விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 21, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகதீஸ்வரர் கோவிலில் இராஜராஜ சோழனின் சிலை

சோழர்களின் புகழ் பெற்ற மன்னருள் முதலாம் இராஜராஜன் முதன்மையானவன். கி.பி 985 முதல் கி.பி 1012 வரை சோழ நாட்டைப் பெரும் புகழுடன் ஆட்சி புரிந்தவன் மாமன்னன் இராஜராஜன். இராஜராஜ சோழன் இடைக்கால சோழ மன்னர்களில் மிக உன்னதமானவன். இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.


பிரித்தானிய கன்னித் தீவுகள் கரிபியத்தில் போட்ட ரிக்கோவுக்கு கிழக்கில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது தீவுக் கூட்டத்திந் எஞ்சிய பகுதியில் அமெரிக்க வெர்ஜின் தீவுகள் அமைந்துள்ளது. பிரித்தானிய கன்னித் தீவுகளில் டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளும் மேலும் பல சிறிய தீவுகளும் மணல்மேடுகளும் காணப்படுகின்றன. இங்கு அண்ணளவாக 15 தீவுகளில் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. மண்டலத்தில் காணப்படும் மிகப்பெரிய தீவான டொர்டோலா சுமார் 20 கி.மீ. (சுமார் 12 மைல்) நீளமும் 5 கி.மீ.(சுமார் 3 மைல்) அகலமும் கொண்டதாகும். இம்மண்டலம் அண்ணளவாக 22,000 மக்களைக் கொண்டுள்ளது இதில் சுமார் 18,000 பேர் டொர்டோலாவில் வசிக்கின்றனர். மண்டலத்தின் தலைநகரான ரோட் டவுண் டொர்டோலா தீவில் அமைந்துள்ளது.