உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். ஜே. பெர்க்மான்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஜே. பெர்க்மான்ஸ்
பிறப்புஜான் பெர்க்மான்ஸ்
3 ஆகத்து 1949 (1949-08-03) (அகவை 75)
சூசையப்பர்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம், சென்னை மாகாணம், இந்திய மேலாட்சி
(தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இருப்பிடம்ஜெபத்தோட்டம், காளையார்கோயில், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு.
தேசியம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
கல்விகத்தோலிக்க குருத்துவப் பயிற்சி
பணிமறை பரப்புனர்
அறியப்படுவதுகிறிஸ்தவ பாடல்கள்
சமயம்கிறித்தவம்
பெற்றோர்பெரியநாயகம்
சூசை
வாழ்க்கைத்
துணை
திருமணமாகவில்லை

அருட்தந்தை எஸ். ஜே. பெர்க்மான்ஸ்[1] (S. J. Berchmans) என்பவர் கிறிஸ்தவ நற்செய்தியாளரும், ஒரு தமிழ்க் கிறிஸ்தவப் பாடகருமாக அறியப்பட்டவர். ஒரு கத்தோலிக்கக் குருவானவராக ஆன்மீகப் பணிகளைத் துவக்கிய அவர், ஏறத்தாழ 600 க்கும் மேற்பட்ட கிறித்தவப்பாடல்களைத் தமிழில் இயற்றி, பாடி ' விசுவாச கீதம் மற்றும் ஜெபத்தொட்ட ஜெய கீதங்கள் ' எனும் பெயரிலும், மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி, ஒடியா, சிங்களம், ஆங்கிலம் போன்ற மொழிகளும் பாடியுள்ளார்.

இவர் தென் தமிழ் நாட்டின் மதுரை - தொண்டி நெடுஞ்சாலையில், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் நகரில் ஜெபத்தோட்டம் என்ற தமது ஆன்மீக மையத்தின் தலைமையகத்தை நிறுவிச் செயல்படுகிறார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

பெர்க்மான்ஸ் தென்னிந்தியாவின், மதுரை மாநகரிலிருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலைவுள்ள "சூசைப்பட்டி" எனும் குக்கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் மூன்றாம் தேதி பிறந்தார். விவசாயிகளான அவரது பெற்றோர் ஓர் பக்தியுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பாரம்பரியம் கொண்டோர். ஐந்து பிள்ளைகளை உடையது அந்தக் குடும்பம். இவரது அத்தையும் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி.

இளம் வயதில் தேவாலயப் பாடகர் குழுவில் சேர்ந்து பாடுவதில் அதிக நாட்டமுடையவராக விளங்கியவர், பின்பு அடிப்படை கர்நாடக இசையையும், மேற்கத்திய வாத்தியக் கருவிகளையும் முறையாகக் கற்றுக்கொண்டார். பள்ளி உயர்நிலைக் கல்விக்குப்பின், கத்தோலிக்கக் குருவானவராகப் பணி செய்ய விருப்பம் கொண்ட அவர், பின்பு இளம் குருவானவர் பயிற்சி மடத்தில் சேர்ந்தார். பயிற்சியின் போதே இசை நாட்டத்தை விடாமல் தொடர்ந்து அதிக இசைப் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1974 ஆம் ஆண்டு கத்தோலிக்கக் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்ட அவர், பணித்தளங்களில் தொடர்ந்து பாடுவதால் மக்களிடம் நன்கு அறியப்பட்டார்.

மதுரையில் மாணவராக பயிலும் காலத்தில், ஆலய பாடகர் குழுவில் சேர ஆர்வத்துடன் முயற்சித்தபோது, பாடகர் குழு தலைவர் இவரது குரலை ஏளனம் செய்து புறக்கணித்தார்[2]. காலங்கள்` உருண்டோடியபின், தமிழ் கிறிஸ்தவ உலகில் பலரால் அறியப்படும் புகழ் பெற்ற ஒரு பாடகரானது இவருக்கே மாபெரும் வியப்பு.

குருத்துவப் பணியும் நற்செய்தி இயக்கமும்

[தொகு]

தமிழ்நாட்டின் மதுரை உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த (தற்போது சிவகங்கை மறைமாவட்டம்) சாத்தரசன்பட்டி என்னும் கத்தோலிக்க பங்கின் பங்குத்தந்தையாக 1978 ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கத்தோலிக்க குருவாக இருந்தாலும் ஆன்மீக நாட்டமின்றி இசையில் நாட்டம் கொண்டிருந்தார். இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாடுவது, குருக்கள் அணியும் வெண்ணிற அங்கி அணிந்து கொண்டு கச்சேரிகளில் பங்கு பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும், ஆலய வழிபாட்டு பாடல்களையும் சினிமா ராகத்தில் பாடினார். சீகூரணி ஊரில் இவரது கச்சேரியில் பங்கு பெற்ற கத்தோலிக்க பெண் ஒருவர் இவரைப் பார்த்து, "நீங்கள் ஒரு கத்தோலிக்க சாமியார்! இப்படி சினிமா பாடல்கள் பாடி தெருக்கூத்து நடத்துவதற்கா உங்கள் பெற்றோர் உங்களை இப்பணிக்கு அனுப்பியிருப்பார்கள்? " என்று கேட்க, அந்த நிமிடத்தில் தவறை உணர்ந்தார். ஆலயத்தில் மடியேந்தி பிரார்த்தனை செய்யும் கிராம மக்களின் ஏக்கம், வேண்டுதல்கள் யாவும் இவரது பாதையை மாற்றியது.

கத்தோலிக்க திருச்சபையின் முறைமைகளை காட்டிலும் பெந்தெகொஸ்தே முறையில் வழிபாடு நடத்தியதால் கத்தோலிக்க குருக்களுக்கான நெறிமுறைகளை காக்க தவறியதற்காகவும், குருத்துவ பிரமாணத்தை மீறியதற்காகவும், 1991 ஆம் ஆண்டு கத்தோலிக்க குரு நிலையில் இருந்து தகுதி நீக்கம் செய்து அன்றைய பேராயர் உத்தரவிட்டார். தகுதி நீக்கத்தை வாடிகனும் உறுதி செய்தது.

பின்னர் இறைவனுக்கு இசைத்தொண்டு செய்யவேண்டும் என்று, பாடல்கள் மூலமாக சிறிய அளவில் பிரார்த்தனைக் கூட்டங்களை அந்த சிறிய கிராமத்தில் துவங்கினார். சாதி, சமயம் பார்க்காது மக்கள் இந்த ஆன்மீக எழுச்சியில் பங்கேற்றதைப் பார்த்து அரசே சிறப்பு பேருந்துகளை இயக்க ஆரம்பித்தது.[சான்று தேவை]

ஜெபத்தோட்ட ஜெய கீதங்கள்

[தொகு]

கிறிஸ்தவ இசை உலகில் ஒரே நபர் பாடல், ராகம் அமைத்து தானே எல்லா பாடல்களையும் பாடி வெளியிட்ட முதல் பிரபலம் இவர். முன்பு விசுவாச கீதங்கள் என்றும் பின்பு ஜெபதோட்ட ஜெய கீதங்கள் என்றும் சுமார் 400 பாடல்களையும் இவ்வாறாக வழங்கி வருகிறார்.

" எவரும் பாடும் எளிய ராகங்கள் " , விவிலியம் திருவார்தைகளின் நேரடிப் பிரயோகம் இவைகள், தமிழ் பேசும் அகில உலக கிறிஸ்தவ மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிருக்கிறது.

பொதுக் கூட்டங்கள்

[தொகு]

அற்புத விடுதலைப் பெருவிழா என்ற தலைப்புக்களில் தமிழகம், இந்திய மாநிலங்கள் மற்றும் அயல்நாடுகளில் கிறிஸ்துவை அறிவிக்கும் பொதுக்கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார். கிறிஸ்தவ போதகர்களின் வழக்கமான பாணியைப் பின்பற்றாமல் பெரும்பாலும் பாடிக்கொண்டே மிகவும் ஜனரஞ்சகமாக [3] கூட்டங்களை நடத்துகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அதிக உஷ்ண சீதோஷன தட்ப வெப்ப நிலையை தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றாலும், வெயில் தேசமான தனது ஜெபத்தோட்டத்திலேயே பெரும்பாலும் தங்கியிருக்கிறார்.

பெர்க்மான்ஸ் ஆரம்ப காலங்களில் புலால் உணவுகளை உண்பவராக இருந்து பின் (தற்பொழுது) தாவர உணவு முறையை பின்பற்றி வருகிறார். உணவு பழக்க வழக்கங்களில் மிகவும் கண்டிப்பாகவும் நேர்த்தியாகவும் ஆரோக்கிய அக்கறையுடன் கடைபிடிக்கும் இவர் அதிகாலை உடற் பயிற்சியில் ஆர்வமுடையவர்.

பொதுவாழ்வின் துவக்க நாட்களில் கொஞ்ச காலம் இவர் காவி உடை அணிந்து , நீண்ட தாடியுடன் காணப்பட்டார். தற்போது எளிமையான ஆடைகளையே விரும்பி அணிவது இவரது தனிச் சிறப்பாக அறியப்படுகிறது.

விவிலிய பயன்பாட்டை பொறுத்த வரையில் சீர்திருத்த தமிழ் நடைக்கு முக்கியத்துவம் அளித்து தனது பாடல்களில் அவ்வார்த்தைகளை பயன்படுத்துகிறார். அதிகமான ஆங்கில கிறிஸ்தவ இலக்கியங்களை படிப்பது , இசைத் தொகுப்புக்களைக் கேட்பது இவரது ஒய்வு நேர பொழுது போக்கு. விவிலிய ஒப்பீட்டு படிப்புக்காக (reference study) கத்தோலிக்க பொது மொழிபெயர்ப்பு விவிலியத்தை [4] அதிகம் பயன்படுத்துகிறார் என்பது கூடுதல் தகவல்.

சமீபத்திய நிகழ்வுகள்

[தொகு]

1. ஜெபத்தோட்ட ஜெயகீதங்களின் 39 வது பாகமானது 2019 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

2. ஜெபத்தோட்ட ஊழியங்களின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாக் கொண்டாட்டங்கள் மார்ச் 2015 ல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது [5].

சர்ச்சைகள்

[தொகு]

1. பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள 'கடல்' திரைப்படம் 'பெர்க்மான்ஸ்' என்ற பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் , கிறிஸ்தவர்களின் மனதைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியினர் மணிரத்னத்தை கைது செய்யக்கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜை நேரில் சந்தித்து இது தொடர்பான புகார் மனுவை அளித்தனர்.[6]

2. பெர்க்மான்ஸ் தனியொரு இயக்கமாக, ஓர் இறைத்தொண்டு அறக்கட்டளையாக பிரிந்த பின்னரும் இன்னும் ஏன் "தந்தை" என்று அடைமொழி இட்டுகொள்கிறார்? இன்னும் ஏன் பொதுக்கூட்டங்களில் பாதிரியாருக்குரிய அங்கியிலே தொடர்கிறார் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர் சிலர் முனுமுனுக்கிறனர் [7].

வெளியீடுகள்

[தொகு]

இசைத்தட்டு

மொழி எண்ணிக்கை
தமிழ் 41
துதி & ஆராதனை 2
ஆங்கிலம் 3
இந்தி 16
மலையாளம் 5
தெலுங்கு 5
கன்னடம் 4
சிங்களம் 1

புத்தகங்கள்

மொழி தலைப்பு
தமிழ் திருக்கரத்தின் இசைக்கருவி

வெளி இணைப்புகள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. "அருட்தந்தை பெர்க்மான்ஸ்". தினகரன் நாளிதழ். 11 டிசம்பர் 2013. Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Google Books". திருக்கரத்தின் இசைக்கருவி. 1 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "கிறிஸ்தவ ஊடகம்-Christian Media". Yauwana Janam. 5 பெப்ருவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "தந்தை S J பெர்க்மான்ஸ்". Celon Christian. 1 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகஸ்டு 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |1= (help)
  5. "ஜெபத்தோட்ட ஊழியம்". jebathottamministries. 20 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "'கடல்' படத்திற்கு கிறிஸ்தவ அமைப்பு எதிர்ப்பு!". http://www.vikatan.com/. 4 பெப்ருவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2015. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |work= (help)
  7. "Divine Word TV, Mangalore: Beware of Pentecostal preachers and New Age". http://ephesians511blog.com/. 2 பெப்ருவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2015. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |work= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜே._பெர்க்மான்ஸ்&oldid=4041193" இலிருந்து மீள்விக்கப்பட்டது