யுவெல் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலண்டனில் உள்ள பழைய அரண்மனைப் பகுதியில் அமைந்துள்ள "யுவெல் கோபுரம்" எனப்படும் கட்டிடம்.

இலண்டனில் இருந்த மத்திய காலத்து வெசுட்மின்சுட்டர் மாளிகையின் இன்றுவரை எஞ்சியிருக்கும் பகுதிகள் இரண்டுள் யுவெல் கோபுரம் (Jewel Tower) எனப்படும் கட்டிடமும் ஒன்று. வெசுட்மின்சுட்டர் மண்டபம் மற்றது. மூன்றாம் எட்வார்டு அரசரின் தனிப்பட்ட பெறுமதியான பொருட்களை வைப்பதற்காக 1365-1366 காலப்பகுதியில் இது கட்டப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இது பிரபுக்கள் சபை ஆவண அலுவலகமாகப் பயன்பட்டது. இது அரசுக்குரிய அணிகலன்களை வைப்பதற்கான கட்டிடம் அல்ல. இதை இலண்டன் கோபுரத்தில் உள்ள அணிகலன் மண்டபம் என்பதுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.

மூன்று மாடிகளைக் கொண்ட இக் கட்டிடம், பெரும்பாலும் கென்டிசுக் கற்களால் கட்டப்பட்டது. தற்போதைய நாடாளுமன்றம் அமைந்துள்ள வெசுட்மின்சுட்டர் கட்டிடத்துக்கு எதிரில் சாலைக்கு அப்பால் அமைந்துள்ளது. முந்திய அரண்மனைத் தொகுதியின் தெற்குப் பகுதியில் இருந்த இக்கட்டிடம், மதில் சுவருக்கு உள்ளே முதன்மைக் கட்டிடங்களிலிருந்து தனியாக அமைக்கப்பட்டு இருந்தது. இதனாலேயே இக்கட்டிடம் 1834 ஆம் ஆண்டின் பெரிய தீ விபத்தில் அழியாமல் தப்பியது.

இக் கோபுரம் அரசப் பூங்காவின் ஒரு மூலையில் அமைந்திருந்தது. இதைச் சூழ உயர்ந்த மதிலாலும், அகழிகளாலும் இருந்தன. இக் கட்டிடத்தைக் கட்டுவதற்குப் பூங்காவின் எப்பகுதியையும் பயன்படுத்தக்கூடாது என்னும் அரசரின் கட்டளையை அடுத்து, இக் கட்டிடத்தை வெசுட்மின்சுட்டர் குருமடத்தின் நிலத்தில் கட்டினர். இதனாலேயே இது வழக்கத்துக்கு மாறான "ட" வடிவத்தில் அமைந்தது. இந்த நிலத்துக்காக குருமாருக்கு எவ்வித நட்ட ஈடும் வழங்கப்படவில்லை. ஆனாலும் அவர்கள் அரச மாளிகைக்கும் குருமடத்துக்கும் இடையிலான எல்லையைக் குறிக்கப் புதிய சுவரொன்றை அமைத்துக்கொண்டனர். இன்றும் உள்ள இந்தச் சுவர்ப்பகுதி, தற்போது வெசுட்மின்சுட்டர் பள்ளியின் ஒரு பகுதியாக உள்ளது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவெல்_கோபுரம்&oldid=1370376" இலிருந்து மீள்விக்கப்பட்டது