சோலைமலை இளவரசி
சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களில் பயணிக்கின்றது. அப்பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் குறிப்பிடுகின்றது.
கதைச்சுருக்கம்
[தொகு]விடுதலை போராட்ட வீரரான குமாரலிங்கம் ஆங்கில அரசால் தேடப்படுகிறான். அவர்களுக்கு பயந்து அவன் சோலைமலையில் உள்ள ஒரு பாழடைந்த அரண்மனையில் தங்குகின்றான். அங்கு இருக்கும் சமயம் அவன் கனவில் தன்னை 300 வருடங்களுக்கு முந்தைய மாறனேந்தல் இளவரசன் உலகநாத தேவனாக உணர்கின்றான். அங்கு மேலும் கதை 300 வருடங்களுக்கு முன்னால் பயணிக்கிறது. அப்பிறவியில் அவனது அரசிற்கும் வெள்ளையர்களுக்கும் நடந்த போரில் தோற்று அவர்களுடைய எதிரி நாடான சோலைமலையின் அரண்மனையினுள் ஒளிந்திருக்கின்றான். சோலைமலை இளவரசி மாணிக்கவல்லி யாருக்கும் தெரியாமல் அவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றாள். அவன் மீது காதலும் கொள்கிறாள். ஆயினும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் அவன் கைது செய்யப்பட்டு கொல்லப்படுகிறான். அதே சமயம் இளவரசியும் தனது உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.
அவனுக்கு நினைவு தெரிந்த பின்னர் கனவில் கண்ட அதே இளவரசியை போன்ற தோற்றம் உடைய பொன்னம்மாள் என்ற பெண்ணை சந்திக்கின்றான். அவளிடம் அவன் கண்ட கனவுகளை அவளிடமும் பகிர்ந்து கொள்கிறான். அவளும் அவனுக்கு உணவளித்து அவன் மறைந்து கொள்ள உதவுகிறாள். ஆயினும் ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் அவன் கைது செய்யப்படுகின்றான். 8 மாதம் சிறையில் இருந்த பின் அவன் அங்கிருந்து தப்பித்து பொன்னம்மாளை சந்திக்க வருகின்றான். அங்கு குமாரலிங்கத்தைப் பிரிந்த அவள் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னை சோலைமலை இளவரசியாகவே நினைத்து கொள்கிறாள். இதனால் மனமுடைந்த குமாரலிங்கம் சாமியாராக மாறுகின்றான். அத்துடன் இக்கதை முடிவடைகின்றது.
அத்தியாயங்கள்
[தொகு]- நள்ளிரவு ரயில்வண்டி
- சின்னஞ்சிறு நட்சத்திரம்
- சேவல் கூவிற்று
- வன்மம் வளர்ந்தது
- அந்தப்புர அடைக்கலம்
- 'மாலை வருகிறேன்'
- மணியக்காரர் மகள்
- கண்ணீர் கலந்தது
- வெறி முற்றியது
- ஆண்டவன் சித்தம்
- அரண்மனைச் சிறை
- அப்பாவின் கோபம்
- உல்லாச வாழ்க்கை
- ஆனந்த சுதந்திரம்
- கைமேலே பலன்
- கயிறு தொங்கிற்று
- இரும்பு இளகிற்று
- உலகம் சுழன்றது
- விடுதலை வந்தது
- கதை முடிந்தது
கதைமாந்தர்கள்
[தொகு]- குமாரலிங்கம் (தேசத் தொண்டன்)
- உலகநாத தேவன் (மாறனேந்தல் இளவரசன்)
- பொன்னம்மாள் (கிராமத்து பெண்)
- மாணிக்கவல்லி (சோலைமலை இளவரசி)
- மணியக்காரர் (பொன்னம்மாளின் தந்தை)
- சோலைமலை மகாராஜா