சேரமான் ஜும்மா பள்ளிவாசல்
சேரமான் சும்மா மசூதி (Cheraman Juma Masjid) இந்திய மாநிலமான கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் என்ற ஊரில் உள்ளது.[1] இது கி.பி 612-ம் ஆண்டு மாலிக் பின் தீனார் என்பவரால் கட்டப்பட்டது.[2] இது இந்தியாவின் முதல் பள்ளிவாசல் மற்றும் உலகின் இரண்டாவது சும்மா பள்ளிவாசல் ஆகும். இதன் பழைய தோற்றம் மற்ற உலக பள்ளிவாசல்கள் போல் அல்லாமல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
பெயர் காரணமும் வரலாறும்[தொகு]

சேரமான் பெருமாள் பாசுகர ரவி வர்மா என்ற சேர மன்னர் கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர நாட்டை ஆண்டு வந்தார். அவர் ஒரு நாள் இரவு வானில் நிலவு இரண்டாக பிளந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இதை பற்றி விசாரிக்கும் பொழுது அங்கு வியாபார நோக்கமாக வந்த அராபியர் கூட்டம் மூலம் முகம்மது நபி நிலவை பிளந்த நிகழ்வை பற்றியும், முகம்மது நபியைப் பற்றியும், இசுலாம் மதத்தை பற்றியும் கேள்விப்பட்டனர். மேலும் அவர்கள் கூறிய செய்திகளிலால் ஈர்க்கப்பட்ட சேரமான் பெருமாள் அந்த அரபியார் கூட்டத்துடனேயே மெக்காவிற்கு சென்று முகம்மது நபியைச் சந்தித்தார். அதன் பிறகு இசுலாம் மதத்தை ஏற்ற சேரமான் பெருமாள் தாசுதீன் எனவும் பெயர் மாற்றம் பெற்றார்.[சான்று தேவை]
பின் இந்தியாவில் இசுலாம் மதத்தை பரப்பும் பொருட்டு மாலிக் பின் தீனார் என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஏமன் நாட்டில் உள்ள சாபர் துறைமுகத்தில் (Port of Zabar, Yeman) நோய் வாய்ப்பட்டு இறந்தார்.[சான்று தேவை] அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
ஆனாலும் அதன் பிறகும் தங்கள் பயணத்தை தொடர்ந்த மாலிக் பின் தீனாரின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்து, சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தைக் கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் தங்கள் குடும்பத்தாருக்கு இசுலாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளைக் கட்டுமாறும் பனித்திருந்தனர். அதை ஏற்று மன்னர் குடும்பமும் இசுலாம் மதத்தை பரப்புவதற்கும் மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் கி.பி 612-ல் கொடுங்களூரில் முதல் மசூதியைக் கட்டினார்.[சான்று தேவை]
இவ்வாறு சேரமான் பெருமாள் அவர்களின் உதவியினால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் மசூதி, சேரமான் அவர்களை நினைவு கூறும் பொருட்டு சேரமான் சும்மா பள்ளிவாசல் என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது.
கட்டுமான அமைப்பு[தொகு]
இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி[சான்று தேவை] என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசூதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கிக் கட்டப்பட்டுள்ளது). இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது. [3]
சிறப்புகள்[தொகு]
இந்த மசூதி முகம்மது நபியின் காலத்திலேயே கட்டப்பட்டது.[சான்று தேவை] இது இன்றும் எல்லா மதத்தினரும் வந்து வழிபாடு செய்யும் ஒரு திருத்தலமாக உள்ளது. இன்றும் இந்த மசூதி சேரமான் பெருமாளின் வம்சத்தினராண கொச்சின் அரச குடும்பத்தினருக்கு முதல் மரியாதை கொடுக்கிறது. இங்கு மிகவும் பழமையான ஒரு தாமிர விளக்கு உள்ளது. இதற்கு எல்லா மதத்தினரும் எண்ணெய் கொண்டு வந்து விடுகின்றனர். மேலும் இங்குள்ள ரோசுவுட் சொற்பொழிவு மேடையும் (மிம்பர் படி) கரும்பளிங்குக் கற்களும் மிகவும் பழமையானதாகும். இதில் கரும்பளிங்குக் கற்கள், மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "CheramanJuma Masjid - the first mosque to be built in India at Kodungalloor" (in en). https://www.keralatourism.org/destination/cheraman-juma-masjid-kodungalloor/81.
- ↑ Columba Sara Evelyn, 2012, "Cheraman Juma Masjid, fec publishing ISBN 978-6136-79881-3
- ↑ "1400-year-old mosque to be restored to its original form". thehindu. http://www.thehindu.com/news/national/kerala/1400yearold-mosque-to-be-restored-to-its-original-form/article2142818.ece. பார்த்த நாள்: 29 சூன் 2011.
வெளியிணைப்புகள்[தொகு]
- cheraman juma masjid- a secular heritage பரணிடப்பட்டது 2017-07-26 at the வந்தவழி இயந்திரம்
- A mosque from a hindhu king
- Hindhu patron of a muslim heritage site பரணிடப்பட்டது 2018-10-04 at the வந்தவழி இயந்திரம்
- kalam to visit oldest mosque in sub-continant பரணிடப்பட்டது 2006-11-10 at the வந்தவழி இயந்திரம்
- 2/3 தென் இந்திய முஸ்லிம்களின் வரலாறு - CMN Saleem
- 1400-year-old mosque to be restored to its original form
- சேரமான் பெருமாள் மசூதி பற்றிய காட்சித்தொகுப்பு
- சேரமான்மசூதியின் இணையதளம்