விளாங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விளாங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் பேராவூரணிக்குக் தென் கிழக்கில் 12 கிமீ தொலைவில் உள்ளது. விளா மரங்கள் அதிகம் காணப்பட்டதால் இவ்வூர் விளாங்குளம் என்றழைக்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி[தொகு]

திருவிளாமுடைய தம்பிரான் என்றும் அட்சயபுரீசுவரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். குறையாத செல்வத்தை அருளச் செய்கின்ற இறைவனோடு மென்மேலும் பெருக வைக்கின்ற அபிவிருத்திநாயகி என்ற பெயரில் இறைவி உள்ளார்.[1]

வரலாறு[தொகு]

சூரியனின் இரு மகன்களான சனீச்சுரனுக்கும், எமதருமனுக்கும் இடையே ஏற்பட்ட பகையின் காரணமாக சனீசுவரனை எமன் அடிக்கவே, எமனின் காலில் ஊனம் ஏற்பட்டது. இதனால் சனீசுவரன் மனித உருவெடுத்து பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது இப்பகுதியைக் கடந்து சென்றார். ஒரு விளாமரத்தின் வேர் இடறியது. அப்போது ஒரு பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்த நாள் சித்திரை வளர்பிறை, பூசம் நட்சத்திரம், சனிக்கிழமை அனைத்தும் ஒன்று சேர்ந்த நாளாக அமைந்தது. சனீசுவரன் விழுந்த பள்ளம் பூசஞானவாவி என்னும் புனித தீர்த்தமானது. இறைவன் அருளால் கால் ஊனம் நீங்கியது.[1]

திருவிழாக்கள்[தொகு]

அட்சய திருதியை இக்கோயிலில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திர நாள்கள் சிறப்பு பெற்ற நாளாக இக்கோயிலில் அமைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014