உள்ளடக்கத்துக்குச் செல்

நாளிதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செய்தித்தாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நாளிதழ் வாசிப்பு

நாளிதழ் என்பது ஒவ்வொரு நாளும் அச்சிட்டு வெளியிடப்படும் செய்தி இதழ் ஆகும். தற்காலத்தில் செய்தியல்லாத பிறவற்றையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு நாளிதழ்கள் வெளியிடப்படுகின்றன ஆயினும், மிகப் பெரும்பாலான நாளிதழ்கள் செய்தி இதழ்களாகவே உள்ளன. எனவே இதை செய்தித்தாள்கள் (News Papers) என்றும், நாள்தோறும் வெளியிடப்படுவதால் தினசரிகள் (Dailies) என்றும் அழைப்பதுண்டு.

வரலாறு

[தொகு]

கி.பி.1476 இல் இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தார். கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப முனைந்த மேலை நாட்டினர் இந்தியாவில் அதை கி.பி. 1550-இல் அறிமுகம் செய்து வைத்தனர். அதன்பின், 1622 ஆம் ஆண்டில் முதல் செய்தி இதழாக The Weekly News வெளியிடப்பட்டது. பின், London Gazetteer என்ற இதழ் முறையாக 1666 -இல் வெளிவந்தது.

இவ்வாறு உலகம் முழுவதும் இதழியல் வளர்ச்சி அடையத் தொடங்கியது. இந்தியாவில் 1780-இல் Bengal Gazetteer, 1789-இல் Indian Gazetteer போன்ற இதழ்கள் வெளியிடப் பெற்றன. தமிழ்நாட்டில் 1831-இல் முதல் தமிழ் இதழாக 'கிறித்தவ சமயம்'இதழ் வெளிவந்தது. பிறகு, 1853-ஆம் ஆண்டில் தின வர்த்தமானி என்னும் தமிழ் வார இதழ் வெளியானது. கி.பி.1870-க்குப் பின்னர், சென்னை மாகாணத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு நாள், வார, மாத இதழ்கள் வெளிவரத் தொடங்கின.

தமிழகத்தில் இதழ்களின் வளர்ச்சி

[தொகு]

தமிழ்நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட இதழ்களும் அவற்றின் நிறுவனர்களும் பின்வருமாறு:

1882-பிரபஞ்சமித்திரன் மற்றும் ஞானபானு-வ.உ.சிதம்பரம் பிள்ளை & சுப்பிரமணிய சிவா

1906-சர்வஜனமித்திரன்-வேதமூர்த்தி முதலியார்

1907-இந்தியா-சுப்பிரமணிய பாரதியார்

1917-திராவிடன்,தேசபக்தன்,நவசக்தி-திரு.வி.கல்யாணசுந்தரனார்

1917-பாலபாரதி-வ.வே.சுப்பிரமணிய ஐயர்

1920-தமிழ்நாடு-வரதராஜுலு

1930-ஆனந்த விகடன்-எஸ்.எஸ்.வாசன்

1933-மணிக்கொடி-பி.எஸ்.ராமையா

1934-தினமணி- சொக்கலிங்கம்

1936-விடுதலை-பெரியார் ஈ.வே.ரா.

1937-ஜனசக்தி-ப.ஜீவானந்தம்

1940-கல்கி-ரா.கிருஷ்ணமூர்த்தி

1942-தினத்தந்தி-சி.பா.ஆதித்தனார்.

1959-தென்மொழி-பெருஞ்சித்திரனார்

1963 - தீக்கதிர்

வரையறை

[தொகு]

பொதுவாக ஒரு பத்திரிகையானது நான்கு அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ளது.[1][2] அவையாவன,

  • அதனுடைய உள்ளடக்கங்கள் மக்கள் ஏற்கும் வகையில் அமைந்திருத்தல்.
  • ஒரு குறித்த கால இடைவேளையில் வெளிவருதல்.
  • உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்கள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.
  • பல்வேறு தலைப்புக்களை உள்ளடக்கியதாகச் செய்திகள் வெளிவருதல்.

காலமுறைப் பகுப்பு

[தொகு]

அச்சில் வெளிவரும் நாளிதழ்கள் காலமுறையில் இரண்டாகப் பகுக்கப்படுகின்றன. காலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் "காலை நாளிதழ்" என்றும் மாலையில் வெளியிடப்படும் நாளிதழ்கள் "மாலை நாளிதழ்" என்றும் அழைக்கப்படுகின்றன.

உள்ளடக்கம்

[தொகு]
  • நாளிதழ்கள் பொதுவாக அரசியல், வணிகம், குற்றம், பொழுதுபோக்கு, விளையாட்டு முதலிய பல துறைகள் சார்ந்த செய்திகளைத் தாங்கி வருகின்றன. தவிர நாளிதழ்கள் செய்திகள் அல்லாத வேறு பல அம்சங்களையும் கொண்டிருப்பது உண்டு. முக்கியமாக, ஆசிரியத் தலையங்கம், வாசகர் கடிதம், கேலிச் சித்திரங்கள், கதைகள், சோதிடம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
  • மேற்குறிப்பிட்டவை மக்களுக்குத் தகவல்களையும், பொழுதுபோக்கையும் வழங்கக்கூடிய அம்சங்களாகும். இவற்றுக்காகவே மக்கள் நாளேடுகளைப் பணம் கொடுத்து வாங்கி வாசிக்கிறார்கள். இதனால் இவ்வாறு மக்கள் விரும்பும் அம்சங்களை வழங்குவதற்காக நாளிதழ்களை வெளியிடும் நிறுவனங்கள் பெருமளவு பணத்தைச் செலவு செய்வதுண்டு. இவை தவிர நாளிதழ்களில் இடம்பெறும் சில அம்சங்களை வெளியிடுவதற்காக வெளியீட்டு நிறுவனங்கள் பணம் பெற்றுக் கொள்வதும் உண்டு. இவ்வாறான அம்சங்களில் முக்கியமானவை விளம்பரங்கள் ஆகும். இவற்றுள், உற்பத்திப் பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த விழையும் வணிக விளம்பரங்கள், வேலைக்கு ஆட்களைத் தேடும் விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பரங்கள், திருமண அறிவித்தல்கள், இறப்பு அறிவித்தல்கள் என்பன அடங்கும். அதிக விற்பனையைக் கொண்ட நாளிதழ்கள் விளம்பரங்கள் மூலம் நல்ல வருமானம் பெறுகின்றன.
  • பொதுவான நாளேடுகள் பல்வேறு வகையான வாசகர்களைக் கவர்வதற்காகத் தனியான அம்சங்களையும் வெளியிடுகின்றன. எடுத்துக்காட்டாக, பெண்களுக்கான பகுதி, மாணவர்களுக்கான பகுதி, சினிமாப் பகுதி, வேளாண்மை, கலை, விளையாட்டுப் பகுதி போன்றவற்றைக் குறிப்பிடலாம். சில நாளிதழ்கள் குறிப்பிட்ட கிழமைகளில் மட்டும் இலவசமாக தனிஇதழ் ஒன்றையும் நாளிதழுடன் கூடுதலாக அளிக்கின்றன.
  • நாளிதழ்கள் வாசித்தபின் அன்றே எறிந்துவிடக் கூடியவை என்பதால், நாளிதழ்களைப் பதிப்பிக்கும் தாள்கள் உயர்ந்த தரமுள்ளைவையாக இருக்கவேண்டியதில்லை. இதனால் குறைந்த தரம் கொண்ட தாள்களிலேயே நாளிதழ்கள் அச்சடிக்கப்படுகின்றன. இத் தாள் பத்திரிகைத் தாள் எனப்படுகின்றது.

நிர்வாக அமைப்பு

[தொகு]

சிறு நாளிதழ்கள்

[தொகு]
  • சிறிய நாளிதழ்களில் பொதுவாக இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை
  1. அலுவலகம்
  2. பணிப்பிரிவு

நடுத்தர நாளிதழ்கள்

[தொகு]
  • நடுத்தரமான நாளிதழ்களில் மூன்று முக்கியத் துறைகள் செயல்படுகின்றன.அவை
  1. வணிகப் பகுதி
  2. எந்திரப் பகுதி
  3. ஆசிரியர் பகுதி

-இவைகளை முன் பணியறை, பின் பணியறை, செய்தி அறை என்றும் அழைப்பதுண்டு.

பெரிய நாளிதழ்கள்

[தொகு]
  • நன்கு வளர்ச்சியடைந்த நாளிதழ்களில் ஆறு பிரிவுகள் உள்ளன. அவை
  1. ஆசிரியப் பிரிவு
  2. வணிகப் பிரிவு
  3. எந்திரப் பிரிவு
  4. வளர்ச்சிப் பிரிவு
  5. புள்ளி விபரப் பிரிவு
  6. நிர்வாகப் பிரிவு

ஆசிரியப் பிரிவு

[தொகு]

ஆசிரியப் பிரிவு கீழ்காணும் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. செய்தி அறை
  2. படி எடுக்கும் பகுதி
  3. தலையங்கப் பகுதி
  4. படப் பகுதி
  5. நூலகம்

வணிகப் பிரிவு

[தொகு]

வணிகப் பிரிவு கீழ்காணும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. விளம்பரப் பகுதி
  2. விற்பனைப் பகுதி
  3. கணக்குப் பகுதி

எந்திரப் பிரிவு

[தொகு]

எந்திரப் பிரிவு கீழ்காணும் ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. அச்சுக் கோர்க்கும் அறை
  2. அமைப்புப் பகுதி
  3. படங்களைச் செதுக்கும் பகுதி
  4. திருத்தும் பகுதி
  5. அச்சடிக்கும் பகுதி

(தற்போது கணினிமயமாகி விட்டதால் முதல் மூன்று பகுதிகளும் ஒரே பகுதியாக மாற்றம் பெற்று விட்டன. நான்காவது பகுதி அச்சிற்கு முன்பான அச்சுப்படி தயாரிப்பு பகுதியாக மாற்றமாகி விட்டது.)

வளர்ச்சிப் பிரிவு

[தொகு]

நாளிதழ்களின் வளர்ச்சியைக் கவனிப்பதற்காக இந்தப் பகுதி செயல்படுகிறது. இவை விளம்பர முறையைப் பின்பற்றி நாளிதழின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும், நாளிதழ்களில் சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு வாசகர்களைக் கவரவும் பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

புள்ளி விபரப் பிரிவு

[தொகு]

நாளிதழ் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து வைத்து அதன் வளர்ச்சிக்கு துணை செய்கிறது. வெளிநாடுகளில் இப்படி புள்ளி விபரங்களைச் சேகரித்து வகைப்படுத்தி தொகுத்து வைப்பதற்காகத் தனிப்பகுதியை வைத்துள்ளனர். (தற்போது கணினி வழியாக புள்ளி விபரங்கள் சேகரித்துத் தொகுத்து வகைப்படுத்தி வைக்கின்றனர்.)

நிர்வாகப் பிரிவு

[தொகு]

நாளிதழின் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இப்பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவை நாளிதழின் உரிமையாளர் தலைமை ஏற்று நடத்துகிறார். இப்பிரிவில் பல நிர்வாக அதிகாரிகள் இருப்பார்கள். நாளிதழின் கொள்கையின்படி அனைத்துத் துறையினரும் செயல்படுகிறதா என இப்பிரிவில் கண்காணிக்கப்படுகிறது.

மின் நாளிதழ்கள்

[தொகு]

1974ஆம் ஆண்டிலிருந்து மின் நாளிதழ்களுக்கான முன் மாதிரி நுட்பங்கள் வளர்ந்தது. இலினாய்சு பல்கலைக்கழகத்தில் பிளேட்டோ முறைமையை பயன்படுத்தி இணையத்தில் மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நாளிதழ்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் கி. பி. 1987ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டு நாளிதழே மக்கள் சார் மின் நாளிதழை இணையத்தில் வெளியிட்டது. மின் நாளிதழ்கள் நடத்தும் நிறுவனங்கள் சில தினசரி நாளிதழ்களையும் சேர்த்தே வெளியிடுகிறது. சில நிறுவனங்கள் மின் நாளிதழ்களை மட்டுமே வெளியிடுகின்றன.

ஊடகவியல்

[தொகு]

நாளிதழ்கள் ஒரு ஊடகமாக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நாளிதள்களை உருவாக்குவதில் ஈடுபடும் தொழிலை ஊடகவியல் என அழைத்தனர். 19 ஆம் நூற்றாண்டில் மஞ்சள் பத்திரிகை யுகத்தில் அமெரிக்காவில் வெளியான பல நாளிதழ்கள் மக்களை கோபமூட்டும், கிளர்ச்சியூடும் செய்திகளைக் கொண்டு வெளிவந்தன.

நாளிதழ்களின் பணிகள்

[தொகு]

1)செய்திகளை மக்களுக்கு அறிவித்தல்.

2)மக்களை நல்வழிப்படுத்துதல்.

3)மக்களை மகிழ்வித்தல்.

4)சந்தைப்படுத்தி வியாபாரம் புரிதல்.

5)நடுவுநிலை தவறாமை.

6)பண்பாட்டைப் பேணிக்காத்தல்.

7)அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

8)கல்வி,வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல்.

9)மொழியுணர்வை ஊட்டுதல்.

10)நாட்டுப்பற்றை வளர்த்தல்.

முதலான பல்வேறு பணிகள் நாளிதழ்களுக்கு உள்ளன.

செய்தி வகைகள்

[தொகு]
  • மக்கள் செய்திகள்
  • அரசுச் செய்திகள்
  • நீதிமன்றச் செய்திகள்
  • கல்விச் செய்திகள்
  • சட்டமன்ற, நாடாளுமன்ற நிகழ்ச்சிகள்
  • பொதுக்கூட்ட செய்திகள்
  • அறிவியல் செய்திகள்
  • வணிகச் செய்திகள்
  • விளையாட்டுச் செய்திகள்
  • விளம்பரச் செய்திகள்
  • திரைப்பட செய்திகள்

போன்ற வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் நாளிதழ் செய்திகளாகின்றன.

நாளிதழ்கள் வெளிவரும் இடங்கள்

[தொகு]
  • வீரகேசரி-இலங்கை[3]
  • உதயன்-இலங்கை
  • தினக்குரல்-இலங்கை
  • தினமுரசு-இலங்கை
  • தினகரன்-இந்தியா
  • தமிழ் முரசு-சிங்கபூர்
  • தினத்தந்தி-இந்தியா
  • தினமலர்-இந்தியா
  • தின இதழ்-இந்தியா
  • தினமணி-இந்தியா
  • தி இந்து(தமிழ்)-இந்தியா
  • விடுதலை-இந்தியா
  • ஜனசக்தி-இந்தியா
  • தீச்சுடர்-இந்தியா
  • The Hindu-இந்தியா
  • The New Indian Express-இந்தியா
  • தமிழ் முரசு-இந்தியா(மாலை இதழ்)
  • மாலை முரசு-இந்தியா(மாலை இதழ்)
  • மாலை மலர்-இந்தியா(மாலை இதழ்)
  • வணக்கம் இந்தியா நாளிதழ் (இந்தியா)

செய்தி உருவாக்க முறைகள்

[தொகு]
  • தரவுகளைத் திரட்டுதல்.
  • வகைப்படுத்துதல்
  • வரலாற்றுப் பின்புலத்தை உருவாக்குதல்.
  • உள்நாட்டு,வெளிநாட்டு,உலகச் செய்திகளுக்குரிய முக்கியத்துவம் அளித்தல்.
  • செய்திகளில் ஆழம் இருத்தல்.
  • நேர்காணல் நிகழ்த்தியிருத்தல்.
  • புலனாய்வு மேற்கொண்டிருத்தல்.
  • நிழற்படம் எடுத்தல்.
  • நகைச்சுவைத் துணுக்குகள்,கேலிச் சித்திரங்கள்,கருத்துப் படங்கள்,படக்கதைகள் முதலானவற்றை இடம்பெறச் செய்தல்.
  • எளிய நடையில் செய்தி உருவாக்குதல்.
  • பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்.
  • நல்ல எழுத்துருவையும் அழகிய கட்டமைப்புமைப்பையும் கொண்டு செய்தி அமைத்தல்.

செய்திக் கட்டமைப்பு

[தொகு]

செய்திக்கான கட்டமைப்புகள் மூவகைப்படும். அவையாவன:

1.தலைப்பு

2.முகப்பு

3.உடற்பகுதி

செய்தி ஆசிரியர் வகைகள்

[தொகு]

1.ஆசிரியர்

2.செய்தி ஆசிரியர்

3.துணை ஆசிரியர்கள்

நாளிதழின் அமைப்பு

[தொகு]

தினமணி, தினகரன், தினத்தந்தி, The Hindu, வணக்கம் இந்தியா நாளிதழ் போன்றவை காலை இதழாகவும் மாலைமலர், மாலைமுரசு தமிழ் முரசு முதலானவை மாலை இதழாகவும் வெளிவருகின்றன. எனவே, இவ்விதழ்களின் அமைப்பு இதழ்கள் உருவாக்கத்தில் இன்றியமையாததாக உள்ளது.

நாளிதழ்களின் அமைப்பை அதன் அளவு, பக்கம், விலை முதலியன கட்டமைக்கின்றன. பெரிய அளவில் இருப்பதுடன் இதழின் முதல் பக்கம் தலையாயதாக விளங்குகிறது.மேலும், இதழின் பெயர்,வெளிவரும் நாள்,அதன் விலை முதலியனவும் இதற்கு முக்கியமானதாக இருக்கின்றன.

நாளிதழ்களின் உள்ளடக்கம்

[தொகு]

நாளிதழின் உள்ளடக்கமும், வார, மாத இதழ்களின் உள்ளடக்கமும் வேறானவையாக அமைகின்றன. மேலும் நாளிதழில் வலப்பக்கம் இடம்பெறும் செய்தி முக்கியமானதாகவும், பணம் அதிகம் தரும் செய்தியாகவும் அமைகின்றது. இன்னும் தெளிவாக அறிய வேண்டுமானால் நாளிதழின் உள்ளடக்கத்தைக் கீழ்க்காணுமாறு சொல்லலாம்.

(1) செய்தி முன்னுரை

(2) செய்தித் தலைப்பு

(3) தலைப்பின் வகைகள்

(4) தலைப்பெழுத்து வகைகள்

(5) தலைப்பின் பயன்கள்

செய்தி முன்னுரை

[தொகு]

செய்தி இதழ்களில் இடம் பெறும் செய்திகள் அனைத்தையும் படித்துவிட இயலாது. காலக் குறைவு, ஆர்வமின்மை காரணமாகப் பல செய்திகள் படிக்க இயலாமல் போகும். அதனால் செய்தியைச் சுருக்கமாகத் தருவதே செய்தி முன்னுரை (Lead) ஆகும். இச்செய்தித் தொடக்கத்தைப் படித்த பின், தேவை ஏற்படின் அதன் செய்தித் தொடர்ச்சியினை மக்கள் படித்துக் கொள்வார்கள். தேவையில்லாத அல்லது தமக்கு ஆர்வமில்லாத செய்தியைத் தலைப்பை மட்டும் வாசித்து, விட்டுவிடுவார்கள்.இவ்வாறு தேர்வு செய்வதற்கு, தலைப்புக்குப் (Heading)பின் வரும் இந்த செய்தி முன்னுரை முக்கியமானதாக உள்ளது.

எடுத்துக்காட்டு :

பிளஸ் 2 தேர்வில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி

செய்தித் தலைப்பு

[தொகு]

செய்திப் பகுதிக்குத் தலைப்பு முக்கியமானதாகும்.வேகமாக வாசிப்போருக்கு இந்தத் தலைப்புகள் மிக்க பயன் உடையனவாக அமையும்.ஆதலால், செய்தித் தலைப்புகள் துல்லியமாகவும், ஆர்வம் ஊட்டக் கூடியதாகவும், விறுவிறுப்பானதாகவும் இருத்தல் அவசியம்.

தலைப்பின் வகைகள்

[தொகு]

தலைப்புகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை, (1) தலைமைத் தலைப்பு, (2) செய்தித் தலைப்பு. தலைமைத் தலைப்புகள் அரசியல் மாற்றம், போர், இயற்கை நிகழ்வு, பெரிய விபத்துகள், திடீர்த் திருப்பங்கள், அரசின் புதிய திட்டங்கள், உடன்படிக்கைகள், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் முதலானவற்றை உள்ளடக்கியதாக அமையும். ஏனைய செய்திகளின் தலைப்புகள் செய்தித் தலைப்பு எனப்படும்.

தலைப்பு எழுத்து வகை

[தொகு]

தலைப்புகள் செய்திகளை வாசிக்கும் ஆர்வத்தை ஊட்டுகின்றன.அத்துடன் இவை அச்சடிக்கப்படும் எழுத்தின் அளவும் செய்தித்தாள் வாசிப்பில், விற்பனையில் முக்கிய இடம் வகிக்கின்றன. மிகப் பெரிய எழுத்துகளில் வரும் தலைப்புகள்,தினத்தந்தி மாலைமுரசு, மாலைமலர் ஆகியவற்றில் காண முடியும். எழுத்தின் அளவை செய்திகளின் முக்கியத்துவம் நிர்ணயிக்கின்றது.

தலைப்பின் பயன்கள்

[தொகு]

தலைப்புகள் பல்வேறு வகையில் உருவாக்கப்படுவதால் உண்டாகும் பலன்கள் அதிகம்.அவையாவன:

  1. பெரிய எழுத்துகள், மிகப் பெரும் எழுத்துகள் யாவும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன.
  1. அதிகம் எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்கள் தலைப்புகள் காரணமாக எழுத்துக்கூட்டிப் படிக்கும் விழிப்புணர்வை அடைகின்றனர்.
  1. அடிக்கோடிட்டுச் செய்தித் தலைப்பைத் தருவதன் மூலமாக,அது இன்றிமையாததாகின்றது.மேலும், தலைப்புகளே செய்தியில் பாதியைத் தெரிவித்து விடுகின்றன.மீதமுள்ள பகுதியையும் படிக்கும்படி அவையே ஆர்வத்தைத் தூண்டிவிடுகின்றன.

உள்ளடக்கப் பயன்கள்

[தொகு]
  1. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ராசி பலன், வானிலை, அங்காடி விலை நிலவரம், வரி விளம்பரம், புத்தக விமர்சனம், மக்கள் உபயோகப் பொருட்களின் விளம்பரம் முதலியன குறிப்பிடத்தக்கனவாக அமைந்து ஈர்ப்பை அதிகப்படுத்துகின்றன.
  1. நாளிதழ்கள் பல்வேறு இலவச இணைப்புகளையும் தருவதால்,அவை வெளிவரும் நாள், இணைப்பின் பெயர் ஆகியன உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன.
  1. நாளிதழ்கள் பெரும்பாலும் மாவட்ட

வாரியாக வெளியிடப்படுகின்றன.எனவே அந்தந்த மாவட்டங்களின் செய்திகள் அந்தந்த மாவட்டங்களில் வெளியாகும் இதழ்களில் முக்கியச் செய்தியாக அமைகின்றன.மேலும் மாநிலச் செய்திகள், மாநகரச் செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள்,திரைப்படச் செய்திகள்,வணிகச் செய்திகள்,இலக்கிய செய்திகள் முதலியனவும் நாளிதழின் உள்ளடக்கத்திற்குக் கூடுதல் ஈர்ப்பை மக்களிடம் ஏற்படுத்த விளைகின்றன.

தலையங்க அமைப்பு

[தொகு]

தலையங்கம் மூன்று பகுதிகள் கொண்டதாக அமையும்.அவை,

(1)கருப்பொருள்

(2)விளக்கம்

(3)முடிவு

என்பதாகும்.

தலையங்கமானது கூறவிருக்கும் செய்தி அடிப்படையில் தலைப்பு அமைத்தல், அதற்கான கருப்பொருளை உருவாக்கல், அதனை விளக்கிக் கூறல்,அதற்கு விருப்பு வெறுப்பின்றி நடுவுநிலையோடு முடிவு கூறல் என்பதாக இருக்கும்.

அவை திறனாய்வு முறையிலும்,கருத்து பற்றிய தீர்வினை நடுநிலையுடன் வெளியிடுபவையாகவும் அமையும்.

தலையங்கம் ஆசிரியரின் கொள்கையையும் சமூக நோக்கையும் தெளிவாக உணர்த்துவதாகக் காணப்படும்.

தலையங்கம் ஏதேனும் ஒரு தலைப்பை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படுவதாகும். பொதுவாக,தலையங்கம் நிகழ்கால நடப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

உதாரணத்திற்கு சில தலையங்க தலைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.அவையாவன:

"பழைய புத்தகங்களுக்கும் உயிருண்டு"

"வேண்டாம் இந்த விபரீதம்"

"KARNAN CLOUD HANGS OVER COLLEGIUM SYSTEM"

தலையங்க அமைப்பிடம்

[தொகு]

தலையங்கம் அமையும் இடம் என்பது முக்கியமானதாகும்.

பொதுவாக நாளிதழ்களில் தலையங்கம் இரண்டாம் மற்றும் நடுப்பக்கத்தில் அமைக்கப்பெறும்.

தலையங்கம் ஆசிரியர் எழுதும் பகுதி என்பதால் ஓர் இதழின் உண்மைத் தன்மையை நிறுவும் பகுதியாக இருக்கிறது. தலையங்கத்தை விரும்பிப் படிக்கும் போக்கு உள்ளது.அதனால் தலையங்க அமைவிடத்தைத் தொடக்கத்தில் அல்லது நிலையாகக் குறிப்பிடுவது நல்லது. தலையங்கம் இல்லாமல் வெளிவரும் நாளிதழ்கள் படிப்போரின் கவனத்தை ஈர்ப்பதில்லை.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை நூல்கள்

[தொகு]

1.கீற்று இணையதளம்.

2.முனைவர் பாக்யமேரி, தமிழ் இலக்கிய வரலாறு (வகைமை நோக்கு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98,ஜூலை-2008.

3.முனைவர் ச.சுபாஷ் சந்திரபோஸ், தமிழ் இலக்கிய வரலாறு, பாவை பப்ளிகேஷன்ஸ், ராயப்பேட்டை, சென்னை-14 ஜூலை-2010.

4.தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.

5.மே 12,2017, தி இந்து நாளிதழ்

6.மே 13,2017, தி இந்து நாளிதழ்

7.மே 13,2017,தினமணி நாளிதழ்

8.May 13,2017,The New Indian Express.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Werner Faulstich: "Grundwissen Medien", 4th ed.,ya UTB, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8252-8169-4, chapter 4
  2. Margarete Rehm. "Margarete Rehm: Information und Kommunikaegenwart. Das 17. Jh". Ib.hu-berlin.de. பார்க்கப்பட்ட நாள் 2012-02-21.
  3. http://www.virakesari.lk/. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2017. {{cite web}}: Missing or empty |title= (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளிதழ்&oldid=4047112" இலிருந்து மீள்விக்கப்பட்டது