வியன்னா மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியன்னா மாநாட்டுப் பேராளர்கள்.
யோன்-பப்டிசுட் இசபே (Jean-Baptiste Isabey) என்பவர் வரைந்த வியன்னா மாநாடு என்னும் தலைப்பிட்ட ஓவியம், (1819). போர்களில் பங்குபற்றிய எல்லா நாடுகளும் அழைக்கப்பட்டு இருந்த போதிலும், முக்கிய பேச்சுக்கள் "பெரிய நான்கு" என அழைக்கப்பட்ட பிரித்தானியா, உருசியா, பிரசியா, ஆசுத்திரியா ஆகிய நாடுகளிடையேயே இடம்பெற்றன. பின்னாளில் முடியாட்சிப் பிரான்சும் சேர்ந்து கொண்டது.

வியன்னா மாநாடு என்பது, 1814 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 1815 ஆண்டு யூன் மாதம் வரையில், ஆசுத்திரிய அரசியலாளர் கிளெமென்சு வென்செல் வொன் மெட்டெர்னிச் (Klemens Wenzel von Metternich) தலைமையில் நடந்த ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்கான மாநாடு ஆகும்.[1] பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள், நெப்போலியப் போர்கள், புனித ரோமப் பேரரசு கலைப்பு போன்றவற்றினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்றை எட்டுவதே இந்த மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டின் விளைவாக ஐரோப்பாவின் அரசியல் நிலப்படம் பல மாற்றங்களுக்கு உட்பட்டது. பிரான்சு, வார்சோ டியூச்சகம், நெதர்லாந்து, ரைன் நாடுகள், செருமன் மாகாணமான சக்சனி, பல்வேறு இத்தாலிய ஆட்சிப்பகுதிகள் என்பவற்றுக்குப் புதிய எல்லைகள் உருவாயின. அத்துடன், உள்நாட்டு மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலுமான பிரச்சினைகளில், ஆசுத்திரியா, பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியவை தலையிடுவதற்கான செல்வாக்கு மண்டலங்களும் உருவாயின. ஐரோப்பாவின் நாடுகளிடையே ஒத்திசைவை ஏற்படுத்தி, அமைதியான அதிகாரச் சமநிலையை எட்டும் நோக்கில் இடம்பெற்ற பல்வேறு பன்னாட்டுச் சந்திப்புக்களில் இது முதலாவது ஆகும். இம் முயற்சிகள், பிற்காலத்தில் உருவான உலக நாடுகள் சங்கம், ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றுக்கான மாதிரியாகவும் தொழிற்பட்டன.

நெப்போலியப் பிரான்சு தோல்வியடைந்து, 1814 மே மாதத்தில் சரண் அடைந்ததோடு, 25 ஆண்டுகாலம் ஏறத்தாழத் தொடர்ச்சியாக இடம்பெற்ற போர்கள் முடிவுக்கு வந்ததே இம் மாநாட்டுக்கான கிட்டிய பின்னணியாக இருந்தது. நாடுகடந்து வாழ்ந்த நெப்போலியன் மீண்டு வந்து, 1815 மார்ச்சுக்கும் யூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் நூறு நாட்கள் பிரான்சின் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மீண்டும் போர் வெடித்த போதும் வியன்னா மாநாட்டுப் பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்றன. நெப்போலியன், 1815 யூன் 18 ஆம் தேதி வாட்டர்லூவில் இறுதித் தோல்வியைச் சந்திப்பதற்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் மாநாட்டின் இறுதி ஒப்பந்தச் சட்டமூலம் கைச்சாத்தானது.

"வியன்னா மாநாடு" ஒரு முறையான மாநாடு என்று சொல்ல முடியாது. இம் மாநாட்டுக்கான முழு அமர்வுக் கூட்டம் எதுவும் இடம்பெறவில்லை. பெரும்பாலான பேச்சுக்கள் ஆசுத்திரியா, பிரான்சு, உருசியா, பிரித்தானியா, பிரசியா ஆகியவற்றுக்கு இடையே முறைசாராத நேரடிப் பேச்சுக்களாகவே இருந்தன. பிற பேராளர்களின் பங்கு மிகக் குறைவாக அல்லது முற்றாகவே இல்லாமல் இருந்தது. ஒரு கண்டம் தழுவிய அளவில் பல நாடுகளின் பேராளர்கள் ஒரே இடத்தில் கூடி ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க முனைந்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்னர் நாடுகளின் தலைநகரங்களுக்கு இடையே தூதுவர்கள் மூலமும் தகவல்களை அனுப்புவதன் மூலமுமே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சில மாற்றங்கள் ஏற்பட்ட போதும், வியன்னா மாநாட்டில் எட்டப்பட்ட தீர்வே, 1914 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் ஏற்படும் வரை ஐரோப்பாவின் பன்னாட்டு அரசியலின் அடிப்படையாக அமைந்திருந்தது.

வியன்னா மாநாட்டு ஒப்பந்தச் சட்டமூலத்தின் முதற் பக்கம்

முன்னோடி நிகழ்வு[தொகு]

பிரான்சுக்கும் ஆறாவது கூட்டணிக்கும் இடையிலான பாரிசு ஒப்பந்தத்திலேயே பகுதித் தீர்வு ஏற்பட்டிருந்தது. கியெல் ஒப்பந்தத்தில் இசுக்கன்டினேவியா தொடர்பான விடயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. பாரிசு ஒப்பந்தம், வியன்னாவில் பொது மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என்பதை ஏற்றிருந்ததுடன், போரில் ஈடுபட்ட எல்லா நாடுகளுக்கும் அழைப்பு அனுப்புவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.[2] இம் மாநாட்டை 1814 யூலையில் தொடங்குவதற்கும் காலம் குறித்திருந்தனர்.[3]

பேராளர்கள்[தொகு]


  1. ஐக்கிய இராச்சியம் ஆர்தர் வெலெசுலி, வெலிங்டனின் முதல் டியூக்
  2. சோக்கிம் லோபோ டா சில்வேரா
  3. ஆன்டோனியோ டி சல்தான்கா டா காமா
  4.  சுவீடன் கவுன்ட் கார்ல் லோவென்னியெல்ம்
  5. பிரான்சு சோன்-லூயி-பால்-பிராங்கோயிசு, நொவயிலின் ஐந்தாம் டியூக்
  6. ஆஸ்திரியா கிளமென்சு வென்செல், இளவரசர் வொன் மெட்டெர்னிச்
  7. பிரான்சு ஆன்ட்ரே டுப்பின்
  8. உருசியா கவுன்ட் கர்ல் ராபர்ட் நெசெல்ரோடே
  9. பெட்ரோ டி சூசா ஓல்சுட்டீன், பல்மேலாவின் கவுன்ட்
10. ஐக்கிய இராச்சியம் ராபர்ட் இசுட்டெவார்டு, விசுக்கவுன்ட் காசில்ரீக்
11. பிரான்சு எம்மேரிச் யோசேப், டல்பேர்க் டியூக்
12. ஆஸ்திரியா பாரன் யோகான் வொன் வெசன்பர்க்
13. உருசியா இளவரசர் ஆன்ட்ரே கிரிலோவிச் ராசுமோவ்சுக்கி
14. ஐக்கிய இராச்சியம் சார்லசு வேன், இலண்டன் டெரியின் மூன்றாம் மார்க்கெசு
15. எசுப்பானியா பெட்ரோ கோமெசு லாப்ரேடர், லாப்ரேடரின் மார்க்கெசு
16. ஐக்கிய இராச்சியம் ரிச்சார்டு லே போயெர் டிரெஞ்ச், கிளென்கார்த்தியின் 2ம் ஏர்ள்
17. வாக்கென் (பதிவாளர்)
18. பிரெட்ரிக் வொன் கென்ட்சு (மாநாட்டுச் செயலர்)
19. புருசிய இராச்சியம் பாரன் வில்கெல்ம் வொன் அம்போல்ட்டு
20. ஐக்கிய இராச்சியம் வில்லியம் காத்கார்ட், காத்கார்ட்டின் முதலாம் ஏர்ல்
21. புருசிய இராச்சியம் இளவரசர் கார்ல் ஆகசுட்டு வொன் ஆர்டென்பர்க்
22. பிரான்சு சார்லசு மொரிசு டி தலீரான்-பெரிகார்ட்
23. உருசியா கவுன்ட் குசுத்தாவ் ஏர்ன்ஸ்ட் வொன் இசுட்டக்கல்பர்க்

நான்கு பெரிய வல்லரசுகளும் போர்பான் பிரான்சும்[தொகு]

நான்கு பெரிய வல்லரசுகளும் முன்னரே ஆறாவது கூட்டணியை உருவாக்கி இருந்தனர். நெப்போலியன் தோல்வியுறும் நிலையில் இருந்தபோது இவ்வல்லரசுகள் தமது பொது நிலைப்பாட்டை சோமொன்ட் ஒப்பந்தம் (மார்ச் 1814) மூலம் உருவாக்கி இருந்தனர். பிரான்சில் பர்பன் வம்ச ஆட்சி மீள்விக்கப்பட்ட பின்னர் அவர்களுடன் பேச்சு நடத்தி அதே ஆண்டில் பாரிசு ஒப்பந்தத்தையும் உருவாக்கினர். நான்கு வல்லரசுகள் சார்பிலும், பர்பன் பிரான்சின் சார்பிலும் பின்வருவோர் பேராளர்களாகக் கலந்து கொண்டனர்:

  • ஆசுத்திரியாவின் சார்பில் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் மெட்டர்னிச்சும் அவரது துணை அமைச்சர் பாரன் யொகான் வொன் வெசன்பேர்கும் கலந்து கொண்டனர். மாநாடு ஆசுத்திரியாவின் வியன்னாவில் நடைபெற்றதால், பேரரசர் பிரான்சிசுக்கும் உடனடியாக விவரங்கள் தரப்பட்டன.
  • ஐக்கிய இராச்சியத்தின் சார்பில் முதலில் வெளியுறவுச் செயலர் விசுக்கொன்ட் காசில்ரீகு கலந்துகொண்டார். இவர் இங்கிலாந்துக்குத் திரும்பிய பின்னர் பெப்ரவரி 1815க்குப் பின்னர் டியூக் வெலிங்டன் பங்குபற்றினார். இவரும் நெப்போலியனுடனான "நூறு நாட்கள்" போருக்குச் சென்ற பின்னர் கடைசிச் சில கிழமைகள் ஏர்ல் கிளன்கார்த்தி கலந்து கொண்டார்.
  • உருசியாவின் பேராளர்களுக்கு அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் கவுன்ட் கார்ல் ராபர்ட் நெசெல்ரோடு தலைமை வகித்துச் சென்றிருந்த போதும், சார் மன்னர் முதலாம் அலெக்சாண்டரும் பெயரளவில் தானே முழு அதிகாரம் பெற்ற பேராளராக வியன்னாவில் இருந்தார்.
  • பிரசிய நாட்டுப் பேராளர்களாக இளவரசர் கார்ள் ஆகசுட்டு வொன் ஆர்டன்பர்கும், இராசதந்திரியும் அறிஞருமான விலெம் வொன் அம்போல்டும் கலந்துகொண்டனர். அரசர் மூன்றாம் வில்லியமும் வியன்னாவில் இருந்து பின்னணியில் பங்களித்து வந்தார்.
  • பிரான்சின் சார்பில் அதன் வெளியுறவு அமைச்சர் சார்லசு மாரீசு டி தலீரான்-பெரிகார்ட் என்பவரோடு முழு அதிகாரம் கொண்டவராக டியூக் தல்பர்கும் சென்றிருந்தார். தலீரான் ஏற்கெனவே பிரான்சின் அரசர் பதினெட்டாம் லூயியின் சார்பில் பாரிசு ஒப்பந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டவர். ஆனாலும் தலீரான்டை நம்பாத அரசர் மெட்டர்னிச்சுடன் கடித மூலம் இரகசியமாகவும் பேச்சு நடத்தி வந்தார்.

1814 ஆம் ஆண்டின் பாரிசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நான்கு நாடுகள்[தொகு]

இந்நாடுகள் முதலில் .கையெழுத்தான சோமொன்ட் ஒப்பந்தத்தில் பங்கு பெறவில்லை. ஆனால், பாரிசு ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

பிறர்[தொகு]

ஐரோப்பாவில் இருந்த ஒவ்வொரு நாட்டுக்கும் வியன்னாவில் பேராளர்கள் இருந்தனர். 200க்கும் மேற்பட்ட நாடுகளும், சிற்றரசுகளும் வியன்னா மாநாட்டுக்குப் பேராளர்களை அனுப்பியிருந்தனர். இவற்றோடு, நகரங்கள், கூட்டாண்மைகள், மத அமைப்புக்கள் போன்றவற்றுக்கும்; காப்புரிமைச் சட்டங்கள், பத்திரிகைச் சுதந்திரம் என்பவற்றைக் கோரிய செருமன் பதிப்பாளர்கள் போன்ற சிறப்புக் குழுக்கள் என்பவற்றுக்கும் பேராளர்கள் இருந்தனர்.

குறிப்புகள்[தொகு]

  1. Bloy, Marjie (30 April 2002). "The Congress of Vienna, 1 November 1814 – 8 June 1815". The Victorian Web. பார்க்கப்பட்ட நாள் 2009-01-09.
  2. Article XXXII. See Harold Nicolson, The Congress of Vienna, chap. 9.
  3. King, David (2008). Vienna 1814; how the conquerors of Napoleon made love, war, and peace at the Congress of Vienna. Crown Publishing Group. பக். 334. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-307-33716-0. https://archive.org/details/vienna1814howcon00king. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியன்னா_மாநாடு&oldid=3766095" இலிருந்து மீள்விக்கப்பட்டது