உள்ளடக்கத்துக்குச் செல்

சைமன் கிரகரி பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண. சைமன் கிரகரி பெரேரா (Rev. Fr. S. G. Perera, சூன் 5, 1882 - பெப்ரவரி 19, 1950) யேசு சபையைச் சேர்ந்த கத்தோலிக்க மதகுருவும், வரலாற்றாளரும் ஆவார். இலங்கையரான இவர், பொதுவாக இலங்கை வரலாற்றை எழுதுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். எனினும், போர்த்துக்கேயர் கால இலங்கை வரலாற்றிலும், இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபை வரலாற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். உள்ளூர் மொழிகளில் எழுதப்பட்ட ஆவணங்களை வாசித்தறிவதில் அவருக்கு இருந்த இடர்ப்பாடுகள் காரணமாக போர்த்துக்கேயருக்கு முந்திய கால வரலாற்றில் இவரது திறமை அவ்வளவு வெளிப்படவில்லை.[1] இவர் இலங்கை வரலாறு குறித்த பல நூல்களை எழுதியுள்ளதுடன், 17 ஆம் நூற்றாண்டில் குவைரோசு எழுதிய த டெம்பொரல் அன்ட் ஸ்பிரிச்சுவல் கொன்குவெஸ்ட் ஒஃப் சிலோன் என்னும் பெரிய நூலைப் போர்த்துக்கேய மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்.

வரலாறு

[தொகு]

சைமன் கிரகரி பெரேரா, 1882 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் தேதி இலங்கையிலுள்ள களுத்துறையில் பிறந்தார். தொடக்கக் கல்வியைத தனது சொந்த ஊரில் இருந்த புனித சிலுவைக் கல்லூரியில் பெற்ற அவர், பின்னர் கொழும்பு புனித யோசேப் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு வெஸ்லிக் கல்லூரியிலும் தனது கல்வியைத் தொடர்ந்தார். 18 ஆவது வயதில் அரச எழுது வினைஞர் தேர்வில் வெற்றி பெற்ற பெரேரா காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பணியில் அமர்ந்தார். 1905 ஆம் ஆண்டில் யேசு சபையில் இணைந்து இந்தியாவுக்குச் சென்றார். அங்கே யேசு சபை உறுப்பினருக்கான கடுமையான பயிற்சியைப் பெற்ற அவர் 1911ல் இலங்கைக்குத் திரும்பி காலி, புனித அலோசியசு கல்லூரியில் கற்பித்தலில் ஈடுபடலானார். 1914ல் மதக் கல்வியைத் தொடர்வதற்காக மீண்டும் இந்தியாவுக்குச் சென்றார். 1917 ஆம் ஆண்டில் அவர் குருவானவராக நிலைப்படுத்தப்பட்டார்.[2]

இலங்கையின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட பெரேரா யேசு சபை மூலம் தனக்கிருந்த தொடர்புகளைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கையின் வரலாற்றுத் துறையில் சிறப்பான பணிகளை இவர் ஆற்றியுள்ளார். இவர் 1950ம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் தேதி காலமானார்.[2]

பணிகள்

[தொகு]

பெரேராவின் இலங்கை வரலாறு தொடர்பான செயற்பாடுகள் 1915ல் தொடங்கின. இந்தியாவில் இருந்த பிற யேசு சபை வரலாற்றாளர்களின் உதவியுடன், இலங்கை வரலாறு தொடர்பான வெளியிடப்படாத ஆவணங்களின் படப்படிகளைப் பெற்று இலங்கையில் யேசு சபை ஆவணக் காப்பகத்தில் வைத்தார். அத்துடன், யேசு சபையினரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட வரலாற்று நூல்கள் பலவற்றில் இருந்த இலங்கை தொடர்பான பகுதிகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அரசின் வேண்டுகோளுக்கு இணங்க குவெய்ரோசு போர்த்துக்கேய மொழியில் எழுதிய இலங்கை வரலாறு தொடர்பான நூலை, த டெம்பொரல் அன்ட் ஸ்பிரிச்சுவல் கொன்குவெஸ்ட் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.[3] இது 1930ல் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. அத்துடன், கண்டி இராச்சியத்துக்கும், போர்த்துக்கேயருக்கும் இடையில் இடம்பெற்ற போர்கள் தொடர்பான இரண்டு ஆவணங்களை இலங்கை அரசுக்காக, லிசுபனில் இருந்து பெற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.[4]

இவற்றை விட 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளைச் செய்தித்தாள்களிலும், ஆய்விதழ்களிலும் வெளியிட்டதோடு, அறிஞர் அவைகளிலும் சமர்ப்பித்துள்ளார். இவற்றுள், கண்டி இராச்சியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் (The Rise and Fall of Kandian Kingdom), பழைய வரலாற்றில் களுத்துறை (Kalutara in Early History), கொழும்பு நகரம் 1502-1656 (Colombo City 1501-1656), கான்ஸ்டன்டைன் டி சாவின் வழித்தடம் (The Rout of Constantine De sa), போர்த்துக்கேயத் தோம்புகள் (The Portuguese Tombos), இலங்கையின் வரலாறு (History of Ceylon) என்பவை குறிப்பிடத்தக்கவை.[5]

குறிப்புகள்

[தொகு]
  1. Peiris, Edmund., [Rev. Fr. S. G. Perera, S.J. His Contribution to Ceylon History], University of Ceylon Review vol. ix, 1951 Jan No. 1,pp 51-60
  2. 2.0 2.1 Peiris, Edmund., 1951, p 51.
  3. Peiris, Edmund., 1951, pp 52-54.
  4. Peiris, Edmund., 1951, p 54.
  5. Peiris, Edmund., 1951, pp 55, 56.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_கிரகரி_பெரேரா&oldid=4176915" இலிருந்து மீள்விக்கப்பட்டது