விக்ரம் வேதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்ரம் வேதா  என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது ஒரு குற்றத் திகில் திரைப்படம் ஆகும். புஷ்கர் மற்றும் காயத்ரி  இத்திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.  ஆர். மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாரதா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். வை நாட் ஸ்டூடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டில்  படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டு  இத்திரப்படத்தின் திட்டம் உருவாக்கப்பட்டு நவம்பர் மாதமளவில் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஓர் தாதாவாக நடித்துள்ளார்.[1][2]

நடிப்பு[தொகு]

கதைச்சுருக்கம்[தொகு]

இத்திரைப்படத்தின் கதை பழங்கால இந்தியக் கதையான விக்ரமாதித்யன் வேதாளத்தின் கதையின் சாயலில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி ஒரு நேர்மையான தாதா இருவருக்கும் நடக்கும் மோதலே கதைக்களம். காவல்துறை ஆய்வாளரான விக்ரம், வேதா எனும் வில்லனின் கூட்டத்தை அழிக்க நினைக்கின்றான். வேதாவை விக்ரம் கொல்ல நினைக்கிற நேரங்களில் தனது கதைகளால் புதிர் போட்டு உண்மையான கொலைகாரர்களை விக்ரம் பிடிக்க வேதா திட்டம் வகுக்கிறான். அதனைச் செய்தும் முடிக்கிறான். [3]

சென்னையின் முக்கியத் தாதாவாக இருக்கும் வேதா (எனப்படும் விஜய் சேதுபதியை) என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று காவல்துறையில் சிறப்புப் படை ஒன்று அமைக்கப்படுகிறது. பிரேம் தலைமையிலான அந்தப் படையில் என்கவுண்டரில் கைதேர்ந்தவரான மாதவன் இருக்கிறார். பிரேமின் வழிகாட்டுதலின்படி விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்வதற்காக வேதாவை அந்தச் சிறப்புப் படை தேடி வருகிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்து இரகசிய தகவல் ஒன்று கிடைக்கிறது மாதவன் உள்ளிட்ட அந்தச் சிறப்புப் படை சம்பவ இடத்திற்குச் சென்று அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதில் குற்றவாளி இல்லாத ஒரு நபரையும் என்கவுண்டர் செய்து விடுகிறார்கள். மேலும் அந்த இறந்த நபரைக் குற்றவாளி என்றும் காவல்துறையில் அறிக்கையில் அறிவித்து விடுகிறார்கள் இது ஒருபுறம் இருக்க மாதவனுக்கு வழக்கறிஞராக இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில், முதல் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி இருக்கும் இடம் குறித்த தகவல் மீண்டும் கிடைக்க, இந்த முறை விஜய் சேதுபதியைக் கட்டாயம் என்கவுண்டர் செய்துவிட வேண்டும் என்று பெரிய படையே செல்கிறது. ஆனால், விஜய் சேதுபதி அவராகவே காவல் நிலையத்திற்கு நேரில் வந்து சரணடைகிறார். தனி ஆளாக வந்து சரணடைந்த விஜய் சேதுபதியிடம் மாதவன் விசாரணை நடத்துகிறார். அப்போது, தனது வாழ்க்கையில் நடந்த கதை ஒன்றைச் சொல்லும் விஜய் சேதுபதி, அதிலிருந்து கேள்வி ஒன்றைக் கேட்கிறார்.

மாதவன் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்ன உடனேயே, விஜய் சேதுபதிக்குப் பிணை கிடைத்து வெளியே சென்றுவிடுகிறார். விஜய் சேதுபதியை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிணையில் எடுக்கிறார். இந்நிலையில் பிரேம் கொலை செய்யப்படுகிறார் இதனிடையே மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் பிரிந்து விடுகின்றனர். பிரேமை கொலை செய்தது விஜய் சேதுபதி தான் என்று மாதவன், விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்யத் தேடி வருகிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்கிறார் பின்னர்ப் பிரேம் கொலை குறித்து விஜய் சேதுபதியிடம் மீண்டும் விசாரணை நடத்தும் மாதவனிடம், விஜய் சேதுபதி மீண்டும் ஒரு கதை சொல்லி கேள்வி கேட்கிறார்.

இவ்வாறாக வேதா(ளம்) எனப்படும் விஜய் சேதுபதி விக்ரம்(ஆதித்தன்) எனப்படும் மாதவனிடம் கதை சொல்லி, அதிலிருந்து கேள்வி கேட்டு, அதில் ஒரு புதிர் ஒன்றை வைக்கிறார். அந்தப் புதிருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடிக்கும் மாதவன் அதன் பின்னணியை எப்படிக் கண்டுபிடிக்கிறார்? அதில் என்ன உண்மை புதைந்து கிடக்கிறது? விஜய் சேதுபதி என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதாகச் செல்கிறது படத்தின் மீதிக்கதை.[4]

விருதுகள்[தொகு]

சிறந்த திரைக்கதைக்கான விகடன் விருதை இப்படத்திற்காக புஷ்கர் மற்றும் காயத்திரி பெற்றனர். அதேபோல சிறந்த பின்னனிப் பாடகருக்கான விகடன் விருதை அனிருத் ரவிச்சந்திரனும், சிறந்த வில்லனுக்கான விகடன் விருதை விஜய் சேதுபதியும் பெற்றனர். ஐ.எம்.டி.பி வெளியிட்ட 2017 ஆம் ஆண்டின் முதல் பத்து சிறந்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் விக்ரம் வேதா முதலிடத்தைப் பிடித்தது.

இசை[தொகு]

இத்திரைப்படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை உருவாக்கியவர் சாம் சி. எஸ். இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. டசக்கு டசக்கு பாடல் முதலில் ஜூன் 5, 2017 அன்று வெளிவந்தது. அதன்பின் ஒரு வாரம் கழித்து யான்ஜி பாடல் வெளியிடப்பட்டது. மொத்தப்படல்களும் மின்னிசையாக 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்டது. விமர்சகர்களால் நல்ல முறையில் விமர்சிக்கப்பட்டது.

பாடல்கள்[தொகு]

யான்ஜி யான்ஜி எனும் பாடலை அனிருத் ரவிச்சந்தர், சக்தி ஸ்ரீ கோபாலன், சத்யப்பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர், மோகன் ராஜன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.
கருப்பு வெள்ளை எனும் பாடலை சிவம், சி.எஸ்.சாம் ஆகியோர் பாடியுள்ளனர், விக்னேஷ் ஷிவன் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.
டசக்கு டசக்கு எனும் பாடலை முகேஷ், குணா, எம்.எல்.ஆர். கார்த்திகேயன் ஆகியோர் பாடியுள்ளனர், முத்தமிழ் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.
போகாத என்னவிட்டு எனும் பாடலை பிரதீப் குமார், நேஹா வேணுகோபால் ஆகியோர் பாடியுள்ளனர், சி.எஸ்.சாம் பாடல்வரிகளை எழுதியுள்ளார்.

வெளியீடு மற்றும் வசூல்[தொகு]

விக்ரம் வேதா திரைப்படத்திற்கு இந்திய மத்திய அரசின் திரைப்படத் தணிக்கை துறை முதலில் ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது. பிறகு திரைப்பட தயாரிப்பாளர்களால் மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட்டு 'யூ/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜூலை 7,2017 ஆம் தேதி வெளிவர இருந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் நடந்த திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் தள்ளிப்போடப்பட்டது. வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த வனமகன் மற்றும் இவன் தந்திரன் திரைப்பட உரிமையாளர்களை மீட்க இன்னும் சிறிது காலம் திரைப்பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் இத்திரைப்படம் 21 ஜூலை, 2017 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. 2017 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் பாகுபாலி இரண்டாம் பாகத்திற்குப் பிறகு இப்படம் வெளியான போது இரண்டாம் இடத்தில் இருந்தது. 11 கோடியில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. வெளியான முதல் வார இறுதியில் தமிழ்நாட்டில் மட்டும் 10 கோடியை இத்திரைப்படம் வசூல் செய்தது. உலகம் முழுவதும் 17 கோடியை வசூல் செய்தது. ஒரு வாரத்தில் உலகம் முழுவதுமிருந்து 40 கோடியை இத்திரைப்படம் வசூலித்தது. இரண்டாவது வாரமும் நன்றாக ஓடிய திரைப்படம், சென்னையில் மட்டுமே 50 நாட்கள் ஓடியது. இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்திரி, தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் திரை வாழ்க்கையில் நல்ல லாபம் ஈட்டிய திரைப்படமாக இப்படம் அமைந்தது. இத்திரைப்படம் அமெரிக்காவிலும் நல்ல வசூலை ஈட்டியது. அமெரிக்காவில் முதல் வாரத்திலேயே 3,60,000 அமெரிக்க டாலர்களை வசூலித்து அதிக வசூலை ஈட்டிய முதல் தமிழ்த்திரைப்படம் எனும் சதனையையும் படைத்தது. இத்திரைப்படத்தின் முடிவை பொதுமக்கள் அதிகமாக எதிர் நோக்குவதால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் ஒப்புக்கொண்டால் இரண்டாம் பாகம் வெளியிடப்படும் என்னும் அறிவிப்பை புஷ்கர் மற்றும் காயத்திரி வெளியிட்டுள்ளனர். மார்ச் மாதம் 15 ஆம் திகதி இத்திரைப்படத்தை இந்தி மொழியில் மறு உருவாக்கம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_வேதா&oldid=3660901" இருந்து மீள்விக்கப்பட்டது