உள்ளடக்கத்துக்குச் செல்

நேரடி பரப்புகை செயற்கைக்கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விண்ணின்று வீடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வீட்டுக் கூரைமீது பொருத்தப்பட்டுள்ள ஓர் விண்ணின்று வீடு அலைவாங்கி

நேரடி பரப்புகை செயற்கைக்கோள் (Direct broadcast satellite, DBS) என வீடுகளுக்கு அல்லது தனிநபர்களுக்கு ஒளிபரப்புகின்ற செய்மதித் தொலைக்காட்சிகள் குறிப்பிடப்படுகின்றன. இது பரவலாக விண்ணின்று வீடு (direct-to-home, DTH, டிடிஎச்) என அறியப்படுகிறது.[1] துவக்கத்தில் கம்பிவடம் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படுவதற்காக சில அலைவரிசைகளை மட்டுமே கொண்டு 1.7 மீட்டர் விட்ட அலைவாங்கிகளை பயன்படுத்தி வந்தன. தற்போது எண்ணிமத் தொலைக்காட்சி நுட்பத்துடன் கட்டணத் தொலைக்காட்சியாக வழங்கப்படும் இக்குறிப்பலைகளை தொழில்நுட்ப மேம்பாடு, உயர் அதிர்வெண் அலைக்கற்றை மற்றும் உயர்ந்த செயற்கைக்கோள் வெளிப்படு ஆற்றல் ஆகிய காரணங்களால் மிகச்சிறிய அலைவாங்கிகளைக் கொண்டு தற்காலத்தில் நிகழ்ச்சிகளைப் பெற முடிகிறது.

வீட்டுக் கூரைகளிலும் சுவர்களிலும் டிடிஎச் அலைவாங்கிகள்

விண்ணின்று வீடு தொலைக்காட்சி சேவையில் சேவை வழங்கும் நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிகழ்ச்சி தயாரிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பெறுகின்றனர். பின்னர் இவற்றுடன் தங்கள் இடைமுகத்தையும் இணைத்து ஒரே அலைக்கற்றையாக விண்ணில் தாங்கள் வாங்கியுள்ள அல்லது வாடகைக்கு எடுத்துள்ள செயற்கை கோளின் தொலைக்காட்சி மின்னியல் பகுதிக்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து செயற்கை கோள் பார்க்கும் நிலப்பரப்பு முழுமைக்கும் தங்கள் அலைகளை எண்ணிம கட்டுடைய அணுக்க முறைமையில் பரப்புகின்றனர். இவர்களிடம் சந்தா கட்டிய வீட்டுப் பயனர்கள் தங்களது வீட்டுக்கூரையில் பொருத்தப்பட்டுள்ள அலைவாங்கிகள் மூலம் பெற்ற குறிப்பலைகளை தொலைக்காட்சி அணுக்கப் பெட்டியின் உதவியுடன் தொலைக்காட்சிப் பெட்டிகளில் காண்கின்றனர். தாங்கள் விரும்பும் அலைவரிசைகளை மட்டும் அதற்கான கட்டணம் செலுத்திப் பார்க்கின்றனர்.[2][3]

வரலாறு

‎விண்ணின்று வீடு தொலைக்காட்சி முதன்முதலில் சோவியத் ஒன்றியத்தில் தொடங்கியது. 1976ஆம் ஆண்டில் எக்ரென் என்ற செயற்கைக்கோளிலிருந்து இயக்கியது. ஆனால் வணிகமயமான ஒளிபரப்பாக இருக்கவில்லை. வணிகமயமான சேவை 1989ஆம் ஆண்டில் பிரித்தானிய நிறுவனம் ஸ்கை டெலிவிசன் தொடங்கியது. அஸ்ட்ரா IA என்ற செயற்கைக்கோளின் வழியாக நான்கு அலைவரிசைகளைக் கொண்டு வான்வழி இலவசச் சேவையாக இது இருந்தது. 1991இல் கட்டுடைய அணுக்க முறைமையில் கட்டணத் தொலைக்காட்சியாக ஸ்கை டெலிவிசன் மாறியது. 1998-ல் ஸ்கை டெலிவிசன், ஸ்கை டிஜிட்டல் என்ற பெயரில் எண்ணிமத் தொலைக்காட்சி சேவை வழங்கலாயிற்று. BSkyB என அறியப்படும் இந்நிறுவனம் ஊடக வணிகர் ரூபர்ட் மர்டோக்கின் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

அமெரிக்காவில் நேரடி பரப்புகை பிரைம் ஸ்டார் என்ற நிறுவனத்தால் 1991ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. டைரக்ட் டிவி என்ற நிறுவனம் 1994இல் தனது சேவையைத் தொடங்கியது. அதே ஆண்டு பிரைம் ஸ்டாரும் எண்ணிமத் தொலைக்காட்சிக்கு மாறியபோதும் டைரக்ட்டிவியுடன் போட்டியிட முடியாது அதனுடன் இணைந்தது. 1996-இல் இகோஸ்டார் என்ற நிறுவனமும் டிடிஎச் சேவைகள் வழங்கத் தொடங்கியது.

2010 நிலவரப்படி, இந்தியாவில் ஏழு சேவையாளர்கள் டிடிஎச் சேவை வழங்குகின்றனர். இவர்கள் 110 மில்லியன் வீடுகளுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.விரைவிலேயே உலகின் மிகக் கூடுதலான டிடிஎச் பயனாளர்கள் உடைய நாடாக இந்தியா ஐக்கிய அமெரிக்காவை விஞ்சும் என மதிப்பிடப்படுகிறது. [4]

விண்ணின்று வீடு சேவையின் மேன்மைகள்

கம்பிவடம் அல்லது புவிப்புறத் தொலைக்காட்சி சேவைகளை விட விண்ணின்று வீடு சேவை பல மேன்மைகளைக் கொண்டுள்ளது. செயற்கைக்கோள் வழியாக சேவையாளரின் குறிப்பலைகள் இடையில் வேறெந்த சேவையாளரின் தடங்கலும் இன்றி நேரடியாகப் பயனரை அடைகிறது. இதனால் தொலைக்காட்சி துல்லியமாகவும் தெளிவாகவும் உள்ளது. புவிப்புறத் தொலைக்காட்சியின் தரம் அயனிகள் நிறைந்த வான்வெளியில் குறிப்பலைகள் நீண்டதொலைவுக்குப் பயனிப்பதால் மின் இரைச்சல் மற்றும் பிற குறிப்பலைகளின் இடையூற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாறாக நேரடிப் பரப்புகையில் குறிப்பலைகள் அயன மண்டலத்தில் மிகக் குறைந்த தொலைவே பயணிக்கின்றன. டிடிஎச் சேவையின் சில தனிப்பட்ட சிறப்பம்சங்கள்:

  • அலைவரிசைகளை தேர்ந்தெடுக்கும் உரிமை: கம்பிவடத் தொலைக்காட்சியில், கட்டுடைய அணுக்க முறைமை அறிமுகப்படுத்தப்படும் வரை, பயனாளர்கள் தாங்கள் விரும்பும் அலைவரிசைகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்துவதால் குறைந்த செலவில் வேண்டிய நிகழ்ச்சிகளை காண முடிகிறது.
  • கூடுதல் அலைவரிசைகள்: உள்ளூர் தொலைக்காட்சிகளை வழங்குவதில் கம்பிவடத் தொலைக்காட்சி மேம்பட்டாலும் நவீன தொழில்நுட்ப சுருக்கத்தை பயன்படுத்தி அலைவரிசைகளை அடுக்குவதால் டிடிஎச்சில் கூடுதல் அலைவரிசைகள் வழங்க முடிகிறது.
  • எட்டவியலாத நிலப்பகுதியிலும் சேவை: கம்பிவடம் மற்றும் புவிப்புறத் தொலைக்காட்சிகள் சேரவியலாத இடங்களுக்கும் டிடிஎச் சேவை எட்டுகிறது.
  • நம்பகத்தன்மை: கம்பிவட சேவையில் பிற நிலத்தடி சேவையாளர்கள் அகழ்வதாலும் பிற இயற்கை அழிவுகளாலும் ஏற்படும் தடங்கல்கள் டிடிஎச்சில் இல்லை. (கனத்த மழை சில மணித்துளிகள் பரப்புகையை பாதித்த போதிலும் சராசரி தடங்கல் நேரம் மிகவும் குறைவு)
  • எண்ணிமத் தொழினுட்பம்: டிடிஎச் சேவைகள் எண்ணிமத் தொழினுட்பத்தில் உள்ளதால் காட்சித்திரை திறன் கூடுதலாக உள்ளது. ஒலிதமும் ஒளிதமும் கூடவே பயணிப்பதால் இரண்டும் ஒரே தரத்தில் உள்ளன. மேலும் உயர் வரையறு தொலைக்காட்சி சேவைகளை வழங்க முடிகிறது.
  • ஊடாடும் அலைவரிசை சேவைகள்: பயனருடன் தொடர்பு கொண்டு அவர் விருப்பத்திற்கேற்ப நிகழ்ச்சிகளை டிடிஎச்சில் வழங்க முடியும்.
  • விருப்பத்தேர்வான நிகழ்ச்சிகள்: பயனாளர்களுக்கு விரும்பிய நிகழ்ச்சிகளை அவர் விரும்பும் நேரத்தில் காண (VOD) வழி செய்கிறது.
  • அகலப்பட்டை இணைய சேவை: நேரடி பரப்புகை செயற்கைக்கோள் மூலம் இரண்டு வழி அகலப்பட்டை இணைய சேவை வழங்க முடியும். இணையத்திலுள்ள சமூக வலைத்தளங்களையும் யூ டியூப் போன்ற ஒளித வழங்கி வலைத்தளங்களையும் கணினி இணைப்பின்றி நேரடியாகப் பெற இயலும்.

இலவச நேரடி பரப்புகை சேவைகள்

இலவச வான்வழி சேவைகள் (FTA) வழங்குவதில் செருமனி முன்னணியில் உள்ளது; அஸ்ட்ரா 19.2°E செயற்கைக்கோள் மூலம் 18 உயர் வரையறு தொலைக்காட்சிகள் உட்பட ஏறத்தாழ 200 எண்ணிம இலவச வான்வழி சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றை ஸ்கை டாய்ச்சுலாந்து வணிக சேவையை பயன்படுத்துவோர் காண இயலும். செருமனியின் அனைத்து அலைமருவி செயற்கைக்கோள் சேவைகளும் ஏப்ரல் 30, 2012 முதல் நிறுத்தப்பட்டன.[5][6]

ஐக்கிய இராச்சியத்தில் ஏறத்தாழ 160 எண்ணிம அலைவரிசைகள் எவ்வித மறையீடும் இன்றி அஸ்ட்ரா 28.2°E செயற்கைக்கோள் தொகுதியிலிருந்து ஒளிபரப்பப்படுகின்றன. இவற்றை எண்ணிம ஒளித பரப்புகை- செயற்கைக்கோள் (DVB-S) சீர்தரமுள்ள தொலைக்காட்சிப் பெட்டி மூலம் காணலாம். இவற்றில் பெரும்பாலானவற்றை ஸ்கை தொலைக்காட்சி சந்தாதாரர்களும் பெற இயலும்.

இந்தியாவின் தேசிய ஒளிபரப்பாளர், தூர்தர்சனும் "டிடி டைரக்ட் பிளஸ்" என்ற சேவை மூலம் 57 இலவச பரப்புகை அலைவரிசைகளை இன்சாட் 4B 93.5°E மூலம் பரப்பி வருகிறது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் காலக்சி 19 செயற்கைக்கோள் மூலம் 80 இலவச அலைவரிசைகள் ஒளிபரப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை சிறுபான்மையினருக்கான அல்லது சமயம் குறித்த அலைவரிசைகளாகும்.

சான்றுகோள்கள்

  1. "டிடிஎச் சர்வீஸும் முட்டாள் மக்களும்". 21 நவம்பர் 2011. அனாதி வலைப்பதிவு. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "டிடிஎச் தொழினுட்பம்". Archived from the original on 20 பெப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. MUKUL SHARMA (15 நவம்பர் 2009). "powerpoint presentation on direct to home service" (flash). authorstream.com. பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2010.
  4. "Thinking blue sky", Business Today, July 21, 2010.
  5. "ZDFneo, 3sat, BR, NDR, SWR, WDR, Phoenix, KiKa starten HD Kanäle". kabel-internet-telefon.de (in German). 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் 2012-04-08.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "HDTV: Neue HD-Kanäle von ARD und ZDF ab 30. April 2012". T-online.de (in German). 2012-01-20. பார்க்கப்பட்ட நாள் 2012-04-08.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்