விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 24, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைணு பாப்பு வானாய்வகம் என்பது இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகமாகும். தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகேயுள்ள காவலூரில் அமைந்துள்ளது இவ்வானாய்வகம். இங்குள்ள வைணு பாப்பு தொலைநோக்கி என்று பெயரிடப்பட்டுள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்; இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எதிரொளிப்பான் வகையைச் சார்ந்த தொலைநோக்கி ஆகும். இம்மையத்தின் சாதனைகளாக 1972-இல் வியாழன் கோளின் நிலவான கானிமீடின் வளிமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது, 1977-இல் யுரேனசு கோளைச் சுற்றி வளையம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது, 1988-இல் சிறிய கோள் ஒன்று ராஜமோகன் என்ற ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது (அதற்கு கணித மேதை ராமானுசனின் நினைவாக 4130 ராமானுசன் என்று பெயரிடப்பட்டுள்ளது) ஆகியவற்றைக் கூறலாம்.


எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இவை மிகவும் வியக்கவைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்வைக் கொண்டிருப்பனவாகும். ஒர் எறும்புக் குழு அல்லது சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனப்பெருக்கும் திறன் கொண்ட ‘அரசி' என அழைக்கப்படும் பெண் தனியன்களும், சில இனப்பெருக்கும் திறன் கொண்ட ‘சுரும்புகள்' என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனப்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' , ‘போராளிகள்' ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இனப்பெருக்கத்திற்காக அரசி எறும்பானது, ஆண் எறும்புகளுடன் புணர்ச்சியை நிகழ்த்த மேலே பறக்கும். புணர்ச்சிக்குப் பின்னர் அவை சிறகுகளை இழந்து, கீழே இறங்கி புதிய ஒரு குழுவை அல்லது சமூகத்தை உருவாக்கத் தயாராகிவிடும். இது போன்ற இனப்பெருக்க பறப்பு தேனீக்களிலும் நடைபெறும். எறும்பின் முதல் நிலையாக முட்டையே கருதப்படும். எல்லாப் பூச்சிகளையும்போல், முட்டைகள் தொடர்ந்த உருமாற்றத்தில், முதலில் குடம்பியாகி, பின்னர் கூட்டுப்புழுவாகி, பின்னர் முழுவளர்ச்சியடைந்த எறும்பாக மாறும். குடம்பி நிலையில் அவை அசைவற்று இருக்குமாதலால், வேலையாட்கள் அவற்றிற்கு உணவூட்டி கவனித்துக் கொள்ளும்.