இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலவச மதிய உணவுத் திட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலவச மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும்.

திட்டத்திற்கான காரணங்கள்[தொகு]

வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

வரலாறு[தொகு]

நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது. 1955 ஆம் ஆண்டு மார்ச் 27ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் நெ. து. சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன்முதலாக ஆலோசித்தார். பின்னர் இந்த மதிய உணவு திட்டம் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபணைகளையும் சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பதிலளித்தபின், முடிவில் சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றும், முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.[சான்று தேவை] திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறியதாவது: "அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்." எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், அதிமுக ஆட்சியில் சத்துணவில் புதிய உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ORIGIN AND GROWTH OF SCHOOL LUNCH PROGRAMME IN TAMIL NADU". Teacher Education , Ministry of Human Resource Development, Government of India. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "ஏன் இந்த ஆத்திரம்?". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 12 ஆகத்து 2014. p. 4. 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. Brindavan C Moses (Jan 1983). "TAMIL NADU-Noon Meals Scheme". Economic and Political Weekly 18 (4). http://www.epw.in/our-correspondent/tamil-nadu-noon-meals-scheme.html. [தொடர்பிழந்த இணைப்பு]