விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 10, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில மொழியின் வரலாறு நான்கு கட்டங்களாக பிரித்து ஆயப்படுகிறது. அவை பழம் ஆங்கிலம் (400-1100), இடைக்கால ஆங்கிலம் (1100-1500), முன் தற்கால ஆங்கிலம் (1500-1800), தற்கால ஆங்கிலம் (1800-2009+) எனப்படுகின்றன. 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் என்ற சிறு மக்கள் குழுவின் மொழியான ஆங்கிலம் இன்று ஒர் உலக மொழியாக இருக்கிறது. இம்மொழியை 1.8 பில்லியன் மக்கள் அல்லது மூன்றில் ஒரு மக்கள் பேசுகின்றனர். 53 நாடுகளில் அரச அலுவல் மொழியாக இது உள்ளது. அறிவியல், வணிகம், ஊடகவியல், அரசியல் என எல்லாத்துறைகளும் இம்மொழியில் நடைபெறுகின்றன.


கண்ணாடி என்று பொதுவாகக் குறிப்பிடும்போது இது, சாளரங்கள், போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுவதும்; கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. தொழில்நுட்ப அடிப்படையில், கண்ணாடி என்பது குளிர்ந்து பளிங்காகாமல் திண்மமாகிய கனிமப் பொருட் கலவை ஆகும். பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்காவை முக்கிய கூறாக கொண்டுள்ளன. அறிவியல் அடிப்படையில் கண்ணாடி என்பது நெகிழிகள், ரெசின்கள், பிற சிலிக்காவைக் கொண்டிராத பளிங்குருவற்ற திண்மங்கள் போன்ற எல்லாப் பளிங்குருவற்ற திண்மங்களையும் குறிக்கப் பயன்படுவதுண்டு.