விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூலை 28, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரமிடு என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக்கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும். இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தையேத் தேர்ந்தெடுத்தனர். பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புக்கள் அனைத்தும் பிரமிடுகளாகவே இருந்தன. முதலில் எகிப்தில் டாசுர் நக்குரோபோலிசில் உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் கூபுவின் பெரிய பிரமிடும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிடு மட்டும்தான். பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன. பிரமிடுகள் எகிப்துடன் அடையாளப்படுத்தப்பட்டாலும் உலகின் மிகக் கூடுதலான பிரமிடுகளைக் கொண்ட நாடாக சூடான் விளங்குகிறது. மேலும்


சோமசுந்தர பாரதியார் (சூலை 27, 1879 - திசம்பர் 14, 1959) என்னும் நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த தமிழறிஞர் ஆவார். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். சுப்பிரமணிய பாரதிக்கு நண்பரான இவருக்கும், சுப்பிரமணிய பாரதியாருக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த புலவர் இருவரது கவித்திறன்களையும் கண்டு மகிழ்ந்து ஒரே நேரத்தில் பாரதி என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். வழக்கறிஞராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய இவர் பல பாடல்களையும், நூல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக, தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதியிருக்கிறார். சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்ட இவர், ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடும் தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாக்களை முன்னின்று நடத்தினார். மதுரை மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் தலைவராகவும் செயற்பட்டார். இவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் முன்னின்று செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்