உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க கன்னித் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அமெரிக்க வெர்ஜின் தீவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமெரிக்கக் கன்னித்தீவுகள்
U.S. Virgin Islands
கொடி of அமெரிக்கக் கன்னித்தீவுகளின்
கொடி
சின்னம் of அமெரிக்கக் கன்னித்தீவுகளின்
சின்னம்
குறிக்கோள்: "United in Pride and Hope"
(பெருமையிலும் நம்பிக்கையிலும் ஒன்றாகும்)
நாட்டுப்பண்: "Virgin Islands March"
(கன்னித்தீவு பயணம்)
அமெரிக்கக் கன்னித்தீவுகளின்அமைவிடம்
தலைநகரம்சார்லொட் அமாலீ
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
அரசாங்கம்
• அரச தலைவர்
ஜார்ஜ் வாக்கர் புஷ்
• ஆளுனர்
ஜான் டெ ஜாங்
Organized, unincorporated territory
• Revised Organic Act
ஜூலை 22 1954
பரப்பு
• மொத்தம்
346.36 km2 (133.73 sq mi) (202வது)
• நீர் (%)
1.0
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
112,000 (191வது)
• 2000 கணக்கெடுப்பு
108,612
• அடர்த்தி
354/km2 (916.9/sq mi) (34வது)
நாணயம்அமெரிக்க டொலர் (USD)
நேர வலயம்ஒ.அ.நே-4 (Q)
• கோடை (ப.சே.நே.)
not observed
அழைப்புக்குறி1 340
இணையக் குறி.vi
Trunk Bay, St. John

அமெரிக்க கன்னித் தீவுகள் அல்லது அமெரிக்க வெர்ஜின் தீவுகள் (United States Virgin Islands) கரிபியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியின் கீழுள்ள மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தில் சிறிய அண்டிலுசுவில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்க கன்னித்தீவுகள் சென் ஜோன், சென் தோமஸ், சென் குரொயிஸ் என்ற முக்கியத் தீவுகளுடன் மிகச் சிறிய ஆனால் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர்த் தீவையும், மேலும் பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. இம்மண்டலத்தின் மொத்த பரப்பளவு 346.36 சதுர கிலோமீட்டராகும் (133.73 சதுர மைல்). 2000 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின்படி இம்மண்டலத்தில் 108,612 பேர் வசிக்கின்றனர்.[1]

வரலாறு

[தொகு]

வெர்ஜின் தீவுகள் கி.மு. 100 ஆண்டளவில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த அராவாக் இந்தியர்களால் முதலாவதாக குடியேற்றப்பட்டது. கி.மு. 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.[2] 15 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை சிறிய அண்டிலுசுத் தீவுகளிலிருந்து வந்த தீவிர கரிப் இனக் குடிகள் வெளியேற்றினர்.

வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ். இவர் 1493 இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு "புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்" (Santa Ursula y las Once Mil Vírgenes) எனப் பெயரிட்டார். பின்னர் Las Vírgenes எனச் சுருக்கப்பட்டது. அடுத்து வந்த 300 ஆண்டுகளில் அப்போதைய ஐரோப்பிய வல்லரசுகளான ஸ்பெயின், பிரித்தானியா, பிரான்சு, தென்மார்க்கு போன்றவை இத்தீவுகளின் ஆட்சியை மாறிமாறிக் கொண்டிருந்தன.

டென்மார்க் மேற்கிந்தியக் கம்பனி 1672 இல் சென் தோமஸ் தீவிலும் 1694 இல் சென் ஜோன் தீவிலும் குடியேற்றங்களை அமைத்தது. 1733 இல் சென் குரொயிஸ் தீவை பிரான்சிடமிருந்து விலை கொடுத்து வாங்கியது. 1754 ஆம் ஆண்டு இத்தீவுகள் டென்மார்க் அரச குடியேற்ற நாடாகக் கொள்ளப்பட்டது. இங்கு விளைவிக்கப்பட்ட கரும்பு காரணமாக 18ஆம் நூற்றாண்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அடிமை முறை ஒழிக்கப்படும் வரை பொருளாதாரம் வளர்ச்சி கண்டது.

டென்மார்க் ஆட்சியின் எஞ்சிய காலப்பகுதியில் இத்தீவுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு, தீவின் செலவுகளைப் பேணுவதற்காக டென்மார்க்கிலிருந்து மேலதிக நிதி கொண்டுவரப்பட்டது. 1867 இல் இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.[3] தீவுகளின் பொருளாதாரத்தைத் தட்டியெழுப்பப் பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன எனினும் அவை பெரிய பலனைக் கொடுக்கவில்லை. தீவுகளை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் இரண்டாவது சட்டமூலம் டென்மார்க் நாடாளுமன்றத்தில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டது[3].

முதலாம் உலகப் போரின் போது இத்தீவுகள் செருமனியால் நீர்மூழ்கிக் கப்பல் தளமாக பயன்படும் நோக்கில் கைப்பற்றப்படலாம் எனக் கருதியதால் மீண்டும் இத்தீவுகளை வாங்கும் நோக்கில் டென்மார்க்கை அணுகியது. சில மாதங்களாக நடைபெற்ற பேரங்களின் பின்னர் 25 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இத்தீவினை விற்பனை செய்ய டென்மார்க் அரசர் முடிவு செய்தார். தீவுகளின் பொருளாதார வீழ்ச்சி, மற்றும் விற்பனை செய்யாவிடின் அமெரிக்கா தீவுகளைக் கைப்பற்றிக் கொள்ளும் என்ற அச்சம் இம்முடிவுக்குக் காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1916 ஆம் ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற டென்மார்க் மேற்கிந்தியத் தீவுகளின் விற்பனை மக்கள் கருத்துக் கணிப்பில் விற்பனைக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. இதன்படி 1917 ஜனவரி 17 இல் விற்பனைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 1917 மார்ச் 31 இல் அமெரிக்கா இத்தீவுகளைப் பெற்றுக் கொண்டது. 1927 ஆமாண்டு இத்தீவில் வசித்தவருக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

சென் தோமஸ் தீவிற்கு தெற்கே அமைந்துள்ள சிறிய தீவான தண்ணீர்த் தீவு இவ்விற்பனையில் உள்ளடக்கப் படவில்லை. 1944 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவால் 10,000 அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கப்படும் வரை இத்தீவு டென்மார்க் மேற்கிந்தியக் கம்பனி வசமிருந்தது.[4] ஆரம்பத்தில் இத்தீவு அமெரிக்க கூட்டாட்சி அரசால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இத்தீவின் 50 ஏக்கர் நிலம் கன்னித்தீவுகள் மண்டலத்துக்கு வழங்கப்பட்டது. மீதமிருந்த 200 ஏக்கர் நிலமும் 2005 ஆம் ஆண்டு 10 அமெரிக்க டொலர் பணப் பரிமாற்றத்தின் மூலம் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்திலிருந்து இத்தீவு கொள்வனவுச் செய்யப்பட்டது.[5]

புவியியல்

[தொகு]
அமெரிக்க வெர்ஜின் தீவுகளின் வரைப்படம்

அமெரிக்க வெர்ஜின் தீவுகள் கரிபியக் கடலிலும் அத்திலாந்திக் பெருங்கடலிலும் போட்ட ரிக்கோவிலிருந்து 50 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தில் நான்கு முக்கிய தீவுகள் அமைந்துள்ளன: சென் ஜோன், சென் தோமஸ், சென் குரொயிஸ், தண்ணீர்த் தீவு இவற்றுக்கு மேலதிகமாக பல சிறிய தீவுகளையும் மணல் மேடுகளையும் கொண்டுள்ளது.

அமெரிக்க கன்னித் தீவுகள் அதன் வெள்ளை கடற்கரைகளுக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களுக்கும் பிரசித்தமானதாகும். செயிண்ட். தோமஸ் தீவு அடங்கலாக பெரும்பான்மையான தீவுகள் எரிமலை மூலம் தோன்றிய தீவுகளாகக் காணப்படுகின்றன. உயரமான மலை முகடான கிரவுண் மலை (474 மீட்டர்) செயிண்ட் தோமஸ் தீவில் காணப்படுகிறது. மண்டலத்தின் மிகப்பெரிய தீவான செயிண்ட் குரொயிஸ் மண்டலத்தின் தெற்கில் அமைந்துள்ளதோடு இது தட்டையான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. செயிண்ட் ஜோன் தீவின் பரப்பில் அரைவாசிக்கும் மேலான பகுதியும் அசெல் தீவின் முழுமையும் பல ஏக்கர் முருகைப் பாறைகளும் அமெரிக்க வனத்துறை சேவைகளுக்கு சொந்தமானதாகும்.

அமெரிக்க கன்னித்தீவுகள் வட அமெரிக்கப் புவியோட்டினதும் கரிபிய புவியோட்டினதும் எல்லையில் காணப்படுகிறது. இங்கு நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் காணப்படுகின்றன.

அரசியல்

[தொகு]
அமெரிக்க கன்னித் தீவுகளின் தலைநகரம் - சார்லொட் அமலீ

அமெரிக்கக் கன்னித் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவிற்குரிய மண்டலமாகும். இம்மண்டலத்தின் குடிகள் சட்டத்தின்படி அமெரிக்கக் குடிகளாக இருந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால் இம்மண்டலத்தின் குடிகள் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் குடியேறும் போது அதிபர் தேர்தலில் வாக்களிக்க உரிமை பெறுகின்றனர்.

இங்கு கன்னித்தீவுகளின் சனநாயகக் கட்சி, கன்னித்தீவுகளின் குடியரசுக் கட்சி, மக்கள் விடுதலை இயக்கம் ஆகிய மூன்று முக்கிய கட்சிகள் இயங்கி வருகின்றன. மேலதிகமாக வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் தேர்தல்களில் போட்டியிடுகின்றார்கள்.

அமெரிக்க கன்னித் தீவுகளிலிருந்து ஒரு ஒரு பிரதிநிதியை அமெரிக்க காங்கிரசுக்கு தெரிவு செய்கிறது. ஆனால் இப்பிரதிநிதியால் குழுநிலை வாக்கெடுப்பில் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும். காங்கிரஸ் பொது வாகெடுப்பில் கலந்துக் கொள்ள முடியாது.

மண்டல மட்டத்தில் 15 சட்டவாக்கக் கழக உறுப்பினர்கள் ( செயிண்ட். குரொயிஸ் மாவட்டதிலிருந்து 7 பேர், செயிண்ட். தோமஸ் மற்றும் செயிண்ட். ஜோன் மாவட்டங்களிலிருந்து 7 பேர் மற்றும் செயிண்ட். ஜோன் மாவட்டதிலிருந்து 1 சிறப்புப் பிரதிநிதி) ஓரவை சட்டவாக்கக் கழகத்துக்கு 4 ஆண்டு பதவிக் காலத்துக்குத் தெரிவுச் செய்யப்படுகின்றனர். 1970 ஆம் ஆண்டிலிருந்து நான்காண்டுகளுக்கு ஒரு முறை மண்டல ஆளுனர் ஒருவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்து வந்துள்ளது. 1970க்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஆளுனர்களை நியமித்து வந்தார்.

அமெரிக்க கன்னித்தீவுகள் மாவட்ட, உயர், உச்ச நீதிமன்றங்களைக் கொண்டுள்ளது. மாவட்ட நீதிமன்றம் சட்ட ஒழுங்குக்குப் பொறுப்பாக உள்ளது. உயர் நீதிமன்றம் அமெரிக்க கன்னித் தீவுகளின் நீதிக்கு பொறுப்பாக உள்ளதோடு உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திலிருந்து வரும் வினவல்களை விசாரிக்க பொறுப்பாக உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆளுனராலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமெரிக்க அதிபராலும் நியமிக்கப் படுகின்றனர்.

ஐக்கிய அமெரிக்காவால் இத்தீவுகளுக்கு விடுதலை அல்லது மாநில அந்தஸ்த்து வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்புகள் மக்கள் ஆதரவைப் பெறாத நிலையில் இத்தீவுகள் தொடர்ந்தும் ஐக்கிய அமெரிக்காவின் மண்டலாமாக இருக்கும்.

இத்தீவுகளுக்கு விடுதலை அளிக்க அமெரிக்கா முன்வந்ததைக் கருதாமல் ஐக்கிய நாடுகள் அவையின் அடிமை நாடுகள் ஒழிப்புக் குழு அமெரிக்க கன்னித் தீவுகளை சுயாட்சியற்ற மண்டலங்களாக பட்டியலிட்டுள்ளது.

பொருளாதாரம்

[தொகு]
செயிண்ட். தோமஸ் திவின் மாகென்ஸ் குடா

சுற்றுலாத் தொழிற்துறை இம்மண்டலத்தின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கை வகிக்கிறது. இத்தீவுகள் ஆண்டுக்கு அண்ணளவாக 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றது. இவர்களில் பெரும்பாலோனோர் சுற்றுலாக் கப்பல்கள் மூலமே இங்கு வருகின்றனர்.

உற்பத்தித் தொழிற்துறையில் பெற்றோலியம் சுத்திகரிப்பு, ஆடை உற்பத்தி, இலத்திரனியல் உற்பத்தி, ரம் வடிக்கட்டல், மருந்து உற்பத்தி, கடிகார உற்பத்தி போன்றவை முக்கியமானவையாகும். பன்னாட்டு வணிக நிறுவனங்களின் முதலீடுகள் மிகக் குறைவாகக் காணப்பட்டாலும் இத்துறையும் வளர்ந்து வருகின்றது. விவசாயத்துறை சிறியதாகும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பெற்றோலிய சுத்திகரிப்பகங்களில் ஒன்று செயிண்ட். குரோயிக்ஸ் தீவில் அமைந்துள்ளது.

இத்தீவுகள் பகலொளி சேமிப்பு நேரத்தில் பங்கு கொள்வதில்லை. ஐக்கிய அமெரிக்கா சீர் நேரத்தில் இருக்கும்போது அமெரிக்க கன்னித் தீவுகள் 1 மணித்தியாலம் முன்னால் இருக்கும். ஐக்கிய அமெரிக்கா பகலொளி சேமிப்பு நேரத்தில் இருக்கும்போது ஐக்கிய அமெரிக்காவும் அமெரிக்க கன்னித் தீவுகளும் ஒரே நேரத்தைக் கொண்டுள்ளன.

இத்தீவுகள் அயணமண்டல புயல்களுக்கும் சூறாவளிகளுக்கும் ஆளாகின்றன. அமெரிக்க கன்னித்தீவுகள், பாதையில் வாகனங்கள் இடதுபுறமாக பயணிக்கும் வழக்கு கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் ஒரே பகுதியாகும். இருப்பினும் இங்க்குள்ள வாகனங்கள் சாரதி ஆசனத்தை இடதுபுறம் கொண்டவையாக விளங்குகின்றன.

மக்கள் கணிப்பியல்

[தொகு]

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகைக் கணிப்பீட்டின் படி இங்கு மொத்தம் 108,612 பேர் வசிக்கின்றனர். இவர்களுள் 76.19% கருப்பினத்தவர் அல்லது ஆபிரிக்க வம்சாவழியினர், 13.09% வெள்ளையினத்தவர், 7,23% ஏனைய இனத்தவர், 3.49% கலப்பினத்தவர் ஆவர். எந்த இனத்திலும் இலத்தீனோ அல்லது இசுப்பானிய மரபினர் 13.99% ஆக காணப்பட்டது.

இங்கு 40,648 வீடுகள் காணப்பட்டன, அவற்றுள் 34,7% வீடுகளில் 18 வயதிற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகள் காணப்பட்டன, 33.2 சதவீதமான வீடுகளில் மணமுடித்த தம்பதியினர் மட்டும் வசித்தனர், 24.9 சதவீதமான வீடுகள் பெண் குடும்ப தலைவியைக் கொண்டிருந்தன, மேலும் 34.5 சதவீதமான வீடுகள் குடும்பங்களைக் கொண்டிருக்கவில்லை. எல்லா வீடுகளினது 30.2 சதவீதமான வீடுகளில் தனிநபர்களே வசித்து வந்தனர். 6.3 சதவீதம்மன வீடுகள் 65 வயதிற்கு மேற்பட்டு தனியாக வாழும் நபர்களைக் கொண்டிருந்தது. சராசரி வீட்டில் 2.64 பேர் வசிப்பதோடு ஒரு குடும்பத்தில் சராசரியாக 3.34 பேர் வசிக்கின்றனர்.

இம்மண்டலத்தின் மக்கள் தொகையில் 31.6 சதவீதமானோர் 18 வயதிலும் குறைவானவர்களாவர், 8 சதவீதமானோர் 18 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களாவர், 27.1 சதவீதமானோர் 25 வயதுக்கும் 44 வயதுக்குட்பட்டவர்களாவர், 24.9 சதவீதமானோர் 44 தொடக்கம் 64 வயதுக்குட்பட்டவர்களாவர், 8.4 சதவீதமானோர் 64 வயதை விட கூடியவர்களாவர். இடைய வயது 33 ஆகும். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 91.4 ஆண்களும், 18வயதும் அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்ட ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 87.7 ஆண்கள் காணப்படுகின்றனர். ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சிவீதம் -0.12% ஆகும்.

வீடு ஒன்றின் தலா ஆண்டு வருமானம் $24,704 அமெரிக்க டொலராகவும் குடும்பமொன்றின் தலா ஆண்டு வருமானம் $28,553 அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. ஆண்களி சராசரி வருமானம் $28,553 அமெரிக்க டொலராகவும் பெண்களில் அது $28,309 அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. 28.7 சதவீமான குடும்பங்களும் 32.5 சதவீதமான மக்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றார்கள்.

மாவட்டங்களும் துணை மாவட்டங்களும்

[தொகு]
அமெரிக்க கன்னித் தீவுகளின் மாவட்டங்களும் துணை மாவட்டங்களும்

ஐக்கிய அமெரிக்க கன்னித் தீவுகள் இரண்டு மாவட்டங்களாகவும் 20 துணை மாவட்டங்களாகவும் பிரித்து நிர்வகிக்கப் படுகிறது. மாவட்டங்களும் துணை மாவட்டங்களும் பின்வறுமாறு:

  • செயிண்ட். குரொயிஸ்
  • செயிண்ட். தோமஸ் / செயிண்ட். ஜோன் / தண்ணீர்த் தீவு

செயிண்ட். குரொயிசின் துணை மாவட்டங்கள்:

  1. அன்னாஸ் ஓப் கிராமம்
  2. கிறிஸ்டியன்ஸ்டெட்
  3. கிழக்கு மூளை (செயிண்ட். குரொயிஸ்)
  4. பிரெட்ரிக்ஸ்டெட்
  5. வடமத்திய
  6. வடமேற்கு
  7. சியொன் பண்ணை
  8. தென் மத்திய
  9. தென்மேற்கு


செயிண்ட். தோமசின் துணை மாவட்டங்கள்:

  1. சார்லொட் அமலீ
  2. கிழக்கு மூளை(செயிண்ட். தோமஸ்)
  3. வடபக்கம்
  4. தென்பக்கம்
  5. டுடு
  6. அசல் தீவு
  7. மேற்கு மூளை

செயிண்ட். ஜோனின் துணை மாவட்டங்கள் :

  1. மத்தி
  2. கொரல் குடா
  3. குருஸ் குடா
  4. கிழக்கு மூளை (செயிண்ட். ஜோன்)

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 2000 Population Counts for the U.S. Virgin Islands, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்.
  2. Wilson, Samuel M. ed. The Indigenous People of the Caribbean. Gainesville: University Press of Florida, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8130-1692-4
  3. 3.0 3.1 A Brief History of the Danish West Indies, 1666-1917, Danish National Archives
  4. Anderson, David G. Archaeology in the Caribbean: The Water Island Archaeological Project. Paper presented at the Annual Meeting of the Southeastern Archaeological Conference, Greenville, S.C., 12 November 1998. Online publication by National Park Service, US Dep of the Interior. Retrieved 6 September 2007.
  5. Poinski, Megan. "Water Island appears frozen in time, but big plans run under the surface - V.I. says land acquired from the feds is about to undergo large-scale improvements" பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம். The Virgin Islands Daily News, 18 November 2005, online edition. Retrieved 6 September 2007.

வெளியிணைப்புகள்

[தொகு]

அதிகாரபூர்வ தளங்கள்

[தொகு]
அமெரிக்க கன்னித் தீவுகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


செய்தித் தளங்கள்

[தொகு]