அலெக்சாந்திரியா திடீர்த் தாக்குதல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அலெக்சாந்திரியா திடீர்த் தாக்குதல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் பகுதி | |||||||
ஒரு இத்தாலிய மாந்தரியக்க நீர்மூழ்கிக் குண்டு |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் | இத்தாலி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சார்லஸ் மார்கன் | லுயிகி டூரண்ட் டி லா பென் ஜூனியோ வலேரியோ போர்கீஸ் |
||||||
பலம் | |||||||
1 நீர்மூழ்கிக் கப்பல் 3 மாந்தரியக்க நீர்மூழ்கிக் குண்டுக்கள் |
|||||||
இழப்புகள் | |||||||
2 போர்க்கப்பலகள் மூழ்கடிக்கப்பட்டன 1 டெஸ்ட்ராயர் சேதம், 1 எரிபொருள் தாங்கி சேதம், 8 பேர் கொல்லப்பட்டனர் | 6 பேர் கைது செய்யப்பட்டனர் |
அலெக்சாந்திரியா திடீர்த் தாக்குதல் (Raid on Alexandria) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த திடீர்த் தாக்குதல். நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்த அலெக்சாந்திரியா துறைமுகத்தைத் தாக்கிய இத்தாலிய அதிரடிப் படை வீரர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு போர்க்கப்பல்களை மூழ்கடித்தனர்.
வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் நடந்து கொண்டிருந்த போது, இரு தரப்பினருக்கும் நடுநிலக்கடல் வழியாக தளவாடங்கள் அனுப்பப்பட்டன. எனவே நடுநிலக்கடலைக் கட்டுப்பட்டுத்த இத்தாலியக் கடற்படைக்கும் பிரிட்டானியக் கடற்படைக்கும் கடும் சண்டை நிகழ்ந்து வந்தது. நடுநிலக்கடலில் அமைந்துள்ள மால்டா தீவு தளத்திலிருந்து இத்தாலிய சரக்குக் கப்பல் கூட்டங்களை பிரிட்டானியக் கடற்படையும் வான்படையும் தாக்கி வந்தன. பிரிட்டானியக் கடற்படையின் இன்னொரு பிரிவு அலெக்சாந்திரியா துறைமுகத்திலிருந்து அச்சு நாட்டுக் கடற்படையினைத் தாக்கி வந்தது. இதனால் அலெக்சாந்திரியா துறைமுகத்தை இரகசியமாகத் தாக்கி அங்கு நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை மூழ்கடிக்க இத்தாலியர்கள் திட்டமிட்டனர்.
டிசம்பர் 19, 1941ல் ஸ்கிரே (Scire) என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மூன்று மாந்தரியக்க நீர்மூழ்கிக் குண்டுக்கள் அலெக்சாந்திரியா வர்த்தகத் துறைமுகத்தின் மீது ஏவப்பட்டன. துறைமுகத்திலிருந்து 2.1 கிமீ தொலைவில் இவை கடலில் ஏவப்பட்டன. ஒவ்வொரு நீர்மூழ்கிக் குண்டுவிலும் இரு மாலுமிகள் இருந்தனர். அலெக்சாந்திரியா வர்த்தகத் துறைமுகத்தை அடைந்து அருகிலிருந்த பிரிட்டானியக் கடற்படைத் தளத்தினுள் இரகசியமாக புகுந்த அவர்கள் அங்கிருந்த கப்பல்களின் அடிப்பகுதியில் கண்ணி வெடிகளைப் பொருத்தினர். இக்கண்ணி வெடிகள் வெடித்ததால் எச். எம். எசு வேலியண்ட், எச். எம். எஸ் குயின் எலிசபெத் என்ற இரு பிரிட்டானிய போர்க்கப்பல்கள் மூழ்கின. மேலும் நார்வே நாட்டு எரிபொருள் தாங்கிக் கப்பலான சகோனாவும், பிரிட்டானிய டெஸ்டிராயர் ரக போர்க்கப்பல் எச். எம். எசு ஜெர்விஸ் ஆகியவை பெரும் சேதமடைந்தன. இத்தாக்குதலில் ஈடுபட்ட ஆறு இத்தாலிய மாலுமிகளும் கைது செய்யப்பட்டனர். இத்தாக்குதலின் வெற்றியால் கிழக்கு நடுநிலக் கடல் பகுதியில் இத்தாலிய கடற்படையின் கை ஓங்கியது. அடுத்த ஆறு மாத காலத்துக்கு இப்பகுதியில் இத்தாலிக்கு கடல் ஆளுமை கிட்டியது. இதனால் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையிலிருந்த அச்சுப் படைகளுக்கு தளவாடங்கள் தடையின்றி கடல் வழியாக அனுப்பப்படலாயின.