விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 1, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்த் தொடர் என்பது இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பிய களத்தில் நிகழ்ந்த ஒரு வான்படைப் போர். நாசி ஜெர்மனியின் வான்படை லுஃப்ட்வாஃபே ஜெர்மனி மற்றும் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளின் வான்பகுதிகளில் நேச நாட்டு வான்படைகளுடன் மோதியது. ஜெர்மனியின் படைத்துறை மற்றும் குடிசார் தொழிற்சாலைகளை குண்டு வீசி அழித்து அதன் மூலம் அந்நாட்டு போர்திறனை முடக்க நேச நாடுகள் முயன்றன. 1939 முதல் 1945 வரை ஆறு ஆண்டுகள் இடையறாது இரவும் பகலும் இரு தரப்பு வான்படைகளும் மோதிக் கொண்ட இப்போர்த் தொடரில் இறுதியில் லுஃப்ட்வாஃபே தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.மேலும்...


முனைவர் நெ.து.சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும் பொதுக்கல்வி இயக்குனராகவும் பொது நூலக இயக்குனராகவும் பல காலம் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். பொதுக்கல்வி இயக்குனராக இருந்த போது, அன்றைய முதல்வர் காமராசருடன் இணைந்து இலவச மதிய உணவுத் திட்டம், ஓராசிரியர் பள்ளிகள் திட்டம் ஆகியவற்றைச் செயற்படுத்தினார். பொது நூலக இயக்குனராக இருந்த போது மாநிலம் முழுதும் கிளை நூலகங்களை உருவாக்கினார். தமிழ்நாட்டில் சொத்துவரியுடன் சேர்த்து பெறப்படும் நூலக வரித் திட்டமும் இவரது பணிக்காலத்தில் அறிமுகமானது தான். இந்திய குடியரசு 1961 ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கிச் சிறப்பித்தது. மேலும்...