விக்டோரியா கோபுரம்
விக்டோரியா கோபுரம் | |
---|---|
![]() வெசுட்மின்சுட்டர் மாளிகையின் பிரபுக்கள் சபை முனையில் அமைந்துள்ள விக்டோரியா கோபுரம் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கோபுரம் |
கட்டிடக்கலை பாணி | நிலைக்குத்து கோதிக் |
இடம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
ஆள்கூற்று | 51°29′57.5″N 00°07′29.1″W / 51.499306°N 0.124750°W |
நிறைவுற்றது | 1855 |
உயரம் | 98.5 மீட்டர்கள் (323 அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | சார்லசு பாரி |
விக்டோரியா கோபுரம் என்பது இலண்டனில் உள்ள வெசுட்மின்சுட்டர் மாளிகையின் தென்மேற்கு அந்தலையில் அமைந்துள்ள சதுரத் தள வடிவம் கொண்ட ஒரு கோபுரம். இது தெற்கிலும் மேற்கிலும் பிளாக் ராட் பூங்காவும், பழைய மாளிகை முற்றமும் உள்ளன. 98.5 மீட்டர் உயரமான இந்தக் கோபுரம், இதே மாளிகையின் வடக்கு அந்தலையில் உள்ளதும் இதைவிடப் பிரபலமானதும் பிக் பென் மணிக்கூட்டைத் தாங்கியதுமான எலிசபெத் கோபுரத்தைவிடச் சற்று உயரம் கூடியது. இக் கோபுரத்தின் 12 தளங்களில் நாடாளுமன்றத்தின் ஆவணக் காப்பகம் அமைந்துள்ளது. முன்னர், இக் கட்டிடத்தின் 14 தளங்களையும் இணைக்கும் வகையில் இரும்பினால் செய்யப்பட்ட விக்டோரியா கலைப்பாணியில் அமைந்த 553 படிகளைக் கொண்ட படித்தொகுதி ஒன்று இருந்தது. இதில் 5 தளங்களை இணைக்கும் ஒரு பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது.
இக்கோபுரத்தின் நிலத்தளத்தில் அமைந்திருக்கும் முதன்மை வாயில் மன்னர் வாயில் எனப்படுகிறது. நாடாளுமன்றத்தைத் திறந்துவைக்கச் செல்லும்போது அரசர் அல்லது அரசி இவ்வாயில் வழியாகவே செல்வது வழக்கம். இக் கோபுரத்தின் உச்சியில் இரும்பினாலான கொடிக் கம்பம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய இராச்சியத்தின் கொடி பறக்கவிடப்படும். ஆனால் மாளிகையில் அரசர் அல்லது அரசி இருக்கும்போது அரச கொடியைப் பறக்க விடுவது வழக்கம். முன்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்று கூடும்போது மட்டுமே நாட்டின் கொடி பறக்கவிடப்பட்டது. சனவரி 2010 ஆம் ஆண்டு சனவரியில் இருந்து இது எப்போதும் பறந்துகொண்டு இருக்கிறது.
வரலாறு
[தொகு]1834 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, முன்னைய வெசுட்மின்சுட்டர் மாளிகை தீயினால் அழிந்தபின்னர், அது மீண்டும் கட்டப்பட்டபோது விக்டோரியா கோபுரமும் கட்டப்பட்டது. தீ விபத்தில் நாடாளுமன்றப் பொதுச்சபையின் ஆவணங்கள் எல்லம் அழிந்து போயின. பிரபுக்கள் சபையின் ஆவணங்கள் மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் இருந்த யுவெல் கோபுரம் (Jewel Tower) எனப்படும் இன்னொரு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் அழியாமல் தப்பின. இதனால், புதிய கட்டிடத்தில் விக்டோரியா கோபுரம் தீயைத் தாங்கும் வகையிலான, நூல்களுக்கும், ஆவணங்களுக்குமான ஒரு காப்பகமாகவே வடிவமைக்கபட்டது.
புதிய மாளிகையை வடிவமைத்த சார்லசு பாரி (Charles Barry), விக்டோரியா கோபுரத்தை மன்னர் வாயிலுக்கு மேல் அமையுமாறு வடிவமைத்தார். பெரும்பாலான கட்டிடக்கலைசார் வடிவமைப்புக்களையும், முகப்புத் தோற்றங்கள், உள்ளக அலங்காரம் என்பவற்றை அகசுத்தசு பூசின் (Augustus Pugin) என்பவர் வடிவமைத்தார். 1843 டிசம்பர் 22 ஆம் தேதி விக்டோரியா அரசி இக் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். 1860 ஆம் ஆண்டில் கட்டுமான வேலைகள் நிறைவேறின. தீ விபத்து நிகழ்ந்தபோது ஆட்சியில் இருந்தவர் மன்னர் நான்காம் வில்லியம் ஆவார். இதனால் முதலில் இக் கோபுரத்துக்கு அரசர் கோபுரம் என்றே பெயரிடப்பட்டது.
வெளியே தெரியும் கற்களாலான சுவர்களுக்குப் புறம்பாக அதள் உள்ளே வார்ப்பிரும்பினால் ஆன ஒரு சட்டக அமைப்பு உள்ளது. இச் சட்டகமே பெருமளவுக்குக் கோபுரத்தைத் தாங்குவதற்கான வலிமையைக் கொடுக்கிறது. 1855 ஆம் ஆண்டில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டபோது, உலகின் அதியுயரமான சதுரக் கோபுரமாக இக் கோபுரம் விளங்கியது. கொடிக்கம்பத்தின் அடிவரை 98.5 மீட்டர் உயரமாக இருந்த கோபுரம், 22.3 மீட்டர் உயரமான கொடிக்கம்பத்துடன் 120.8 மீட்டர் உயரம் கொண்டதாக ஆனது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]படங்கள்
[தொகு]-
அபிங்டன் சாலைக்கு அப்பால் யுவெல் கோபுரத்துக்கு முன்னால் இருந்தான விக்டோரியா கோபுரத்தின் தோற்றம்.
-
வடக்குப் புறம் நோக்கிய வாயிலில் உள்ள புதுக் கொதிக் அலங்காரங்கள்.
-
தெற்குப் பக்கத்தில் இருந்து கோபுரத்தின் தோற்றம்.