உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/14

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலாக்கா மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றும், அதன் மூன்றாவது சிறிய மாநிலமும் ஆகும். இது தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியில் உள்ளது. இதன் தலைநகரம் மலாக்கா பட்டினம். இந்நகரை 2008 ஆம் ஆண்டில் உலகப் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்தது. தென் மேற்கே மலாக்கா நீரிணையும் சுமாத்திரா தீவும் இருக்கின்றன. மலாக்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம். 1400ம் ஆண்டு பரமேசுவரா எனும் ஒரு சிற்றரசனால் மலாக்கா நகரம் உருவாக்கம் பெற்றது. இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா அரசு மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாக விளங்கியது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதி, சுமத்திராவின் வட பகுதி மலாக்காவின் ஆளுமையின் கீழ் வந்தன. 1511 இல் போர்த்துக்கீசர் மலாக்காவைக் கைப்பற்றினர். பின்னர் 1641 இல் டச்சு ஆளுகைக்கும், 1824 இல் பிரித்தானியரின் ஆளுகைக்கும் உள்ளானது. 1948 இல் விடுதலை பெற்று மலாயாக் கூட்டமைப்பில் இணைந்தது. 1400 ஆம் ஆண்டிலிருந்து தொடக்க கால குடியேற்றவாசிகளாக மலாய்க்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாநிலத்தின் பெரிய சமூகமாகவும் விளங்குகின்றார்கள்.