உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்காஞ்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்காஞ்சேரி (Wadakkanchery) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு முக்கியமான நகரமாகும். 1860 ஆம் ஆண்டு வரை இந்நகரம் செலக்காரா தாலுக்காவில் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது தலப்பிள்ளி வட்டத்தினுடைய தலைமையிடமாக வடக்காஞ்சேரி உள்ளது.

முண்டதிகோட் பஞ்சாயத்துடன் வடக்காஞ்சேரியை இணைத்ததன் மூலம் வடக்காஞ்சேரி அரசிடமிருந்து நகராட்சி தகுதியை பெற்றது. சமீபத்தில் திருச்சூர் மாவட்டத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஒரே நகரம் வடக்காஞ்சேரியாகும். இதேபோல் உச்சரிக்கப்படும் பெயர்கள் கொண்ட இரண்டு இடங்கள் கேரளாவில் உள்ளன. வடக்காஞ்சேரி மற்றும் வடக்கெஞ்சேரி என்பன அவ்விரண்டு ஊர்களாகும். பிந்தையது பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

சாலை வழி[தொகு]

வடக்காஞ்சேரி திருச்சூர் - சோரனூர் மாநில நெடுஞ்சாலை எண் 22 இல் அமைந்துள்ளது மற்றும் இது திருச்சூர் மாவட்டத்தின் மற்றொரு முக்கிய நகரமான குன்னங்குளத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. திருச்சூர்-ஒட்டபாளம் / செல்லக்காரா பேருந்துப் பாதையில் ஒட்டுப்பரா பேருந்து நிலையம் ஒரு முக்கிய நிறுத்தமாகும். திருச்சூர் - பெரிந்தல்மன்னா - நிலம்பூர் - ஊட்டி அல்லது பெங்களூரை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற கடந்த பல ஆண்டுகளாக பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.

வடக்காஞ்சேரி மாநில நெடுஞ்சாலை எண் 50 இன் முடிவாகும், இது நகரத்தை சாவக்காடு மற்றும் குருவாயூருடன் குன்ன்ங்குளம் வழியாக இணைக்கிறது.

இரயில் போக்குவரத்து[தொகு]

வடக்காஞ்சேரி இரயில் நிலையம் வடகஞ்சேரியில் அமைந்துள்ளது. இந்நிலையம் தெற்கு இரயில்வேயால் நிர்வகிக்கப்படுகிறது. இந்திய அரசால் ஆதார்சு திட்டத்தின் கீழ் நிலையத்தின் தரம் மேம்படுத்தப்பட்டது. திருச்சூர் இரயில் நிலையத்திற்குப் பிறகு அம்மாவட்டத்திலுள்ள உள்ள ஒரு முக்கிய இரயில் நிலையமாகவும் இது கருதப்படுகிறது. இங்கு இரண்டு நடைமேடைகள் உள்ளன. பெரும்பாலான விரைவு இரயில்கள் இங்கே நிறுத்தப்படுகின்றன.

அருகிலுள்ள பிற இரயில் நிலையங்கள்:

•வல்லத்தோல் நகர், சேருதுருத்தி
•முலன்குன்னத்துக்காவு
•திருச்சூர்
•சோரனூர் சந்திப்பு
•புன்குன்னம் இரயில் நிலையம்

வான் வழி[தொகு]

அருகிலுள்ள விமான நிலையங்கள்[தொகு]

•70 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. •கோழிக்கோடு விமான நிலையமும் இந்நகருக்கு அருகில்தான் உள்ளது.

கலாச்சாரம்[தொகு]

வடக்காஞ்சேரி ஒரு முக்கியமான கலாச்சார மையம் ஆகும். கேரள கலாமண்டலம் வடக்காஞ்சேரிக்கு அருகிலுள்ள செருத்துருத்தியில் அமைந்துள்ளது. பல கலைஞர்கள், இலக்கிய ஆளுமைகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் இந்த இடத்தில் வசிக்கிறார்கள். திரைப்பட இயக்குனர் பி.என். மேனன், பரதன், கலாமண்டலம் ஐதர் அலி, ஒடுவில் உன்னிகிருட்டிணன், அபுபெக்கர், மலையாள பஞ்சதந்திரம் ஆசிரியர் சுமங்கலா, நாவலாசியர் விலாசினி ஆகிய அனைவரும் வடக்காஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பண்டைய தொல் இல்லமான ஆவணப்பரம்பு வடக்காஞ்சேரிக்கு அருகில்தான் உள்ளது.

கல்வி[தொகு]

அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, புனித பியுசு மற்றும் பாரதிய வித்யாபவன் போன்ற கல்வி புகட்டும் நிலையங்கள் வடக்காஞ்சேரியில் அமைந்துள்ளன.

நாயர் சேவை சங்கத்தால் நிர்வகிக்கப்படும் சிறீ வியாச என்.எசு.எசு கல்லூரி வடக்காஞ்சேரியில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இந்துக்களுக்கான பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றும் வடக்காஞ்சேரிக்கு அருகிலுள்ள பார்லிக்காட்டில் நடைபெறுகிறது.

பண்டிகைகள்[தொகு]

வடக்காஞ்சேரியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள வழானி அணை முழுக்க முழுக்க மண்ணால் ஆனதாகும். இது வடகஞ்சேரிக்கு அருகிலுள்ள முக்கிய சுற்றுலா தலமாகும். வடக்காஞ்சேரி பூரம் நடைபெறும் பட்டைப்பகுதியின் ஒரு மையமாக அமைந்துள்ளது. பூரம் என்பது மத்திய கேரளாவின் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றாகும். குறிப்பாக உத்ராலிக்காவூ பூரம் மற்றும் மச்சத் திருவனிகாவ் வேலா ஆகியவை முறையே பட்டாசுக் களியாட்டங்கள் மற்றும் சடங்குகளுக்காக நன்கு அறியப்பட்டவையாகும்.பதினெட்டாரா (பதினெட்டு மற்றும் அரை) காவு வேலா என்ற பிரபலமான பண்டிகை கும்ப மாசத்தின் முதல் நாளில் வடக்காஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கோயில்களில் நடைபெறுகிறது.

சிறீ ருத்திரா மகாகாளி காவு திருவிழாவின் போது மிகவும் பிரபலமான பட்டாசுகள் வானவேடிக்கையின்போது வெடிக்கப்படுகின்றன. இத்திருவிழா கும்பம் மாதத்தில் (பிப்ரவரி-மார்ச்) நடைபெறுகிறது. இந்த சந்தர்ப்பத்தின் ஆடம்பரமும் அழகும் திருச்சூர் பூரம் அல்லது நெம்மாரா வல்லங்கி வேலாவின் பட்டாசுகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. இத்திருவிழா கும்பம் மாதத்தில் மச்சத் மாமாங்கத்தின் அடுத்த செவ்வாயன்று வருகிறது. இங்குள்ள பரா புரப்பாத் மச்சத் மாமாங்கத்தின் அதே நாளில் நடைபெறுகிறது.

கேரளாவில் உள்ள மற்ற கோயில் திருவிழாக்களைப் போலல்லாமல் இத்திருவிழாவில் யானைகள் முக்கிய ஈர்ப்பாக இருக்கின்றன, மலையாள மாத கும்பத்தின் முதல் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மச்சத் மாமாங்கம் அல்லது மச்சட்டு வேலா கொண்டாடப்படுகிறது. கோயிலின் அருகிலுள்ள பகுதியில் உள்ள கிராமங்கள் திருவிழாவில் போட்டி போட்டுக்கொண்டு ஆனால் ஆன்மீக வழியில் பங்கேற்கின்றன. இங்குள்ள பெரிய குதிரைகளை அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர்.

மதம்[தொகு]

பல முக்கியமான வழிபாட்டுத் தலங்களும் இங்கு உள்ளன. உத்ராலிக்காவு கோயில், மச்சத் திருவானிக்காவு கோயில், அகமலா சாசுத்தா கோயில் மற்றும் மாரி அம்மன் கோவில், செயின்ட் பிரான்சிசு சேவியர்சு ஃபோரேன் தேவாலயம், ஒட்டுப்பாரா பள்ளிவாசல் போன்ற மதம் தொடர்பான கோயில்கள் இங்குள்ளன.

வடக்காகஞ்சேரி - குன்னம்குளம் சாலையில், வடக்காஞ்சேரியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், எருமபெட்டிக்கு அருகிலுள்ள நெல்லுவேயில் உள்ள தன்வந்தரி கோயில் மற்றுமொரு முக்கியமான கோயில் உள்ளது.

இங்குள்ள சிவன் கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் தொல்பொருள் நினைவுச்சின்னமாக கருதப்படுகிறது. வடக்காஞ்சேரியில் இருந்து 3 கி.மீ தூரத்தில் கும்பலங்காட்டில் உள்ள பல்லிமண்ணா சிவன் கோயிலும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் மற்றொரு தொல்பொருள் நினைவுச்சின்னமாகும், இக்கோவில் சுவர் ஓவியங்களுக்கு பிரபலமானது.

வடக்காஞ்சேரியில் இருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்கும் கும்பலங்காடு என்ற இடத்தில் புனித யூட் ததேயசு தேவாலயம் அமைந்துள்ளது. கார்மலாமாதா தேவாலயமும் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குந்தானூரில் அமைந்துள்ளது.

வடக்காஞ்சேரியில் பெரும்பான்மையாக இந்துக்கள் வசிக்கின்றனர். கிறித்துவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இங்குள்ளனர். ஆனால் செருதுருத்தியிலிருந்து வடக்கஞ்சேரியின் வடக்குப் பகுதிகள் வரையில் மக்கள்தொகை மாற்றங்கள் கடுமையாக உள்ளன. இசுலாமியர்கள் குடியேற்றமும் இங்கு அதிகரித்து வருகிறது.

அரசியல்[தொகு]

வடக்காஞ்சேரி சட்டமன்றத் தொகுதி ஆலத்தூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். அனில் அக்காரா நியமாசபாவில் உள்ள தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் [1]

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

  • கிழக்கு - முள்ளூர்க்கரை, தெற்குங்கரை ஊராட்சிகள்
  • மேற்கு - முண்டத்திக்கோடு ஊராட்சி
  • தெற்கு‌ - தெற்குங்கரை, முண்டத்திக்கோடு ஊராட்சிகள்
  • வடக்கு - எருமப்பெட்டி, முள்ளூர்க்கரை ஊராட்சிகள்

விவரங்கள்[தொகு]

மாவட்டம் திருச்சூர்
மண்டலம் வடக்காஞ்சேரி
பரப்பளவு 28.52 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 28,692
ஆண்கள் 13,759
பெண்கள் 14,933
மக்கள் அடர்த்தி 1006
பால் விகிதம் 1085
கல்வியறிவு 87.17

படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wadakkancherry
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்காஞ்சேரி&oldid=3570538" இலிருந்து மீள்விக்கப்பட்டது