விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 20, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்துமலை என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குடைவரைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளிலான இந்தக் குகைக்கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் பெயரில் இருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பத்துமலை திருத்தலம். பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்த பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது. மேலும்...


மின்காந்தம் என்பது மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் ஆகும். இதில் மின்னோட்டம் நிறுத்தப்படும்போது காந்தப்புலம் மறைந்துவிடும். தானியங்கிகள், மின்பிறப்பாக்கிகள், அஞ்சல் சுற்றுக்கள், ஒலிபெருக்கிகள், வன்வட்டுக்கள், காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள், அறிவியல் கருவிகள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு துணை அங்கமாகவும் கைத்தொழிற் துறையில் அதிக எடை கொண்ட இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. கம்பியொன்றில் பாயும் மின்னோட்டமானது அக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது. காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில் கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும். மேலும்....