சிலப்பதிகார நாடகவியல்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தொடர்நிலைச் செய்யுள் என அழைக்கப்படுகிறது. இக்காப்பியத்தில் முத்தமிழின் வேரான இயல், இசை ,நாடகம், என்னும் மூன்றினயும் காணலாம். சிலப்பதிகாரத்தில் நாடகக் காப்பியத்திற்கு இன்றியமையாத உறுப்புகள் எல்லாமும் நிறைந்திருக்கின்றன எனக் கூறப்படுகிறது. எனவே இதனை 'நாடகக் காப்பியம்' என்று கூறுவர். இந்நூலில் இன்பியல், துன்பியல் நாடகக் கூறுகள் காட்டப்படுகின்றன. பழங்கால நாடகப் பான்மையை அறிய மிகவும் துணை செய்வது இந்நூலாகும்.
நாடகக் காப்பியம்
[தொகு]இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சிகளை வரலாற்றாசிரியர் போல வரிசையாகக் கூறாமல் இடத்திற்கும் பாத்திரத்திற்கும் ஏற்றார்போல் அங்காங்கு மாற்றியமைத்துக் கூறுவதும், வழக்குரைக் காதையில் அமைந்துள்ள உரையாடல் போன்ற பகுதிகளும் இதனை ஒரு சிறந்த நாடகக் காப்பியம் எனக் கூறும்படி அமைந்துள்ளது. கானல்வரி இளங்கோவடிகளின் இசை மற்றும் நாடகப் புலமைக்குச் சான்றாகும்.
நாடகக் கூறுகள்
[தொகு]கண்ணகியின் பிரிவு, அவள் தன் தீயகனவு, கோவலன் கண்ட அஞ்சுவரு கணவு, அவ்விருவரும் காட்டுவழி செலவு, நீதிக்கு முரணான கோவலன் கொலை, தேற்ற முடியாத கண்ணகியின் துயர், கோல்கோடிய பாண்டியனின் இறுதி, கண்ணகி தனது இடது நிகிலைத் திருகியெறிந்து மதுரையை எரித்தது, கோப்பெருந்தேவியும் பாண்டியனோடு விண்ணகம் புக்கது போன்றவை இக்காப்பியத்துள் காணும் துன்பியல் கூறுகள் ஆகும். புகார் காண்டம் முழுதும் ஆங்காங்கே இன்பமே விரவியுள்ளன. துயருழந்தார் இருவரும் தேவர் புடை சூழ வானவூர்தியில் ஊர்ந்து துறக்கம் சென்றனர் என கதையின் முடிவு இன்பந்தருவதாய் அமைந்துள்ளது.
நாடக உத்திகள்
[தொகு]மேலை நாட்டு நாடக உத்தியான ' நாடக அங்கதம்' துன்பியல் நாடகங்களுக்கு இன்றியமையாததாகும். துன்பியல் நாடகமான சிலம்பிலும் இந்நாடக அங்கதம் இடம் பெற்றிருக்கிறது.
சிலம்பின் தொடக்கத்திலேயே ' காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீதறுக' - என்று பெண்கள் கூடி ஆடிப்பாடி வாழ்த்தும்போதே பின்னால் அவர்களின் கைகள் நெகிழப்போவதை முன்னுணர்தலாக உணரவைக்கிறார். மேலும் தற்குறிப்பேற்ற அணியின் மூலமாகவும் பின்வருவனவற்றை முன்னுணர்த்துகிறார். கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் நுழையும்போதே கருநெடுங்குவளையும், ஆம்பலும், கமலமும் கண்ணீர்சிந்திக் காலுற நடுங்குகின்றன; போருழந்து கைகாட்ட என வரும் பகுதிகள் கோவலனுக்கு வர இருக்கும் பேராபத்தையும், அதனால் கண்ணகி அடைய இருக்கும் பெருந்துன்பத்தையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
முரண்சுவை உத்திகள்
[தொகு]- சிலம்பில் இன்பமும் துன்பமும் நகையும் அவலமும் மாறி மாறி அமைந்து முரண் சுவை நிறந்து விளங்கக்காணலாம்.
- சிலம்பின் தொடக்கம் மங்கல வாழ்த்தாகத் திருமணத்தில் இருக்க முடிவு அவலமாக இருக்கிறது.
- அடைக்கலக் காதையை அடுத்துக் கொலைக்களக்காதையும், நாடுகாண் கதையை அடுத்து காடுகாண்காதையும் அமைத்து முரண்சுவையைப் பெருக்குகிறது.
- அந்திமாலை சிறப்புசெய் காதையோ மாலையும் காலையும், கூடியவரும் பிரிந்தவரும், மகிழ்ச்சியும் அழுகையும், மாதவியும் கண்ணகியும் என மாறி மாறி முரண்சுவைப் பாங்கு அமைந்து நாடகப் பண்பினை பெருக்குகின்றது எனக் கூறுவர்.
உசாத்துணை
[தொகு]- தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம் . 1997
- ஆர்.கே.சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946