வேமுரி சாரதாம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேமுரி சாரதாம்பா

வேமுரி சாரதாம்பா (Vemuri Saradamba) (1881-1899) என்பவர் 19 ஆம் நூற்றாண்டின் ஒரு இந்தியக் குழந்தை மேதை ஆவார். இவர் ஒரு கவிஞர், இசைக்கலைஞர், வீணை வாசிப்பவர் மற்றும் கலைஞரும் ஆவார். ஒரு பெண் குழந்தைக்கு அடிப்படைக் கல்வியைக் கூடக் கொடுப்பது விரும்பத்தகாததென்று நினைத்த சமூகத்தில் இசை, நடனம் போன்ற நுண்கலைகளைக் கற்றுக் கொடுப்பது கடும் பாவமெனக் கருதிய உயர் சாதிக் குடும்பங்களில் ஒரு பதின்பருவப் பெண்ணாக, தனது 19 வருட வாழ்க்கையின் குறுகிய காலத்தில், பெண் முன்னேற்றத்திற்குத் தன்னை முன்மாதிரியாகக் கொண்டவர் ஆவார்.[1]

வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

சாதாம்பா ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில் சமூக சீர்திருத்தவாதி, பன்முக மேதை, அறிஞர் மகாகவி தாசு ஸ்ரீராமுலு (1846-1908) மற்றும் ஜானகம்மா ஆகியோருக்கு ஆறு மகன்களுக்குப் பிறகு ஒரே மகளாகப் பிறந்தார். இவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள அல்லுரு அக்ரஹாரம் என்ற கிராமத்தில் (முடினப்பள்ளி மண்டலம்) பிறந்தார். கவிதை எழுதும் திறமையையும், இசையின் மீதான காதலையும் இவர் தனது தந்தையிடமிருந்து பெற்றார். இவரது திறமை மற்றும் அறிவுத் தாகத்தை உணர்ந்த ஸ்ரீராமுலு, சமூகத்தின் விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் எதிராக சிறுவயதிலிருந்தே சமசுகிருதத்தையும் இசையையும் கற்பித்தார். குறுகிய காலத்தில் வீணை வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இவர், தொலைதூர இடங்களில் பொதுக் கச்சேரிகளை நடத்தினார். இவர் 1888 ஆம் ஆண்டில் வேமுரி ராமச்சந்திர ராவை மணந்தார். துர்காம்பா என்ற மகளும் பார்த்தசாரதி என்ற மகனும் இருந்தனர். நுண்கலைகளில் இரசனை இல்லாததால், இவர் கணவர் அல்லது மாமியார், மாமனார் ஆகியோரிடமிருந்து ஊக்கமோ ஆதரவோ பெறவில்லை. [1]

இசை மற்றும் இலக்கியம்[தொகு]

சிறுவயதில் சாரதாம்பாவுக்கு இசை மற்றும் இலக்கியத்தின் மீது தீராத தாகம் இருந்தது. ஆறு வயதிலேயே மெல்லிசையாகப் பாடும் திறன் பெற்ற அவர், தனது 11வது வயதில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். இவர் கிருஷ்ணருடன் நாக்னஜிதியின் தெய்வீக திருமணத்தின் கதையான “நாக்னஜிதி பரிணயம்” என்ற கவிதையின் கவிஞராக அங்கீகரிக்கப்பட்டார். அறிஞர்கள் இவரது படைப்பை பிரபந்தம் என்று பாராட்டினர். மேலும் இவரது பாணி 15 ஆம் நூற்றாண்டின் சிறந்த கவிஞரான ' அதுகுரி மொல்லாவைப் போல ஈர்க்கக்கூடியதாக இருந்தது. [1] திருமணத்திற்குப் பிறகு, இந்தத் தடைகள் இருந்தபோதிலும், இவர் தனது எழுத்துக்களைத் தொடர்ந்தார். பெண்களின் பாகுபாடு, ஒடுக்குமுறை மற்றும் இவரது காலப் பிரச்சனைகள் குறித்து பல கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதினார். அவை “ஞான பத்திரிகா” மற்றும் “ஞானோதய பத்திரிகா” இதழ்களில் வெளியிடப்பட்டன. இவர் தனது கவிதைகளை கடவுளின் மகிமைக்காக அர்ப்பணித்தார். இவர் 100 கவிதைகள் கொண்ட, “மாதவ சதகமு” ஒரு படைப்பை எழுதினார். பெண்கள் தங்கள் நலனுக்காக தங்கள் பெண்களுக்கு கல்வி கற்பதற்கு மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யும் பரிதாபகரமான நிலையை சித்தரித்தார். [1]

1899 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தனது மகனைப் பெற்ற பிறகு இவர் 19 வயதில் இறந்தார்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Atchuta Rao, Dasu (July–September 2015). "Vemuri Saradamba: Champion of Girl’s Education" (in English). Triveni 84 (3): 6–8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேமுரி_சாரதாம்பா&oldid=3809589" இலிருந்து மீள்விக்கப்பட்டது