மெய்ம்மயக்கம்
மெய்ம்மயக்கம் அல்லது மெய் மயக்கம் அல்லது தமிழில் மெய்யொலிக் கூட்டம் என்பது தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல்லில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவதைக் குறிக்கும். இரண்டு மெய்கள் இணைந்து வருவதே பெரும்பான்மை. அரிதாக மூன்று மெய்கள் இணைந்து வருவதும் உண்டு. இரு மெய்கள் இணைந்து வருவது 'மெய்ம் மயக்கம்' என்றும் மூன்று மெய்கள் இணைந்து வருவதை 'ஈரொற்று மயக்கம்' என்றும் கூறுவர்.[1]. பக்கம் என்ற சொல்லில் க்க் (க்க = க் + க் + அ) என இரண்டு மெய்கள் இணைந்து வருகின்றன. இது போலவே, அச்சம், கற்கள் போன்ற சொற்களிலும் முறையே ச்ச், ற்க் ஆகிய மெய்ம் மயக்கங்களைக் காணலாம். சொற்களில் வருவது அரிதானதும் தெளிவாக வரையறுக்கக் கூடியதும் ஆகும். இத்தகைய வரையறைகளின் இயல்பு மொழிவதற்கு எளிதான கூட்டொற்றுகளை மட்டும் ஏற்கும் வகையில் உள்ளது. தமிழ் மெய்யொலிகளின் இந்த இயல்பு தொல்காப்பியத்தில் ஆய்ந்து சொல்லப்பட்டுள்ளது. ஒரே மெய்யெழுத்து இரட்டித்து வருதலை 'உடனிலை மெய்ம்மயக்கம்' என்றும் இருவேறு மெய்கள் தொடர்ந்து வருவதை 'வேற்றுநிலை மெய்ம்மயக்கம்' என்றும் குறித்துள்ளனர்.[2] தமிழ் மரபுப்படி மெய்ம் மயக்கங்கள் சொற்களின் இடையில் மட்டுமே வருகின்றன. எனினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை அவற்றின் ஒலிப்பு மாறாமல் தமிழில் எழுத முயல்வோர் மெய்ம் மயக்கங்களைச் சொல் முதலிலும் இறுதியிலும் கூட வரும்படி எழுதுகின்றனர். எடுத்துக்காட்டாக ப்ரசாதம், க்ரைம் போன்ற சொற்களில் முதலிலும், பாங்க், சிமென்ட் போன்ற சொற்களில் கடைசியிலும் மெய்ம் மயக்கங்கள் வரும்படி எழுதுவதைக் காண முடியும். இது தமிழ் மரபுக்கு ஏற்புடையது அன்று.
வகைகள்
[தொகு]இணையும் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு மெய்ம் மயக்கங்கள் பின்வருமாறு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன[3].
- உடனிலை மெய்ம் மயக்கம்
- வேற்று நிலை மெய்ம் மயக்கம்
இவற்றுள் உடனிலை மெய்ம் மயக்கம் ஒரே மெய்யெழுத்து மயங்குவதையும், வேற்று நிலை மெய்ம் மயக்கம் இருவேறு மெய்கள் ஒன்றுடன் ஒன்று மயங்குவதையும் குறிக்கின்றன. முன்னர்த் தரப்பட்ட எடுத்துக்காட்டுகளில் பக்கம், அச்சம் என்னும் சொற்களில் உடனிலை மெய்ம் மயக்கமும், கற்கள் என்னும் சொல்லில் வேற்று நிலை மெய்ம் மயக்கமும் வருவதைக் காணலாம். பொதுவாகத் தமிழில் உள்ள எல்லா மெய் எழுத்துகளுமே மெய்ம் மயக்கங்களில் வருவது உண்டு. எனினும், எல்லா மெய்களும், பிற எல்லா மெய்களுடனும் மயங்குவதில்லை. இவற்றுக்கு வரையறைகள் உள்ளன.
உடனிலை மெய்ம் மயக்கம்
[தொகு]ய, ர, ழ என்னும் மூன்றும் முன் ஒற்றக்
க, ச, த, ப, ங, ஞ, ந, ம, ஈரொற்று ஆகும்[4]
ர், ழ் ஆகிய இரண்டு எழுத்துகள் தவிர்ந்த ஏனைய 16 மெய்களுமே உடனிலையாக அதாவது தம்முடன் தாமே மயங்குகின்றன. ஒவ்வொரு எழுத்துக்குமான எடுத்துக்காட்டுகள் வருமாறு[5]:
- க் - அக்கு
- ங் - அங்ஙனம்
- ச் - அச்சு
- ஞ் - அஞ்ஞான்று
- ட் - அட்டு
- ண் - அண்ணம்
- த் - அத்து
- ந் - அந்து
- ப் - அப்பு
- ம் - அம்மா
- ய் - அய்யம்
- ர் - --- (இல்லை)
- ல் - அல்லி
- வ் - அவ்வை, கவ்வு
- ழ் - --- (இல்லை)
- ள் - அள்ளல்
- ற் - அற்றம்
- ன் - அன்னை
ய, ர, ழ என்னும் எழுத்துக்களில் ஒன்று ஒற்றாக வந்து. அதனை அடுத்து க, ச, த, ப, ங, ஞ, ந, ம என்னும் எழுத்துக்களில் ஒன்று ஒற்றாக வந்து இரண்டொற்றாய் நிற்கக் கூடும். (எ.கா.)
முன்\பின் | க் | ச் | த் | ப் | ங் | ஞ் | ந் | ம் |
---|---|---|---|---|---|---|---|---|
ய் | உய்க்க | பாய்ச்சி | காய்த்தல் | வாய்ப்பு | காய்ங்கனி | தேய்ஞ்சது | காய்ந்த | மெய்ம்மயக்கம் |
ர் | பீர்க்கு | தேர்ச்சி | பார்த்தல் | கூர்ப்பு | நேர்ங்கல் | நேர்ஞ்சிலை | சேர்ந்திசை | நேர்ம்புறம் |
ழ் | வாழ்க்கை | தாழ்ச்சி | தாழ்த்தல் | காழ்ப்பு | தாழ்ங்குலை | தாழ்ஞ்சிலை | தாழ்ந்திரன் | வீழ்ம்படை |
அவற்றுள்
ரகார ழகாரம் குற்றொற்று ஆகா.[6]
மேற்கண்டவற்றில் ர, ழ என்பன குற்றெழுத்தை அடுத்து ஒற்றாக வாரா என்கிறது தொல்காப்பியம். உரு, எரு என்பனப் போல உயிர்மெய்யாக வரும் அல்லது தாழ் என்பது போல நெடிலை அடுத்து ஒற்றாய் வரும்.
வேற்றுநிலை மெய்ம் மயக்கம்
[தொகு]வேற்றுநிலை மெய்ம் மயக்கம் தொடர்பாக இன்ன எழுத்துக்கள் இன்ன இன்ன எழுத்துக்களுடன் மயங்கும் போன்ற விவரங்கள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. அவற்றைக் கீழே காணலாம். இவற்றுட் சில தற்காலத்தில் வழக்கொழிந்து விட்டன.
- க், ச். த், ப் என்னும் மெய்களைத் தொடர்ந்து வேறு மெய்கள் வந்து மயங்குவதில்லை.
- ங் முன்னிலையில் ககர மெய் மயங்கும்.
- வ் முன்னிலையில் யகர மெய் மயங்கும்.
- ஞ் முன்னிலையில் சகர, யகர மெய்கள் மயங்கும்.
- ந் முன்னிலையில் தகர, யகர மெய்கள் மயங்கும்.
- ட், ற் என்பன முன்னிலையில் ககர, சகர, பகர மெய்கள் மயங்கும்.
- ண் முன்னிலையில் டகர, ககர, சகர, ஞகர, பகர, மகர, யகர, வகர மெய்கள் மயங்கும்.
- ன் முன்னிலையில் றகர, ககர, சகர, ஞகர, பகர, மகர, யகர, வகர மெய்கள் மயங்கும்.
- ம் முன்னிலையில் பகர, யகர, வகர மெய்கள் மயங்கும்.
- ய், ர், ழ் என்பன முன்னிலையில் ககர, சகர, தகர, பகர, நகர, மகர, ஞகர, யகர, வகர, ஙகர மெய்கள் மயங்கும்.
- ல், ள் என்பன முன்னிலையில் ககர, சகர, பகர, வகர, யகர மெய்கள் மயங்கும்.
ங்
[தொகு]‘ங்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின், ‘க்‘ என்னும் மெய் எழுத்து மட்டுமே வரும் பிற மெய் எழுத்துகள் வருவது இல்லை.
எடுத்துக்காட்டு: தங்கம் வங்காளம் அங்கி (நெருப்பு, சட்டை) அங்கு அங்கூடம் (அழகிய கூடம்)்அங்கே அங்கை (உள்ளங்கை) எங்கோமான்
ஞ்
[தொகு]‘ஞ்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ச், ய் ஆகிய மெய்எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு: கஞ்சம் (தாமரை) அஞ்சாமை அஞ்சி அஞ்சீறடி (அழகிய சிறிய பாதம்) கஞ்சுகம் (சட்டை) உரிஞ்(தேய்) யாது
ட்
[தொகு]‘ட்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகியமெய் எழுத்துகள் வரும்
எடுத்துக்காட்டு:
- வெட்கம்,
- வெட்சி (ஒரு பூ)
- மாட்சி (பெருமை)
- நட்பு
- நுட்பம்
‘ண்‘
[தொகு]‘ண்‘ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ண், க், ச், ஞ், ட், ப், ம்,ய், வ் ஆகிய எட்டு மெய் எழுத்துகளும் வரும்.
எடுத்துக்காட்டு:
- வண்ணம் -ண்
- வெண்கலம்
- கண்காட்சி்
- வெண்சோறு
- மண்சேறு
- வெண்ஞமலி்
- உண்ஞமலி (உண்கின்ற நாய்)
- மண்டலம்
- வண்டல்
- நண்பகல்
- நண்பன்
- வெண்மலர்
- உண்மை
- மண்யாது - ய்
- மண்வலிது, வெண்விசும்பு - வ்
‘ந்‘
[தொகு]‘ந்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் த், ய் என்னும் மெய்எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
- வந்த
- வந்தான்
- வெரிந்யாது -ய்
‘ம்‘
[தொகு]எடுத்துக்காட்டு:
‘ம்‘ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ப், ய், வ் ஆகியமெய் எழுத்துகள் வரும்.
- கம்பன்
- அம்பு
- கலம்யாது
- புலம்யாது
- கலம்வலிது
- வலம்வரும்
‘ய்‘
[தொகு]‘ய்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
- பொய்கை (நீர்நிலை)
- மொய்குழல் (அடர்ந்த கூந்தல்)
- வேய்சிறிது
- காய்சினம்
- வேய்ஞான்ற - ஞ் (மூங்கில் முதிர்ந்தது)
- நெய்தல்
- நொய்து (மெல்லியது)
- மெய்நீண்டது - ந்
- மெய்பெரிது - ப்
- பேய்மனம் - ம்
- பேய்வலிது - வ்
‘ர்‘
[தொகு]‘ர்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
- வேர்கள் - க்
- வேர்சிறியது - ச்
- வேர்ஞான்றது - ஞ்
- தேர்தல் - த்
- நீர்நிலை - ந்
- மார்பு - ப்
- கூர்மை - ம்
- வியர்வை - வ்
‘ல்‘
[தொகு]‘ல்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ்என்னும் மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
- கால்கோள் (தொடக்கம்) - க்
- வல்சி (உணவு) - ச்
- கல்பாக்கம் - ப்
- நல்யாறு - ய்
- பல்வலி - வ்
‘வ்‘
[தொகு]‘வ்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ய்‘ என்னும் மெய்எழுத்து மட்டும் வரும்.
எடுத்துக்காட்டு : தெவ்யாது (தெவ் - பகை)
‘ழ்‘
[தொகு]‘ழ்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ஞ், த், ந், ப்,ம், வ் ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
- ழூழ்கினான் - க்
- பாழ்செய் (பாழ்படுத்து) - ச்
- வீழ்ஞான்ற (தொங்கிய விழுது) - ஞ்
- ஆழ்தல் - த்
- வாழ்நாள் - ந்
- வாழ்பவன் - ப்
- வாழ்மனை - ம்
- வாழ்வு - வ்
‘ள்‘
[தொகு]‘ள்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப், ய், வ்ஆகிய மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
- கொள்கலம் - க்
- வாள்சிறிது - ச்
- வாள் பெரிது - ப்
- வாள்யாது - ய்
- கள்வன் - வ்
‘ற்‘
[தொகு]‘ற்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் க், ச், ப் ஆகியமெய்எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
- கற்க - க்
- கற்சிலை - ச்
- கற்பவை - ப்
‘ன்‘
[தொகு]‘ன்‘ என்னும் மெய்எழுத்துக்குப் பின் ன், க், ச், ஞ், ப், ம், ய்,வ், ற் என்னும் மெய் எழுத்துகள் வரும்.
எடுத்துக்காட்டு:
- முன்னிலை - ன்
- பொன்கலம் - க்
- புன்செய் - ச்
- புன்ஞமலி - ஞ்
- புன்பயிர் - ப்
- நன்மை - ம்
- பொன்யாது - ய்
- பொன்வலிது - வ்
- தென்றல் - ற்
ஈர் ஒற்று மயக்கம்
[தொகு]ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து வேறொரு மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்துடன் வராமல் தனி மெய் எழுத்தாகவும் வருவது உண்டு. அவ்வாறு இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருவதை ஈர் ஒற்று மயக்கம் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டு: புகழ்ச்சி இதில் ‘ழ்‘ என்னும் மெய் எழுத்துக்குப் பின் ‘ச்‘ என்றமெய் எழுத்து வந்துள்ளது. இந்த ‘ச்‘ என்னும் எழுத்து உயிர்மெய்யுடன் சேர்ந்து வராமல் தனி மெய் எழுத்தாகவே வந்துள்ளது.
ஈர் ஒற்று மயக்கம் வரும் இடங்கள்:
ய், ர், ழ் என்னும் மூன்று மெய் எழுத்துகளை அடுத்து, க், ங், ச், ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய் எழுத்துகள் ஈர்ஒற்றுகளாகச் சேர்ந்து வரும்.
‘ய்‘ என்னும் எழுத்துடன் ஈர் ஒற்று வருதல்
[தொகு]- நாய்க்கால் - க்
- வேய்ங்குழல் - ங்
- காய்ச்சல் - ச்
- மெய்ஞ்ஞானம் - ஞ்
- மேய்த்தல் - த்
- பாய்ந்தது - ந்
- வாய்ப்பு - ப்
- செய்ம்மன (செய்யுளில் மட்டுமே வரும்)
‘ர்‘ என்னும் எழுத்துடன் ஈர் ஒற்று வருதல்
[தொகு]- பார்க்கிறாள்- க்
- ஆர்ங்கோடு- (ஆத்திமரக்கிளை) - ங்
- உயர்ச்சி- ச்
- ஞ்- வழக்கத்தில் இல்லை.
- பார்த்தல்- த்
- ஊர்ந்து- ந்
- தீர்ப்பு- ப்
- ம்- வழக்கத்தில் இல்லை.
‘ழ்‘ என்னும் எழுத்துடன் ஈர் ஒற்று வருதல்
[தொகு]- வாழ்க்கை- க்
- பாழ்ங்கிணறு- ங்
- வீழ்ச்சி- ச்
- ஞ்- வழக்கத்தில் இல்லை
- வாழ்த்து- த்
- வாழ்ந்து- ந்
- தாழ்ப்பாள்- ப்
- ம்- வழக்கத்தில் இல்லை.
செய்யுளில்
[தொகு]செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும் (தொல். 51)
பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது ஒரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.
குறிப்புகள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- அகத்தியலிங்கம், ச., தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2002.
- பவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை, 2004.
- மாணிக்கவாசகன், ஞா. (மார்ச்சு 2006). தொல்காப்பியம் - மூலமும் விளக்க உரையும். சென்னை: உமா பதிப்பகம். pp. 31–32.