விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 29, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் அவர் தம் இறப்பிற்குப் பிறகு மீண்டும் உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்றும் பதிவு செய்துள்ளன. இதுவே இயேசுவின் உயிர்த்தெழுதல் என அழைக்கப்படுகிறது. இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்களின் நம்புகின்றனர். இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் (மத்தேயு 28:1-7; மாற்கு 16:1-8; லூக்கா 24:1-12; யோவான் 20:1-12). சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார்; அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே "இயேசுவின் விண்ணேற்றம்" என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் உயிர்த்தெழுதல் பெருவிழா, விண்ணேற்றப் பெருவிழா என்னும் திருநாட்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.


செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ள சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். ஒரு மொழியின் சிறப்பிற்கும், செம்மொழிக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள் தான். ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் (கட்டிடக் கலை , சிற்பக் கலை போன்றவை) அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றுகளாக இருக்க வேண்டும்.