ஹானி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹானி அல்லது ஹோ மக்கள் (Hani people or Ho people) என்பது தெற்கு சீனா, வடக்கு லாவோஸ் மற்றும் வியட்நாம் நாடுகளில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 தேசிய இனங்களில் ஒன்றாகவும், வியட்நாமின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 54 இனக்குழுக்களில் ஒன்றாகவும் உள்ளனர். லாவோஸில் ஹானி மக்கள் பொதுவாக ஹோ மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

குடியிருப்பு[தொகு]

இன்றைய ஹானி மக்களில் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேலான மக்கள் தெற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் வாழ்கின்றனர். இது ஐலாவ் மலைகளின் குறுக்கே, மீகாங் மற்றும் சிவப்பு நதிகளுக்கு (யுவான்ஜியாங் நதி) இடையே அமைந்துள்ளது. வியட்நாமின் இலாய் சாவ் மற்றும் இலாவ் காய் மாகாணங்களில் ஏறத்தாழ 12,500 ஹானி மக்கள் வாழ்கின்றனர். லாவோஸில் சீன மற்றும் வியட்நாமிய எல்லைகளுக்கு அருகில் உள்ள ஃபோங்சாலி மாகாணத்தின் மலைப்பாங்கான வடக்குப் பகுதிகளில் ஹோ மக்கள் வாழ்கின்றனர்.

வரலாறு[தொகு]

ஹானி மக்களின் வரலாறு துல்லியமாக அறியப்படவில்லை. இருப்பினும் அவர்களின் மூதாதையர்களாக கருதப்படும் பண்டைய கியாங் பழங்குடியினர், கி.பி மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் திபெத்திய பீடபூமியிலிருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது. ஹானி மக்களின் வாய்வழி மரபுகள் அவர்கள் யி மக்களிடமிருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் ஐம்பது தலைமுறைகளுக்கு முன்பு ஒரு தனி பழங்குடியினராகப் பிரிந்தனர் என்றும் கூறுகின்றன.

கலாச்சாரம்[தொகு]

பொதுவாக மண், கல் மற்றும் மூங்கில் மரத்தால் கட்டப்பட்ட ஹானி மக்களின் வீடுகள் இரண்டு அல்லது மூன்று மாடிகள் கொண்டிருக்கும்.

ஹானி மக்களின் பாரம்பரிய ஆடை அடர் நீல நிற துணியால் ஆனது. ஆண்கள் குறுகிய சட்டைகள் மற்றும் நீண்ட அகலமான பேன்ட் அணிவார்கள். அவர்கள் வெள்ளை அல்லது கருப்பு தலைப்பாகைகளையும் அணிவார்கள். பெண்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு ஆடை அணிவார்கள். ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆடைகளில் பாலின வேறுபாடு இருப்பதில்லை.

ஹானி மக்களின் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.[1] அவர்கள் புல்லாங்குழல் போன்ற லேபி (俄比). மற்றும் வீணை போன்ற லஹே எனப்படும் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைக்கிறார்கள். இந்த மக்களின் பிரதான தொழில் விவசாயம்.[2]

ஹானி மக்கள் பலதெய்வ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள். அவர்கள் தங்கள் மூதாதையர்களின் ஆவிகளை சிறப்பு வழிபாடு செய்கின்றனர். அவர்கள் வெவ்வேறு கடவுள்களை வணங்குவதற்கும், கடவுள்களின் பாதுகாப்பைப் பெறுவதற்கும் பல சடங்குகளை கடைப்பிடிக்கின்றனர்.[2]

ஹானி மக்கள் பெரும்பாலும் சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தின் லோலோ-பர்மியக் கிளையைச் சேர்ந்த ஹானி மொழி பேசுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹானி_மக்கள்&oldid=3899045" இலிருந்து மீள்விக்கப்பட்டது