உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளங்குமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளங்குமரன் (Vellan Kumaran) என்பவர் முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் இளவரசன் இராஜாதித்தர் கீழ் பெரும்படை நாயகராக (படைத்தலைவர்) இருந்தவராவார். இவர் சேரநாட்டின் இராசசேகரன் என்பவரின் மகனாக கேரளத்தின் திருநந்திக்கரைப் புதூரில் பிறந்தவர்.[1]

பராந்தகன் தன் பேரரசைக் தன் வட எதிரிகளிடமிருந்து காக்க முன் ஏற்பாடுகள் செய்திருந்தார். அதன்படி நடுநாட்டின் ஒரு பகுதியான திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரை அடுத்த ‘கிராமம்’ என்னும் இடத்தில் பராந்தகனின் முதல் மகனான இராசாதித்தன் பெரும் படையுடன் இருந்து வந்தார். அப்படைக்கு வெள்ளங்குமரன் தலைமை பூண்டவனாக இருந்தார்.[2]

கி.பி. 949 இல் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழனின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் தக்கோலப் போரில் மோதின. அப்போரில் என்ன காரணத்தினாலோ வெள்ளங்குமரன் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. அப்போரில் கங்க மன்னன் இரண்டாம் பூதுகனின் (கன்னரதேவனின் மைத்துனன்) அம்பினால் சோழ இளவரசர் இராஜாதித்தர் கொல்லப்பட்டார். உரிய நேரத்தில் இளவரசருடன் இருக்கமுடியாத நிலை ஏற்பட்டதை எண்ணி வெள்ளங்குமரன் மனம் வருந்தினார். இதன் பிறகு தன் பதவியை விட்டு விலகி உலக பற்றுகளை விடுத்து கங்கையை நோக்கி பயணம் மேற்கொண்டு புனித நீராடினார். பல தலங்களை தரிசித்து, ஒற்றியூர் வந்து சேர்ந்தார். ஒற்றியூரில் உள்ள நிரஞ்சன குருவின் குகையில் தங்கி இருந்தபோது ஞானப் பெற்றார். பின்னர் அக்குகையை நிர்வகிக்கும் நிலையை அடைந்தார். சதுரானன் என்ற பெயர் பூண்டு ஒற்றியூர் மடத்தின் தலைவராகவும் ஆனார்.[1]

திருப்பணிகள்

[தொகு]

தளபதியாக இருந்த வெள்ளங்குமரன் கி.பி.943-இல் பெண்ணையாற்றங்கரையில் உள்ள திருநாவலூரில் இருந்த ஆற்றுத்தளி என்னும் சிவன் கோயிலை கற்றளியாக்கி அதற்கு வேண்டிய நிவந்தங்களையும் அளித்தார். இதை அங்கு உள்ள சிவலோகநாதசாமி கோயிலில் உள்ள இவனது இரண்டு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.[1]

சதுரானன் என்ற பெயரில் துறவு பூண்ட பிறகு ஒற்றியூர் ஆதிபுரீசுவர் கோயிலில் தன் பிறந்த அவிட்ட நட்சத்திரத்தின்போது கோயில் இறைவனுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக நரசிங்கமங்கலம் அவையினரிடம் 100 பொன் அளித்ததார் என்பதை கி.பி. 959 ஆம் ஆண்டய இவரது கல்வெட்டு தெரிவிக்கிறது.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "பண்டிதரான படைத்தலைவர்". Hindu Tamil Thisai. 2023-05-14. பார்க்கப்பட்ட நாள் 2023-05-19.
  2. டாக்டர். மா. இராசமாணிக்கனார், சோழர் வரலாறு, 3. முதற் பராந்தக சோழன்,
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளங்குமரன்&oldid=3904928" இலிருந்து மீள்விக்கப்பட்டது