மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு அத்துறையில் போதிய பயிற்சி கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் மருத்துவ மனையில் இருந்த நோயாளருக்கு மருத்துவப் பணி செய்ய வேண்டும் என்று மேரியான் அதற்கான ஏற்பாடுகள் செய்தார்.

அவ்வாறு செய்துகொண்ட ஒப்பந்தத்தில், மருத்துவ மாணவர்களின் பணி தங்களுக்குத் தேவையில்லை என்று நோயாளர்கள் அப்பணியை மறுப்பதற்கு உரிமைகொண்டுள்ளார்கள் என்னும் பிரிவையும் சேர்க்கச் செய்தார்.

இவ்வாறு மருத்துவத் துறையில் மேரியான் சிறந்த அனுபவம் பெற்றார். அந்த அனுபவம் அவர் பிற்காலத்தில் ஆற்றவிருந்த மாபெரும் மருத்துவப் பணிக்கு ஒரு முன் தயாரிப்பாக அமைந்தது.[3]

ஹவாயிக்குச் செல்ல அழைப்பு

[தொகு]

இதற்கிடையில் அன்னை மேரியான் தமது துறவற சபைக்கு உயர் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அப்பதவியை வகித்தபோது, 1883இல் அவருடைய உதவியைக் கோரி ஒரு வேண்டுகோள் வந்தது.

ஹவாயி நாட்டின் அரசராக இருந்த கலாக்காவுவா (Kalākaua) என்பவர், தம் நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளிக்க மேரியான் தமது சபைத் துறவியரை அனுப்பித்தர வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவர் ஏற்கெனவே 50க்கும் மேற்பட்ட பெண்துறவியர் சபைகளை அணுகியும் அவருக்கு எந்தவொரு சபையும் உதவிட முன்வரவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

மன்னரின் வேண்டுகோளைக் கேட்ட அன்னை மேரியான் உள்ளம் உருகினார். உடனடியாக, தம் சபை சகோதரிகள் ஹவாயி சென்று தொழுநோயாளருக்கு மருத்துவ உதவி அளிக்கப்போவதாக வாக்களித்தார்.

மன்னருக்கு எழுதிய கடிதத்தில் அன்னை மேரியான் பின்வருமாறு கூறினார்:

உங்கள் தீவுநாட்டில் வாழ்கின்ற ஏழை மக்களின் உய்வுக்காக உழைப்பது குறித்து நான் பேராவல் கொண்டுள்ளேன். அப்பணியை ஆற்றுவதற்குத் தெரிந்துகொள்ளப்படுவோருள் நானும் ஒருத்தியாக இருக்கவேண்டும் என்று என் உளமார எதிர்பார்க்கின்றேன். அப்பணியை ஆற்றுவது எனக்கு அளிக்கப்படுகின்ற கவுரவம் எனக் கருதுகின்றேன். எந்த நோயைக் கண்டும் எனக்குப் பயம் இல்லை. எனவே, கைவிடப்பட்ட தொழுநோயாளருக்குப் பணிசெய்வதைப் பெருமையாகக் கருதுகின்றேன்.[4]

அன்னை மேரியானின் பிரான்சிஸ்கு சபை சகோதரிகள் ஹவாயியில் தொழுநோயாளர் நடுவே பணிபுரிந்த மருத்துவ மனை. இடம்: கக்காக்கோ( Kakaʻako).
அன்னை மேரியானின் பிரான்சிஸ்கு சபை சகோதரிகள் கக்காக்கோ மருத்துவ மனையில் தொழுநோயாளரின் பிள்ளைகள் நடுவே; உடன் இருப்பவர்: வால்ட்டர் மரே கிப்சன்.

ஹவாயிக்குப் பயணம்

[தொகு]

சபைத் தலைவியாக இருந்த அன்னை மேரியான், தம்மோடு ஆறு சகோதரிகளை அழைத்துக்கொண்டு தொழுநோயாளருக்குப் பணிபுரிவதற்காக ஹவாயியின் ஹொனலூலுக்கு சீரக்யூசிலிருந்து புறப்பட்டுச் சென்றார். சகோதரிகள் குழு 1883, நவம்பர் 8ஆம் நாள் ஹொனலூலு போய்ச் சேர்ந்தது.

மரிப்போசா (SS Mariposa) என்னும் பெயர்கொண்ட கப்பலில் பயணம் செய்த சகோதரிகள் ஹொனலூலு துறைமுகத்தில் தரையிறங்கியதும் அமைதியின் அன்னை மரியா பெருங்கோவிலில் மணிகள் மகிழ்ச்சிக் கீதம் ஒலித்தன.

ஹவாயி நாட்டின் பல தீவுகளிலிருந்தும் அனுப்பப்பட்ட தொழுநோயாளர்கள் வந்து கூடிய கக்காக்கோ மருத்துவ மனையை நிர்வகிக்கும் பொறுப்பு மேரியானிடமும் சகோதரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டது. தொழுநோய் முற்றிய நிலையில் இருந்த நோயாளிகள் அம்மருத்துவ மனையிலிருந்து மோலக்காய் தீவுக்கு கப்பல்வழி அனுப்பப்படுவர். அங்கு கலாவாவோ தொழுநோயாளர் குடியேற்றத்திலும் அதற்குப் பின் கலாவுபப்பா குடியேற்றத்திலும் ஒதுக்கி அடைக்கப்படுவர். பிற மனிதர்களோடு தொடர்புகொண்டால் அவர்களுக்கும் தொழுநோய் தொற்றிவிடும் என்ற பயத்தில் தொழுநோயாளர்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு "தொழுநோயாளர் குடியேற்றம்" (leper colony) உருவானது.

தொழுநோயாளர் நடுவே தொடர்பணி

[தொகு]

ஓராண்டுக்குப் பின் ஹவாயி அரசு அன்னை மேரியானிடம் இன்னொரு உதவி கோரியது. அக்கோரிக்கையை ஏற்று, அவர் ஹவாயியின் மாவுயி (Maui) தீவில் மலுலானி மருத்துவ மனையை ஏற்படுத்தினார். அதுவே மாவுயி தீவில் நிறுவப்பட்ட முதல் பொது மருத்துவ மனை.

ஆனால், விரைவிலேயே அன்னை மேரியானின் சேவை வேறு இடங்களில் தேவைப்பட்டது. ஹவாயியின் ஒவாகு (Oahu) என்னும் மூன்றாவது பெரிய தீவில் கக்காக்கோ( Kakaʻako) நகரில் அமைந்திருந்த மருத்துவமனையில் அரசு சார்பில் நியமிக்கப்பட்டிருந்த நிர்வாகி அம்மருத்துவமனையில் பராமரிக்கப்பட்ட தொழுநோயாளரைக் கொடுமைப்படுத்தினார் என்பதால் அங்கு நிலைமையைச் சரிப்படுத்த மேரியான் அழைக்கப்பட்டார்.

தொழுநோயாளருக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மேரியான் வன்மையாகக் கண்டித்தார். ஒன்றில் அரசு நிர்வாகி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது தானும் சகோதரிகளோடு ஹவாயியை விட்டு மீண்டும் சீரக்யூசுக்குத் திரும்பவேண்டும் என்று அவர் ஹவாயி அரசுக்கு நிபந்தனை விதித்தார். அரசு உடனடி நடிவடிக்கை எடுத்து, அரசு நிர்வாகியைப் பணிநீக்கம் செய்ததோடு, ஏற்கெனவே பணிச்சுமை தாளாமல் இருந்த மேரியானும் சகோதரிகளும் கூடுதல் பொறுப்பாக கக்காக்கோ மருத்துவ மனையையும் நிர்வகிக்கும்படி கேட்டது.

இவ்வாறு மேரியான், தொழுநோயாளரின் எண்ணிக்கை நிறைந்து வழிந்த கக்காக்கோ மருத்துவ மனையையும் நிர்வகிக்கலானார். ஹவாயி நாடு முழுவதிலும் தொழுநோயாளரைக் கவனித்துப் பராமரிக்க அன்னை மேரியானின் சேவை இன்றியமையாதது என்று அரசும் திருச்சபையும் வலியுறுத்தியதால், மேரியான் சீரக்யூசுக்குத் திரும்பி தம் சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்பது இன்னும் தள்ளிப்போடப்பட்டது.

அரசு விருது வழங்கப்படல்

[தொகு]

மேரியானும் சகோதரிகளும் ஹவாயியில் தொழுநோயாளரிடையே பணிபுரியச் சென்று இரண்டு ஆண்டுகள் கடந்தன. மேரியானின் தலைமையில் சகோதரிகள் தன்னலம் கருதாது ஏழை நோயாளிகளுக்கு ஆற்றிய பிறரன்புச் சேவையையும் அரும் பணியையும் பெரிதும் புகழ்ந்த அந்நாட்டு மன்னர் மேரியானுக்குச் சிறப்புப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார். "கப்பியோலானி அரச அணியின் உறுப்பினர் சிலுவை" என்பது அப்பதக்கத்தின் பெயர்.[5]

பெண்குழந்தைகளுக்கு "கப்பியோலானி இல்லம்"

[தொகு]

நாள் போகப்போக அன்னை மேரியானின் பணிப்பளு கூடியதே தவிர, குறையவில்லை. ஓராண்டுக்குப் பின், இன்னொரு முக்கிய தேவை நிறைவேறப்பட வேண்டும் என்று அவர் உணர்ந்தார். தொழுநோய் வாய்ப்பட்டு குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட நோயாளரின் பெண் குழந்தைகளுக்குக் கல்வியும் வாழ்க்கை முன்னேற்றமும் அளிக்கப்பட வேண்டும் என்று முடிவுசெய்த மேரியான் ஹவாயி அரசிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதாவது தொழுநோயாளரின் பெண் குழந்தைகளின் நலனைப் பேணுவதற்கு ஒரு தனி இல்லம் உருவாக்க வேண்டும் என்று கேட்டார். அவ்வாறே "கப்பியோலானி பெண் குழந்தைகள் இல்லம்" உருவாக்கப்பட்டது.

தொழுநோயால் பாதிக்கப்படாதிருந்தும் அப்பெண் குழந்தைகள் தொழுநோயாளர் மருத்துவமனை வளாகத்திலேயே அமைந்த "கப்பியோலானி இல்லத்தில்" பராமரிக்கப்பட்டனர். தொழுநோயாளரோடு நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்து தீட்டுப்பட்ட அக்குழந்தைகளைப் பராமரிக்க வேறு யாரும் முன்வராததால் மேற்கூறிய ஏற்பாடு செய்யப்பட்டது. மேரியான் அக்குழந்தைகளின் பராமரிப்பையும் மேற்பார்வையிட்டார்.

ஒவாகு மருத்துவமனையை மூடியதால் எழுந்த விளைவுகள்

[தொகு]

1887இல் ஹவாயியில் ஒரு புதிய அரசு பதவி ஏற்றது. புதிய ஆட்சியாளர்கள் தொழுநோயாளர் தொடர்பான அணுகுமுறையை மாற்றத் தொடங்கினர். அதுவரையிலும் புதிய தொழுநோயாளர்கள் மோலக்காய் தீவுக்குக் கட்டாய நாடுகடுத்தல் செய்யப்படவில்லை. ஆனால், புதிய ஆட்சியாளர்கள் அந்த அணுகுமுறையை மாற்றினர். ஒவாகு தீவில் அமைந்த தொழுநோயாளருக்கான மருத்துவமனையை மூடினர்.

அந்த முடிவால் விளைந்த பெரும் பாதிப்பு ஓராண்டிலேயே தெரிந்து போயிற்று. எனவே ஹவாயி அரசு மேரியானை அணுகி, மோலக்காய் தீவில் கலாவுபப்பாவில் பெண்களுக்கும் பெண்குழந்தைகளுக்கும் பராமரிப்பு நல்க ஒரு புதிய இல்லத்தை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

இந்தப் புதிய பொறுப்பை ஏற்றால், அதற்குப் பின் ஹவாயியை விட்டு தம் சொந்த இடமாகிய அமெரிக்காவின் சீரக்யூஸ் நகருக்கு ஒருநாளும் திரும்பப் போவதில்லை என்பதையும் தம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் மீண்டும் காணப்போவதில்லை என்பதையும் மேரியான் நன்றாகவே உணர்ந்தார். ஆனால், பிறரன்புப் பணிக்கான அழைத்தல் தம் சொந்த நலனைவிட வலுவானது என்பதை அறிந்த மேரியான், "புதிய பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்கிறேன்" என்று பதிலிறுத்தார். ஹவாயியின் தொழுநோயாளரைப் பராமரிப்பதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாக ஏற்று, அங்கேயே தங்கிப் பணியைத் தொடர்ந்தார்.[6]

மோலக்காய் தீவில் பணி

[தொகு]
ஹவாயி தொழுநோயளருக்குப் பணிபுரிந்து, தாமும் தொழுநோய் வாய்ப்பட்டு இறந்த மறைப்பணியாளர் தந்தை தமியான் என்பவரின் சடலத்தின் அருகே அன்னை மேரியான்
இறப்பதற்கு ஒருசில நாள்களுக்கு முன் அன்னை மேரியான். (சக்கர நாற்காலியில்).

மேரியான் ஹவாயியில் தொழுநோயாளர் நடுவே பணிபுரியச் செல்வதற்கும் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் (1873) பெல்சிய நாட்டைச் சேர்ந்த தமியான்[7] என்னும் மறைப்பணிக் குரு ஹவாயியில் தொழுநோயாளர் நடுவே பணியாற்றத் தொடங்கியிருந்தார். தொழுநோயாளரின் புண்களைக் கட்டி, அவர்களுக்கு வீடுகள் கட்டி எல்லா வகையிலும் ஒரு தந்தை போல அவர் பணியாற்றி வந்தார். இறுதியில் அவருக்கும் தொழுநோய் கண்டது. 1884 திசம்பர் மாதம் தமக்குத் தொழுநோய் வந்ததை அறிந்த தந்தை தமியான் தொடர்ந்து தம் பணியைச் செய்தார். அவரது பணி உலகெங்கும் தெரியவந்தது. தொழுநோயின் கடுமையால் அவர் இறக்கும் தறுவாயில் இருந்தபோது, நவம்பர் 1888இல் அவருக்குப் பராமரிப்பு அளிக்கவும் அவர் தொழுநோயாளருக்கு ஆற்றிய பணியைத் தொடரவும் மேரியான் கோப் மோலக்காய் தீவுக்குச் சென்றார்.

அதற்கு முன்னால், மேரியான் ஒவாகு நகரில் மருத்துவ மனை தொடங்கி, அம்மனையின் சிற்றாலய அர்ப்பணிப்பு விழா நடந்தபோது அங்கே தந்தை தமியானைச் சந்தித்திருந்தார். அப்போது தமியானுக்குத் தொழுநோய் தொற்றியிருக்கவில்லை.

பிறகு தொழுநோய் தொற்றிய தந்தை தமியானைச் சந்திப்பதை அரசு அதிகாரிகளும் திருச்சபை அதிகாரிகளும் தவிர்க்கத் தொடங்கினர். அந்நிலையில் அவருக்குப் பராமரிப்பு அளிக்க முன்வந்த ஒரே ஆள் அன்னை மேரியான் தான். அவரே தந்தை தமியானைச் சந்திக்கும்படி ஹவாயி மன்னர் மொலக்காய் தீவுக்கு வர ஏற்பாடு செய்தார்.

கூடுதல் பணி

[தொகு]

தொழுநோயாளரின் தந்தை என்று அன்புடன் அழைக்கப்பட்ட தமியான் தாமும் தொழுநோயால் பீடிக்கப்பட்டு 1889, ஏப்பிரல் 15ஆம் நாள் இறந்தார். உடனே, ஹவாயி அரசு அன்னை மேரியானை அணுகி, அவர் கலாவுபப்பா குடியேற்றத்தில் பெண் தொழுநோயாளரைப் பராமரிப்பதோடு, கூடுதல் பொறுப்பாக ஆண் குழந்தைத் தொழுநோயாளரையும் கவனிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

ஹென்றி பால்ட்வின்[8] என்னும் ஹவாயி செல்வர் ஒருவர் புதிய இல்லம் உருவாகத் தேவையான செலவுகளை ஏற்றார். அன்னை மேரியானும் வேறு இரு சகோதரிகளும் பெண்களுக்கு ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்தினார்கள். அப்பள்ளிக்குப் பால்ட்வினின் பெயர் இடப்பட்டது.

ஆண்களுக்கான பள்ளியை நடத்த ஆண் துறவியரின் சபை ஒன்று வந்தால் நல்லது என்று மேரியான் கருத்துத் தெரிவித்தார். அவ்வாறே, திரு இருதய சபை சகோதரர்கள் நான்குபேர் வந்து சேர்ந்தனர். அவர்கள் 1895இல் ஆண்கள் பள்ளியை நடத்தும் பொறுப்பை மேரியானிடமிருந்து பெற்றனர்.[9] அப்பள்ளியை நடத்தும்படி அரசு சகோதரர் சார்லஸ் டட்டன்[10] என்பவரைக் கேட்டுக்கொண்டது. இந்த டட்டன் ஓர் அமெரிக்கர். அவர் தந்தை தமியானுக்கு நெருங்கிய ஒத்துழைப்பாளராக இருந்தவர்.

ஆண் நோயாளரைக் கவனிக்கும் பொறுப்பைத் துறவற சகோதரர்களிடம் ஒப்படைத்த பிறகு மேரியானும் சகோதரிகளும் பெண் தொழுநோயாளரின் பராமரிப்பைத் தொடர்ந்தனர்.

மேரியான் கோப்: இறப்பும் அடக்கமும்

[தொகு]

ஹவாயி நாட்டில் ஒதுக்கப்பட்டு தனிக்குடியேற்றத்தில் அடைக்கப்பட்டு அவதியுற்ற தொழுநோயாளருக்குப் பணிபுரிய தம்மையே அர்ப்பணித்த அன்னை மேரியான் 1918, ஆகத்து 9ஆம் நாள் இயற்கைக் காரணங்களால் இறந்தார். கடவுளுக்குப் பணிபுரிவோர் கடவுளால் உருவாக்கப்பட்ட மக்களுக்கும், குறிப்பாக, கைவிடப்பட்டோருக்கும் பணிபுரிய வேண்டும் என்பதே மேரியானின் கொள்கையாய் இருந்தது.[11]

ஹவாயியின் கலாவுபப்பாவில் பெண் தொழுநோயாளருக்கான இல்லத்தில், அவர் பணிபுரிந்த இடத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார்.[12]

அன்னை மேரியானின் அடிச்சுவடுகளில்...

[தொகு]
  • 1927 — அன்னை மேரியானின் நினைவாக, ஹவாயியின் ஹொனலூலு நகரில் புனித பிரான்சிசு மருத்துவ மனை நிறுவப்பட்டது. தொழுநோயாளரைப் பராமரிக்க செவிலியரைப் பயிற்றுவிக்க அது உருவாக்கப்பட்டது.
  • 1957 — மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளைப் பராமரிக்க புனித பிரான்சிசு மருத்துவ மனையின் பகுதியாக "குழந்தைகள் வளர்ச்சிப் பிரிவு" உருவாக்கப்பட்டது.
  • 1962 — ஹவாயியின் மக்களுக்கு நலவாழ்வு வழங்குவதற்கு "புனித பிரான்சிசு வீட்டு நலப்பணி" உருவாக்கப்பட்டது.
  • 2006 — மேரியான் தொடங்கிய புனித பிரான்சிசு சபை சகோதரிகள் தாம் அதுவரை செய்துவந்த பணிகளைத் தொடரும் பொறுப்பைப் பிறரிடம் ஒப்படைத்துவிட்டு, நீண்ட காலப் பணிமுறைக்குத் தங்களை அர்ப்பணித்தார்கள். இவ்வாறு, ஹவாயி மருத்துவ மையங்கள் மேற்குக்கு ஒன்று கிழக்குக்கு ஒன்று என்று இரண்டு உருவாயின.[13]

மேற்கூறியவை தவிர, அன்னை மேரியான் பெயரைக் கவுரவிக்கும் வண்ணம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான பெண் குழந்தைகள் பயில்வதற்காக புனித பிரான்சிசு பள்ளி 1924இல் நிறுவப்பட்டது.[14]

மோலக்காய் தீவில் மேரியான் தொடங்கிய துறவியர் குழு இன்றுவரை அங்குள்ள சில தொழுநோயாளருக்குப் பணிபுரிகிறது. பிற பல சகோதரிகள் பள்ளிக் கூடங்களிலும் பங்குகளிலும் வெவ்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர்.

மேரியானுக்கு வணக்கம்

[தொகு]
ஹவாயியில் கலாவுபப்பா தொழுநோயாளர் மருத்துவ மனையில் மருந்துகளை எடைபார்க்க அன்னை மேரியானும் சகோதரிகளும் பயன்படுத்திய தராசு. காலம்: 1880களின் பிற்பகுதி

உரோமையில் அமைந்துள்ள புனிதர் பட்டமளிப்புக்கான பேராயம் அன்னை மேரியான் தலைசிறந்த நற்பண்புகள் கொண்டவராக வாழ்ந்தார் என்று 2003, அக்டோபர் 24ஆம் நாள் அறிவித்தது. தொடர்ந்து, 2004, ஏப்பிரல் 19ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் மேரியானை "வணக்கத்துக்குரியவர்" என்று அறிவித்தார்.

முத்திப்பேறு பெற்ற பட்டம்

[தொகு]

அன்னை மேரியானுக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்தன. 1993இல் காதரின் டேலியா மஹோனி என்னும் பெண்மணி உடலின் உள்ளுறுப்புகள் செயல் இழந்து நோய்வாய்ப்பட்டார். அவர் மேரியானை நோக்கி இறைவேண்டல் செய்ததன் பயனாகத் தம் நோயிலிருந்து அதிசயமாகக் குணம்பெற்றதாகச் சான்றுரைத்தார். அந்த நிகழ்ச்சியை ஆய்வுசெய்த உரோமை புனிதர் பட்டமளிப்புக்கான பேராயம் அந்த அதிய குணம்பெறு நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு புதுமைதான் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலும் இசைவு தந்தார்.

2005, மே 14ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மேரியானுக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கினார். புதிதாகத் திருத்தந்தை பதவியை ஏற்ற அவர் வழங்கிய முதல் முத்திப்பேறு பெற்ற பட்டம் இதுவே.

வத்திக்கானில் நிகழ்ந்த அந்த சடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் ஹவாயியிலிருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், மேரியானின் துறவற சபையிலிருந்து வந்த சுமார் முந்நூறு சகோதரிகள் அடங்குவர்.

முத்திப்பேறு பெற்ற சடங்குக்குத் தலைமை தாங்கியவர் கர்தினால் ஹோசே சரைவா மார்ட்டின்சு[15] என்பவர் ஆகும். அச்சடங்கின்போது, மேரியானுக்கு மிகவும் பிடித்தமான ஹவாயி கீதம் ஒன்று பாடப்பட்டது. அக்கீதத்தின் பெயர் "மக்கலாப்புவா" (Makalapua) என்பதாகும்.[16]

அன்னை மேரியானின் திருவிழா அவர் இறந்த நாளாகிய சனவரி 23ஆம் நாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்விழா தற்சமயம் மேரியானின் துறவற சபையாலும், ஹொனலூலு மற்றும் சீரக்யூஸ் மறைமாவட்டங்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேரியானின் உடலின் மீபொருள்கள் இடம் பெயர்த்தப்படல்

[தொகு]

விரைவில் மேரியான் முத்திப்பேறு பட்டம் பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்னும் செய்தி வெளியானதும், சனவரி 2005இல் அவரது உடலின் மீபொருள்கள் ஹவாயியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டு சீரக்யூசுக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கே, மேரியான் வாழ்ந்திருந்த தலைமை இல்லத்தில் ஒரு தற்காலிக வழிபாட்டு இடத்தில் அவை வைக்கப்பட்டன.

சிறப்பான ஒரு கல்லறை கட்டப்பட்டதும், மேரியானின் உடலின் மீபொருள்கள் தலைமை இல்லத்தின் சிற்றாலயத்தில், அவருடைய திருவிழாவான சனவரி 23ஆம் நாள் (2005) கொண்டு வைக்கப்பட்டன. அச்சிற்றாலயம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[17]

அன்னை மேரியானின் உருவச் சிலை. அர்ப்பண இடமும் நாளும்: ஹொனலூலு, சனவரி 23, 2010.

உருவச் சிலை எழுப்பப்படல்

[தொகு]

நியூயார்க் மாநிலத்தின் யூட்டிக்கா நகரில் இளமைப்பருவத்தில் மேரியான் சென்ற கோவிலாகிய புனித யோசேப்பு ஆலயத்தில் அவர் நினைவாக எழில்மிகு திருவுருவச் சிலை ஒன்று 2007இல் நிறுவப்பட்டது.[18]

புனிதர் பட்டமளிப்பு அறிவிக்கப்படல்

[தொகு]

மேரியானை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தியதால் இரண்டாவது புதுமையொன்று நிகழ்ந்ததாக 2011, திசம்பர் 6ஆம் நாளில் புனிதர் பட்டத்துக்கான பேராயம் அறிவித்தது. இந்த அறிக்கையை அப்பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ[19] என்பவர் திருத்தந்தை பதினாறம் பெனடிக்டின் ஒப்புதல் பெற அனுப்பிவைத்தார்.[20] திருத்தந்தையும் அதற்கு ஒப்புதல் அளித்து, முத்திப்பேறு பெற்ற மேரியான் கோப் 2012, அக்டோபர் 21ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவார் என்று 2012, பெப்ருவரி 18ஆம் நாள் அறிவித்தார்.[21]

மேரியான் கோப் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படல்

[தொகு]

2012, அக்டோபர் 21ஆம் நாள், அகில உலக மறைபரப்பு ஞாயிறன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் முத்திப்பேறு பெற்ற மேரியான் கோப் என்னும் துறவிக்குப் புனிதர் பட்டம் அளித்து சிறப்பித்தார். அவ்விழா உரோமை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் தலைமையில் நிகழ்ந்தது.[22]

அந்நாளில் கீழ்வரும் எழுவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது:

  • மேரியான் கோப் (ஹவாயி இராச்சியத்தில் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்த பிரான்சிஸ்கு சபைப் பெண்துறவி)
  • கத்தேரி தேக்கக்விதா (அமெரிக்க முதற்குடி மக்களீடமிருந்து வரும் முதல் புனிதர்
  • பேத்ரோ கலூங்சோத் (17ஆம் வயதில் கிறித்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட பிலிப்பீனோ மறைச்சாட்சி)
  • ஜாக் பெர்த்யூ (மடகாஸ்காரில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக உயிர்துறந்த இயேசு சபைத் துறவி - 19ஆம் நூற்றாண்டு)
  • கார்மென் சால்லெஸ் இ பராங்குவேராஸ் (எசுப்பானிய நாட்டுப் பெண் துறவி; குழந்தைகளுக்குக் கல்வியறிவு அளிக்க ஒரு துறவற சபையை 1892இல் நிறுவியவர்)
  • ஜொவான்னி பட்தீஸ்தா பீயாமார்த்தா - 1900இல் ஒரு துறவற சபையை நிறுவிய இவர் இத்தாலியின் பிரேஷியாவில் கத்தோலிக்க அச்சகத்தையும் வெளியீட்டு நிறுவனத்தையும் ஏற்படுத்தினார்)
  • அன்னா ஷேஃபர் (19ஆம் நூற்றாண்டு செருமானியப் பொதுநிலைப் பெண்மணி. இவர் கொதிகலத்தில் விழுந்ததால் ஏற்பட்ட புண்கள் காரணமாக வாழ்நாள் முழுதும் துன்புற்றவர். நோய்நொடிகளால் துன்புறுவோருக்கு நம்பிக்கையளிக்கும் ஒருவர்)

புனிதர் பட்ட நிகழ்ச்சியின் சிறப்புக் கூறுகள்

[தொகு]
  • 2012, அக்டோபர் 21ஆம் நாள் நிகழ்ந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேலானோர் கலந்துகொண்டனர்.
  • அதிகாலையில் கதிரவன் எழும் வேளையில் அமெரிக்க முதற்குடி மக்கள் கத்தேரி தேக்கக்விதாவுக்கு புகழ்பாடி, மேள தாளங்களுடன் நடனமாடிக் கொண்டாடினர். அவர்கள் தம் கலாச்சார வழக்கப்படி தலையில் பவளங்கள் கோத்த இறகுகளால் புனையப்பட்ட தலைச்சீரா அணிந்திருந்தனர். ஓரங்களில் வார்களால் அலங்கரிக்கப்பட்ட மேலாடை புனைந்திருந்தனர்.
  • புனிதர் பட்டமளிப்பு விழாவின்போது ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை பெனடிக்ட் கீழ்வருமாறு கூறினார்:

இப்புனிதர்கள் நமக்குக் காட்டியுள்ள சான்றுவாழ்வு இன்றைய திருச்சபை முழுவதற்கும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களது வேண்டுதலால் திருச்சபை தனது மறையறிவிப்புப் பணியில் மேலும் அதிக ஆர்வத்தோடு ஈடுபடவேண்டும்...மேரியான் கோப் தலைசிறந்த அன்பு, துணிவு, ஆர்வம் ஆகியவற்றைத் தம் வாழ்வில் காட்டினார். அவர் தொழுநோயாளருக்குப் பணிபுரிந்த நாள்களில் அக்கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டில் சமுதாயம் அதிக கரிசனம் கொண்டிருக்கவில்லை. நோயாளருக்குப் பணிபுரிகின்ற மருத்துவ சகோதரிகளின் தலையாய பண்புக்கு மேரியான் கோப் ஒளிர்மிகு எடுத்துக்காட்டாக உள்ளார். புனித பிரான்சிசு அசிசியின் அடிச்சுவட்டில் நடந்த அவர் கத்தோலிக்க சபையின் பிறரன்புப் பணி மரபுக்கும் சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறார்.

  • மேரியான் கோப் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஹவாயியிலிருந்து 250 திருப்பயணிகள் உரோமைக்கு வந்திருந்தனர். அவர்களுள் ஹவாயியின் கலாவுபப்பா தொழுநோயாளர் குடியிருப்பிலிருந்து வந்த ஒன்பது பேரும் அடங்குவர். பலர் ஹவாயி மறைமாவட்டத்திலிருந்து வந்தனர்.
  • நியூயார்க் மாநிலத்தின் சீரக்யூஸ் நகரிலிருந்து வந்து மேரியான் கோப்பின் புனிதர் பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட் ஷேரன் ஸ்மித் என்னும் பெண்மணி, தாம் மேரியான் கோப்பை நோக்கி வேண்டுதல் நிகழ்த்தியதன் பயனாக கொடிய கல்லீரல் நோயிலிருந்து குணம்பெற்றதாகக் கூறினார். இயற்கை சக்திகளுக்கு அப்பாற்பட்டு இந்த குணம்பெறல் நிகழ்ந்ததாக திருச்சபை அதிகாரிகள் கூறியுள்ளனர். "புதுமைகள் நிகழ்கின்றன என்று நான் நம்புகிறேன். மேரியான் கோப் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவரிடம் வேண்டுதல் செய்யவும் அவருடைய மீபொருள்களை எனது வயிற்றுப்பகுதியில் வைக்கவும் நான் இசைந்தேன். மருத்துவர்களே வியப்புறும் வண்ணம் எனக்குக் குணம் கிடைத்துள்ளது. ஆகவே இங்கு நான் வந்தேன்" என்று ஷேரன் கூறினார்.
  • மேரியான் கோப்பின் துறவற சபையைச் சார்ந்த பல சகோதரிகளும் புனிதர் பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சீரக்யூசிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் வந்திருந்தன. அவர்கள் தலையில் வெண்ணிற முக்காடு அணிந்திருந்தனர். அதில் "புனித பிரான்சிசு அசிசியின் சகோதரிகள். ஒதுக்கப்பட்ட மக்களுக்குப் பணிபுரிவோர்" என்று எழுதப்பட்டிருந்தது.

கத்தோலிக்கரும் பிற கிறித்தவரும் வணக்கம் செலுத்துதல்

[தொகு]

முத்திப்பேறு பெற்ற மேரியான் கோப் என்னும் புனித பெண்மணிக்கு வணக்கம் செலுத்துவோர் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்ல. தொழுநோயாளரின் நல்வாழ்வுக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்த பெருமக்களாகிய புனித தமியான் மற்றும் மேரியான் ஆகிய இருவருக்கும் அமெரிக்க எப்பிஸ்கோப்பல் சபையும் வணக்கம் செலுத்துகிறது. அவ்விரு புனிதர்களின் பொதுத் திருவிழா அச்சபையால் ஏப்பிரல் 15ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. Pope Benedict XVI (May 14, 2005). "Apostolic Letter by which the Supreme Pontiff has raised to the glory of the altars the Servants of God: Ascensión Nicol Goñi and Marianne Cope". The Holy See. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19. (Latin)
  2. Krista J. Karch (May 11, 2005). "The road to sainthood: Mother Marianne worked years in Utica mills before joining convent". The Utica Observer-Dispatch. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_action=print&p_docid=10A0E140E714CD0E. பார்த்த நாள்: 2010-03-19. 
  3. "Official website of the Blessed Marianne Cope Cause for Canonization". Archived from the original on 2013-04-06. பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.
  4. "Biography - Marianne Cope (1838-1918)". Official Vatican web site. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
  5. Mary Laurence Hanley; O. A. Bushnell (January 1992). Pilgrimage and Exile: Mother Marianne of Molokai. University of Hawaii Press. pp. 225–226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-1387-1.
  6. "Blessed Marianne Cope Cause website". Archived from the original on 2013-04-06. பார்க்கப்பட்ட நாள் 2012-10-09.
  7. தொழுநோயாளரின் தந்தை புனித தமியான்
  8. ஹென்றி பால்ட்வின்
  9. website of the Damien Memorial School
  10. சார்லஸ் டட்டன்
  11. "கடவுள் பணி - மக்கள் பணி". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2012-10-11.
  12. "Mother Marianne Cope and the Sisters of St. Francis". Kalaupapa National Historic Park web site. National Park Service. Archived from the original on 2010-03-03. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
  13. "Historical Timeline: A Legacy of Firsts in the Islands". web site. St. Francis Healthcare System of Hawaii. Archived from the original on 2010-05-02. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
  14. "About Us: Welcome to Saint Francis School!". web site. Saint Francis School. Archived from the original on 2010-03-24. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
  15. கர்தினால் சரைவா மார்ட்டின்சு
  16. Mary Adamski (மே 5, 2005). "‘Blessed’ Mother Cope: The Kalaupapa nun reaches the second step to sainthood". Honolulu Star-Bulletin. http://archives.starbulletin.com/2005/05/15/news/story3.html. பார்த்த நாள்: 2010-03-19. 
  17. "Shrine of Blessed Marianne Cope". Archived from the original on 2009-11-14. பார்க்கப்பட்ட நாள் 2012-10-11.
  18. Jessica Doyle (October 3, 2007). "Shrine to Mother Marianne honors life of serving poor". The Utica Observer-Dispatch. http://www.uticaod.com/news/x680962708. பார்த்த நாள்: 2010-03-19. 
  19. கர்தினால் ஆன்செலோ அமாத்தோ
  20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-04-26. பார்க்கப்பட்ட நாள் 2012-10-11.
  21. EWTN Televised Broadcast: Public Consistory for the Creation of New Cardinals. Rome, February 18, 2012. Saint Peter's Basilica. Closing remarks before recession preceded by Cardinal Agostino Vallini.
  22. புனிதர் பட்டமளிப்பு நிகழ்ச்சி


மேலும் காண்க

[தொகு]

மேல் ஆய்வுக்கு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரியான்_கோப்&oldid=3575774" இலிருந்து மீள்விக்கப்பட்டது