விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 9, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலா (Atrocarpus heterophyllus) பூமத்தியரேகைப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும் மர இனமாகும். மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது.

பலா எங்கு தோன்றியது என்பது பற்றி சரியான குறிப்புகள் ஏதுமில்லை. எனினும், அது இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பலா மரம், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.


இடவியல் (Topology) கணிதத்தின் ஒரு பெரிய உட்துறை. அடிப்படைக் கணித அமைப்புகளுக்குக் குந்தகமில்லாமல் வடிவவியல் முறையிலோ அல்லது இயற்கணித முறையிலோ செய்யப்படும் உரு மாற்றங்களைப் பற்றி இத்துறை விபரிக்கின்றது.

முக்கியமாக 1736 இல் ஆய்லர், 1895 இல் புவான்காரே, 1906 இல் ஃபிரெஷெ, 1914 இல் ஹௌஸ்டார்ஃப், 1922 இல் குரடோவ்ஸ்கி ஆகியவர்களும் இன்னும் சிலரும் செய்த ஆய்வுகளும் தொகுப்புகளும் சேர்ந்து இத்துறை உருவாகியது. அதிலிருந்து ஓர் ஐந்தாறு பத்தாண்டுகளுக்கு இத்துறைதான் கணித உலகெங்கும் ஆய்வாளர்களால் வேண்டப்பட்ட துறையாக இருந்தது. காலப்போக்கில் அதனுள்ளேயே இரண்டு உட்துறைகளாகப் பிரிந்து விரிந்துள்ளது: அதாவது, கணக்கோட்பாட்டு இடவியல், இயற்கணித இடவியல். முந்தியது பொதுவாக இடவியல் வெளிகளைப் பற்றியும், பிந்தியது இடவியல் உரு மாற்றங்களினால் மாற்றமுறா சிறப்பியல்புகளைப் பற்றியும் பேசுகின்றன.