வேலி (எல்லை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீடொன்றைச் சுற்றி அமைக்கப் பட்டுள்ள வேலி. கிடுகு எனப்படும் பின்னப்பட்ட தென்னோலையைப் பயன்படுத்தி உருவாகப்பட்டது. இதன் அமைப்புச் சட்டகம் உயிருள்ள தாவரங்களாகும்.

வேலி என்பது ஒரு நில அளவைக்கான அலகாகவும் தமிழ் நாட்டில் பயன்படுத்தப் படுகின்றது. ஆனால் இக்கட்டுரை நிலப் பகுதிகளைச் சுற்றி அமைக்கப்படும் வேலிகள் பற்றியதாகும்.

வேலி என்பது கட்டிடங்களுக்கு உரிய நிலம், பயிர்ச் செய்கைக்குரிய நிலம் மற்றும் பலவகையான நிலப் பகுதிகளைச் சுற்றியும், சில வேளைகளில் ஒரே நிலப்பகுதிக்குள் சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் அல்லது செயற்பாடுகளுக்கான பகுதிகளைப் பிரித்து ஒதுக்கும் வகையிலும், மறைப்புக்காகவும் அமைக்கப்படுவதாகும். எல்லைகளில் அமைக்கப்படும் வேலிகள் எல்லை வேலிகள் என அழைக்கப்படுகின்றன.

வேலியும், மதிலும்[தொகு]

மதில் அல்லது மதில் சுவர் என்பதும் எல்லைகளில் பாதுகாப்புக்காகக் கட்டப்படும் அமைப்பினைக் குறித்தாலும், நிரந்தரமான, திடப் பொருளால், அதனூடு பார்க்க முடியாதவாறு உள்ளவற்றையே இவ்வாறு அழைப்பது வழக்கம். வேலி பெரும்பாலும் நீடித்து உழைக்காத பொருட்களால் அமைக்கப்படுவதுடன், பொதுவாக இலகுவான கட்டுமானங்களாகவும், ஊடாகப் பார்க்கக்கூடிய தன்மை கொண்டவையாகவும் இருக்கும். வேலிகள் அமைப்பதற்கான செலவும், மதில்களோடு ஒப்பிடும் போது குறைவே.

வேலியும் செயற்பாட்டுத் தேவைகளும்[தொகு]

வேலிகள் பல்வேறுவகையான தேவைகளுக்காக அமைக்கப்படுகின்றன. வெளி ஊடுருவல்களிலிருந்து பாதுகாப்புக் கொடுத்தல் முக்கியமான தேவையாகும். வேலியே பயிரை மேய்வது போல என்ற பழமொழி பயிர்ச் செய்கை நிலங்களில் வேலியின் செயற்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்ற வேலிகள் ஆடு, மாடு மற்றும் அந்நிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவல்களைத் தடுப்பதுடன், பல சமயங்களில் வெளியிலிருந்து உள்ளே பார்ப்பதைத் தடுக்கும் மறைப்புகளாகவும் செயற்படுகின்றன. இலங்கையின் யாழ்ப்பாணக் கிராமங்கள் இத்தகைய வேலிகளுக்குப் பெயர் பெற்றவை. யாழ்ப்பாணத்தைப் பற்றி எழுதிய வெளிநாட்டார் பலர் அங்கிருந்த வேலிகள் பற்றிக் குறிப்பிடாமல் விட்டதில்லை.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மின்னுற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள், பாதுகாப்புப் படை முகாம்கள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. இவை பொதுவாக மனிதர் ஏறி உள்ளே புகமுடியாதபடி உயரமானவையாக அமைவதுடன், இவ்வாறு செய்வதற்குச் சிரமமான முள்ளுக் கம்பிகள் போன்ற பொருட்களையும் பயன் படுத்துவார்கள். காட்டுப் பகுதிகளில் யானைகள் போன்ற பெரிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் அழுத்தம் குறைந்த மின்சாரம் பாய்ச்சப்படும் மின்சார வேலிகளையும் அமைப்பதுண்டு.

மின்சார வேலி

வேலியடைப்பதற்கான பொருட்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலி_(எல்லை)&oldid=1914750" இலிருந்து மீள்விக்கப்பட்டது