த டெம்பொரல் அன்ட் ஸ்பிரிச்சுவல் கொன்குவெஸ்ட் ஒஃப் சிலோன் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

த டெம்பொரல் அன்ட் ஸ்பிரிச்சுவல் கொன்குவெஸ்ட் ஒஃப் சிலோன் (The Temporal and Spritual Conquest of Ceylon) என்பது பெர்னாவ் தெ குவெய்ரோசு என்னும் போர்த்துக்கேயப் பாதிரியார் எழுதிய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மூல நூல், இலங்கை மீதான உலகியல், ஆன்மீக வெற்றி என்னும் பொருள் கொண்ட "Conquista Temporal e Espiritual de Ceilao" என்னும் தலைப்புக் கொண்ட போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்டது. இதை எஸ். ஜி. பெரேரா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் முதல் பதிப்பு 1930 ஆம் ஆண்டில் கொழும்பில் வெளியானது. இந்த நூல், இலங்கையின் வரலாறு தொடர்பில் மகாவம்சத்துக்கு அடுத்த முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது.[1]

நோக்கம்[தொகு]

இந்த நூலின் மூலம் வரலாற்றில் இருந்து ஒரு படிப்பினையைப் போர்த்துக்கேயருக்கு உணர்த்துவதே குவெய்ரோசின் நோக்கமாகும். போர்த்துக்கேயரை கிழக்கு நாடுகளுக்கு அழைத்து வந்து இலங்கையைக் கண்டறிய வைத்தது இறைவனின் கருணை. இதை இறைவன் கிறித்தவத்தைப் பரப்புவதற்காகவே செய்தான். ஆனாலும், ஆன்மீக வெற்றி உலகியல் வெற்றியோடு கைகோர்த்துச் சென்றதால், உன்னதமான இறுதி நோக்கம் திசை மாறிவிட்டது எனவும் இலாபம், செல்வம், புகழ் போன்றவற்றின் மீதான ஆசையினால் உருவான அளவு மீறிய செயற்பாடுகளினால் போர்த்துக்கேயருடைய தேசிய அடையாளத்துக்கே ஊறு நேர்ந்துவிட்டது என்றும் குவெய்ரோசு நம்பினார். இதை மேலிடத்துக்கு உணர்த்துவது நூலாசிரியரின் ஒரு நோக்கமாக இருந்தது.[2]

குவெய்ரோசு இந்தியாவில் வாழ்ந்து மறைந்த யேசு சபைச் சகோதரரான பெட்ரோ தெ பாசுட்டோ என்பவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். இதன்போது கிடைத்த தகவல்கள் சிலவே, இலங்கைக்கு என்றுமே சென்றிராத அவரை இந்த நூலை எழுதுவதற்குத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது. சகோதரர் பெட்ரோ தெ பாசுட்டோ வருவது உரைத்தலுக்குப் பெயர் பெற்றவர். இறைவனுடைய திட்டத்தை நிறைவேற்றும் போர்த்துக்கேயர் இலங்கையை மீண்டும் கைப்பற்றுவர் என்பது அவரது வருவது உரைத்தல்களில் உள்ளடங்கியிருந்தது. எனவே, அவரது வருவது உரைத்தல்களை உரிய வரலாற்றுப் பின்னணியில் தருவதற்காக இலங்கையில் போர்த்துக்கேயரின் வரலாற்றை அவர் ஆராய்ந்தார். இதன் மூலமே சகோதரர் பெட்ரோவின் வரலாற்றை வாசிக்கும் போர்த்துக்கேயர், சகோதரர் பெட்ரோ கூறியதுபோல் இலங்கையைப் போர்த்துக்கேயர் இழந்தது அவர்களைத் திருத்துவதற்கு இறைவன் அளித்த தண்டனை என்னும் கூற்றின் உண்மையை உணர்வர் எனக் குவெய்ரோசு கருதினார்.[3] இதன் தொடர்ச்சியாகவே "Conquista Temporal e Espiritual de Ceilao" என்னும் இந்த நூலை அவர் எழுதினார். ஏற்கெனவே ஒல்லாந்தரிடம் இழந்துவிட்ட இலங்கையில் போர்த்துக்கேயரின் வரலாற்றை இந்த நூலில் விபரித்த குவெய்ரோசு, போர்த்துக்கலுக்காகவும், இறைவனுக்காகவும் இலங்கைக்குச் சென்று மீண்டும் அதனைக் கைப்பற்றுவதற்கான காலம் கனிந்துவிட்டதாக கருதினார். அதனால், இந்த நூலின் மூலம் அரசியல், சமயம் மற்றும் படைத்துறை நடவடிக்கைகளுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.[4]

தகவல் மூலங்கள்[தொகு]

குவெய்ரோசு இந்த நூலை எழுதுவதற்கு முன்னரே பலர் இலங்கையில் போர்த்துக்கேயரின் வரலாறு குறித்த தகவல்களை உள்ளடக்கிய நூல்களை எழுதியுள்ளனர். இவற்றுட் சில இந்நூலாசிரியருக்குத் தகவல் மூலங்களாகப் பயன்பட்டுள்ளன. நூலில் ஆங்காங்கே காட்டிய மேற்கோள்களில் இருந்து பாரோசு (Barros), கூட்டோ (Couto), மெனெசசு (Menezes), பாரியா இ சோசா (Faria y Souza) ஆகியோரின் நூல்களைக் குவெய்ரோசு பயன்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், மேற்படி நூல்கள் தவிர, அபொன்சோ டயசு டா லொம்பா (Afonso Dias da Lomba), அன்டோனியோ பார்போசா பின்கெய்ரோ (Antonio Barboza Pinheyro) ஆகியோரது உதவியையும், பென்டோ டி சில்வா (Bento de Silva), திருத்தந்தை பிரான்சிசுக்கோ நேக்ரோ (Francisco Negrao) ஆகியோரின் கையெழுத்துப் பிரதிகளையும், தனிப்பட்ட ஆவணங்களையும், மேலும் இலங்கை பற்றி அறிந்திருந்த பலர் அளித்த தகவல்களையும் தான் பயன்படுத்தியதாகவும் குவெய்ரோசு நூலுக்கான தனது அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளார்.[5]

அமைப்பு[தொகு]

மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்ட இந்த நூல் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் பல அத்தியாயங்களை உள்ளடக்குகிறது.

 • பகுதி 1 - 23 அத்தியாயங்கள்.
 • பகுதி 2 - 32 அத்தியாயங்கள்
 • பகுதி 3 - 29 அத்தியாயங்கள்
 • பகுதி 4 - 28 அத்தியாயங்கள்
 • பகுதி 5 - 30 அத்தியாயங்கள்
 • பகுதி 6 - 27 அத்தியாயங்கள்

இவற்றில் முதல் இரு பகுதிகளும் முதல் தொகுதியிலும், 3 ஆம் 4 ஆம் பகுதிகள் இரண்டாம் தொகுதியிலும், 5 ஆம் 6 ஆம் பகுதிகள் மூன்றாம் தொகுதியிலும் அடங்குகின்றன.

உள்ளடக்கம்[தொகு]

நூலின் முதற்பகுதி போர்த்துக்கேயரின் வருகைக்கு முன் இலங்கையின் வரலாறு, இருந்த இராச்சியங்கள், இனங்கள் என்பன குறித்த விபரங்களைத் தருகிறது. பின்னர் டொன் லாரென்சோ டி அல்மெய்தா இலங்கையில் இறங்கியது முதல் போர்த்துக்கேயரின் வணிக, அரசியல், சமயப் பரப்புரை நடவடிக்கைகள் பற்றி எஞ்சிய பகுதிகளில் விரிவாகப் பேசப்படுகிறது. கோட்டே இராச்சியத்தில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிய போர்த்துக்கேயர், உள்ளூரில் இருந்த அரசியல் போட்டிகளைப் பயன்படுத்திக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். இது தொடர்பில் உள்ளூர் அரசியல் போட்டிகள், அதனால் ஏற்பட்ட போர்கள், இவற்றில் போர்த்துக்கேயரின் பங்கு போன்றவை பற்றிய விரிவான தகவல்கள் நூலில் காணப்படுகின்றன. அத்துடன் என்றுமே போர்த்துக்கேயரால் கைப்பற்ற முடியாமல்போன கண்டி இராச்சியத்துடனான தொடர்புகள், போர்கள் என்பவை குறித்த விடயங்களும் முக்கிய இடம் பெறுகின்றன.

தொடக்கத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் அக்கறை கொள்ளாதிருந்த போர்த்துக்கேயர், கத்தோலிக்க சமயப் பரப்புரை முயற்சிகளுக்கு யாழ்ப்பாண அரசனால் ஏற்பட்ட பின்னடைவுக்காக அரசனைப் பழிவாங்கப் போர்த்துக்கேயக் குருமார் எண்ணம் கொண்டிருந்தனர். அவர்களின் தூண்டுதல்களினால் போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தில் தலையிடத் தொடங்கினர். பல தடவைகள் யாழ்ப்பாணத்தின் மீது போர் தொடுத்த அவர்கள் இறுதியில் 1619ல் யாழ்ப்பாணத்தைத் தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேற்படி விடயங்கள் குறித்த விபரமான தகவல்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாண வரலாறு குறித்த நம்பத் தகுந்த வேறு தகவல்கள் அதிகம் இல்லாத நிலையில் இந்த நூலில் காணப்படும் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இலங்கையின் கரையோரப் பகுதி முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போர்த்துக்கேயரின் ஆட்சி, கத்தோலிக்க சமயத்தைப் பரப்ப எடுத்துக்கொண்ட முயற்சிகள், இந்து, பௌத்த சமயங்களை ஒடுக்கி அவர்களது வணக்கத் தலங்களை அழித்தமை போன்ற விபரங்கள் பற்றியும் நூலில் விரிவான தகவல்கள் உள்ளன. 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்னொரு ஐரோப்பிய வல்லரசான ஒல்லாந்தரின் தலையீடு, இறுதியில் அவர்களிடம் போர்த்துக்கேயர் இலங்கையில் இருந்த தமது ஆட்சிப் பகுதிகளை இழந்தமை தொடர்பான தகவல்களும் நூலில் இடம்பெறுகின்றன.

குறைபாடுகள்[தொகு]

இலங்கையின் வரலாறு குறித்த ஆய்வுகளில் குவெய்ரோசின் நூல் மிகவும் பெறுமதி வாய்ந்தது என்ற கருத்தைப் பலரும் வெளிப்படுத்தியிருந்த போதிலும், இதன் குறைபாடுகள் சிலவற்றையும் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. குறிப்பாக, ஆசிரியரின் ஐரோப்பிய மையப் பார்வையாலும், கத்தோலிக்க மதத்தை முதன்மைப்படுத்தும் பக்கச்சார்பான நிலைப்பாடுகளாலும் இந்நூல் தரும் தகவல்களைக் கவனமாகவே பயன்படுத்த வேண்டியிருப்பதாக அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.[6]

குறிப்புக்கள்[தொகு]

 1. Perera, S. G. (Translator), Introduction in Queyroz, Fernao De, The Temporal and Spiritual Conquet of Ceylon, Asian Educational Services, New Delhi, 1992. p. 3.
 2. Županov, Ines G., Goan Brahmans in the Land of Promise: Missionaries, Spies and Gentiles in the 17th-18th century Sri Lanka, Portugal – Sri Lanka: 500 Years, ed. Jorge Flores, South China and Maritime Asia Series (Roderich Ptak and Thomas O. Hölmann, eds , Wiesbaden: Harrassowitz and the Calouste Gulbenkian Foundation, 2006, pp. 171-210
 3. Perera, S. G., 1992. p. 11.
 4. Županov, Ines G., 2006, pp. 171-210
 5. Perera, S. G., 1992. p. 10.
 6. Borges, Charles. J., The Economics of the Goa Jesuits 1542-1759: An Explanation of Their Rise and Fall, Concept Publishing Company, New Delhi, 1994. P.144.