விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 6, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாமியன் புத்தர் சிலைகள் எனப்படுவன, ஆப்கனித்தானில் உள்ள பாமியன் பள்ளத்தாக்கில், மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்டிருந்த இரு பெரும் புத்தர் சிலைகளைக் குறிக்கும். ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இச்சிலைகள் இந்திய, கிரேக்கக் கலைகளின் கலப்புப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின. பருமட்டான உடல் அமைப்பு மணற்கல் பாறையில் நேரடியாகவே செதுக்கப்பட்ட பின்னர், மண்ணையும், வைக்கோலையும் கலந்து நுணுக்க வேலைப்பாடுகள் செய்து அதன் மேல் சாந்து பூசி முடிக்கப்பட்டிருந்தது. இந்த மேல் வேலைப்பாடுகளும் சாந்தும் எப்போதோ கரைந்து போய்விட்டன. எனினும், நிறப் பூச்சுக்களைப் பூசி, முகம், கைகள், உடையின் மடிப்புகள் என்பவற்றை வெளிப்படுத்து முயற்சிகள் செய்யப்பட்டிருந்தன. பெரிய சிலை சிவப்பு நிறத்திலும், சிறியது பல்வேறு நிறங்களிலும் காணப்பட்டன. சிலைகளின் கைகளின் கீழ்ப்பகுதி, மண், வைக்கோல் கலவையாலேயே செய்யப்பட்டது, ஆனால், முகத்தின் மேல் பகுதிகள் பெரிய மரத்தாலான முகமூடிகளால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. படங்களில் காணப்படும் வரிசையாக அமைந்த துளைகள் வெளிப் பூச்சுக்களை நிலைப்படுத்துவதற்காக மர ஆணிகள் செலுத்தப்பட்டிருந்த இடங்கள் ஆகும். அந்நாளைய தலிபான் அரசு இஸ்லாமியச் சட்ட முறைமைக்கு எதிரானதாகக் கூறி, 2001 இல் இச்சிலைகளை வெடிவைத்துத் தகர்த்து விட்டது. மேலும்..


தியடோர் சாமர்வெல் (1890-1975) ஒரு பிரித்தானிய அறுவை சிகிச்சை நிபுணரும், மலையேற்ற நிபுணரும் சமூக சேவகரும் ஆவார். எவரெஸ்ட் சிகரத்துக்கு இருமுறை ஏற முயன்றவர். நாற்பது ஆண்டுகள் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்றினார். சாமர்வெல் இங்கிலாந்தில் பிறந்தவர். பெற்றோர் செருப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருந்தார்கள். கேம்ப்ரிட்ஜில் மருத்துவம் பயின்றார். முதலாம் உலகப் போரில் ஈடுபட்டு 1915 முதல் 1918 வரை பிரான்சில் பிரித்தானிய இராணுவ வீரராகப் பணியாற்றினார். போரில் கண்ட காட்சிகள் அவரை ஆழமான அமைதி விரும்பியாக மாற்றின. கிறித்தவ நம்பிக்கை மேலும் உறுதிப்பட்டது. இந்தியாவெங்கும் பயணம் செய்த சாமர்வெல் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கே கண்ட வறுமையால் வருத்தம் அடைந்த அவர் நெய்யூர் என்ற ஊரில் இருந்த லண்டன் மிஷன் அமைப்புடன் இணைந்து மருத்துவப்பணி செய்ய ஆரம்பித்தார். அவருக்கு லண்டனில் காத்திருந்த பிரகாசமான எதிர்காலத்தை உதறி நெய்யூரிலேயே தங்கி மருத்துவசேவை செய்ய ஆரம்பித்தார். ஒரு பெரிய மருத்துவக்குழுவையே பயிற்சிகொடுத்து உருவாக்கினார். அறுவை சிகிச்சைக்கு அவரே பல புதிய முறைகளை கண்டுபிடித்தார். மேலும்..