காம் மக்கள்
விடுமுறை ஆடைகளில் காம் இனப் பெண்களும் ஆண்களும். லிப்பிங் மாவட்டம், குயிசூ, சீனா. | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
2,960,293 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
குயிசூ, உனான், குவாங்சி மாகாணங்கள், சீனா; சிறிய அளவில் வியட்நாம், லாவோஸ் | |
மொழி(கள்) | |
காம் மொழி, சீனம் | |
சமயங்கள் | |
பல கடவுட் கொள்கை |
காம் மக்கள் (Kam people; அதிகாரப்பூர்வமாக சீனாவில் டோங் மக்கள் என அழைக்கப்படுகின்றனர்) என்பவர்கள் சீனாவில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் 11வது பெரிய இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவில் பெரும்பாலும் கிழக்கு குய்சோ, மேற்கு ஹுனான் மற்றும் வடக்கு குவாங்சியில் வாழ்கின்றனர். மேலும் வியட்நாமில் ஒரு சில காம் மக்கள் வாழ்கின்றனர்.[1]
இவர்கள் சீனாவில் வளர்க்கப்படும் காம் இனிப்பு அரிசி விளைவிப்பதற்கு பெயர்பெற்றவர்கள். இவர்களின் தச்சுத் திறன் மற்றும் தனித்துவமான கட்டிடக்கலை குறிப்பாக புகழ் பெற்றது. காம் மக்கள் ஜெம்ல் அல்லது கேம்ல் என்ற பெயர்களாலும் அறியப்படுகின்றனர்.[2]
வரலாறு
[தொகு]காம் மக்கள் தெற்கு சீனாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த பண்டைய ராவ் மக்களின் நவீன கால சந்ததியினர் என்று கருதப்படுகின்றனர்.[3] இவர்களின் மூதாதையர்கள் பொதுவாகக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்ததாக புராண கதைகள் கூறுகின்றன. புனைவுகளின்படி தெற்கு காம் மக்களின் மூதாதையர்கள் குவாங்சோ, குவாங்டாங் மற்றும் குவாங்சியிலிருந்து வந்தவர்கள் ஆவர். வடக்கு காம் மக்களின் மூதாதையர்கள் வெட்டுக்கிளிகளின் தொல்லை காரணமாக செஜியாங் மற்றும் புஜியான் மாகாணகளிலிருந்து புலம் பெயர்ந்தனர். சில சீன அறிஞர்கள் காம் மக்கள் முதல் நூற்றாண்டிலிருந்து பாய் மக்ககளின் ஒரு கிளை என்று நம்புகிறார்கள். இந்த மக்கள் கிபி முதல் நூற்றாண்டில் யாங்சே நதிக்கரையில் பல சிறிய குழுக்களாக குடியேறினர்.[2]
காம் (அல்லது டோங்) மக்களைப் பற்றிய முதல் வெளிப்படையான குறிப்பு மிங் வம்ச மூலங்களிலிருந்து வருகிறது. மிங் மற்றும் சிங் வம்சங்களின் போது காம் மக்களிடையே பல கிளர்ச்சிகள் நடந்தன, ஆனால் அவை எதுவும் வெற்றிபெறவில்லை. அந்த நேரத்தில் இப்பகுதியில் விரிவான நீர்ப்பாசன முறைகள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக நெல் அறுவடை கணிசமாக அதிகரித்தது, ஆனால் இது பெரும்பாலும் உள்ளூர் நில உரிமையாளர்களுக்கு மட்டுமே பயனளித்தது. 1840-42 இல் முதல் ஓபியம் போருக்குப் பிறகு, மேற்கத்தியப் படைகள், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள் மற்றும் கிங் அதிகாரிகளால் காம் மக்கள் மேலும் சுரண்டப்பட்டனர்.[2]
இந்த நிகழ்வுகளின் விளைவாக, 1921 இல் சீன பொதுவுடைமை நிறுவப்பட்ட உடனேயே காம் மக்கள் பலர் அதில் சேர்ந்தனர். 1949 க்குப் பிறகு, காம் பகுதிகளில் உள்கட்டமைப்பு விரைவாக மேம்படுத்தப்பட்டது. பள்ளிகள், சாலைகள், சிறிய தொழிற்சாலைகள் கட்டப்பட்டன மற்றும் பலர் அரசு அதிகாரிகளும் ஆனார்கள்.[2]
மொழி
[தொகு]காம் மொழி என்பது காம் மக்களின் மொழியாகும். எத்னோலாக் மூன்று தனித்தனி ஆனால் நெருங்கிய தொடர்புடைய காம் மொழி வகைகளை வேறுபடுத்துகிறது. வரலாற்று ரீதியாக, வடக்கு காம் மொழியில் தெற்கு காம் மொழியை விட சீன மொழியின் தாக்கம் அதிகமாக உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edmondson, J.A. and Gregerson, K.J. 2001, "Four Languages of the Vietnam-China Borderlands", in Papers from the Sixth Annual Meeting of the Southeast Asian Linguistics Society, ed. K.L. Adams and T.J. Hudak, Tempe, Arizona, pp. 101–133. Arizona State University, Program for Southeast Asian Studies. Expand.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Skutsch, Carl, ed. (2005). Encyclopedia of the World's Minorities. New York: Routledge. pp. 408, 409. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57958-468-3.
- ↑ D. Norman Geary, Ruth B. Geary, Ou Chaoquan, Long Yaohong, Jiang Daren, Wang Jiying (2003). The Kam People of China: Turning Nineteen. (London / New York, RoutledgeCurzon 2003). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7007-1501-0.