உள்ளடக்கத்துக்குச் செல்

ரொசெட்டா திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரொசெட்டா திட்டம் (Rosetta Project), லாங் நௌ பவுண்டேசன் என்னும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு இயங்கிவரும் ஒரு திட்டம். உலக மொழிகளின் முக்கிய செய்திகளைச் சேமித்து வைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். உலக மொழியியலாளர்களும் மொழிகளைத் தாய்மொழியாகப் பேசுவோரையும் உதவியாகக் கொண்டு இத்திட்டம் வளர்ந்து வருகிறது. உலக மொழிகளில் 1,500 மொழிகளை ஆய்வு செய்ததில், இவற்றில் பல மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. உலகமயமாதலின் விளைவாகவும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளின் ஆதிக்கத்தாலும் இத்தகைய மொழிகள் அழிந்து வருகின்றன.[1][2][3]

ரொசெட்டா திட்டத்தின் குறிக்கோள்களுள் முக்கியமான ஒன்று, 13,000 நுண்பக்கங்களைச் சேமித்து வைக்கக்கூடிய 3-அங்குல ரொசெட்டா குறுந்தட்டு ஆகும். அனைத்து மொழிகளையும் ஆராய்ந்து, ஒப்பிட்டு. கல்விக்கும், பிற தொடர்புகளுக்கும் உதவுவதை முதன்மை நோக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சிறிய அளவிலான நிக்கல் குறுந்தட்டு, ஆய்வு மேற்கோள் நூல், வளர்ந்து வரும் இணைய சேமிப்பகம் என இத்திட்டம் மூன்று ஊடகங்களில் தகவல்களைச் சேமிக்கிறது.

திட்டம்

[தொகு]

ஐம்பது முதல் தொண்ணூறு விழுக்காடு மொழிகள் (ஏறத்தாழ சில ஆயிரம் மொழிகள்)அடுத்த நூற்றாண்டுக்குள் அழிந்துவிடக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் பல மொழிகளில் தகவல்கள் ஆவணமாக சேமித்து வைக்கப்படவில்லை. அழியக் கூடிய இவற்றை மீட்டு புத்துயிர்ப்பது கடினமான செயலாகும். குறைந்த அளவிலான பேச்சாளர்களைக் கொண்டுள்ள மொழிகளைப் பற்றிய ஆய்வுகள் தனிப்பட்ட ஆய்வாளர்களிடமும், சில நூலகங்களிலும் இருக்கின்றன. இவற்றைத் தொகுத்துப் பன்மொழிச் சூழலை பாதுகாப்பதற்காக, 1500 மொழிகளை இணைய வழியாக சேமித்து வழங்க லாங் நௌ பவுண்டேசன் திட்டமிட்டது.

இத்திட்டத்தின் நோக்கங்கள்:

  • மொழிகளை ஒப்பிட்டு ஆய்வுக்காகவும் கல்விக்காகவும் பயன்படுத்தும் சூழலை உருவாக்குதல்
  • சிறப்பாக இயங்கக் கூடிய மொழிக் கருவியை வழங்குவதன் மூலம், அழிவில் இருக்கும் மொழிகளை காப்பாற்றுதல்
  • மனிதர் பேசும் மொழிகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், பேணப்படுவதற்கும் சிறப்பான செயல்பாடுகளை

செய்தல்

இத்திட்டத்தின் முதல் செயல்பாடாக, ரொசெட்டா குறுந்தட்டில் 1500 மொழிகளைப் பற்றிய பத்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன. திறந்த மூல மொழிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் உலக அறிஞர்களும், தாய்மொழிப் பேச்சாளர்களும் இத்திட்டத்தில் இணைந்து உதவி வருகின்றனர், இத்திட்டத்தினை ஸ்டான்ஃபோர்டு, யேல், பெர்க்கிலி பல்கலைக்கழகங்களிலும் முக்கிய ஆய்வகங்களிலும் அறிமுகப்படுத்தி தகவல்களை ஆவணப்படுத்துகின்றனர். இத்தகவல்கள் இணைய வழி சேமிப்பகம், கலைக் களஞ்சிய ஆய்வு நூல், நீண்ட ஆயுளைக் கொண்ட குறுந்தட்டு ஆகியவற்றின்மூலம் வெளியிடப்படுகின்றன.

இவற்றைப் பெற்று பயன்படுத்த விரும்பும் தன்னார்வலர்க்கும், நிறுவனங்களுக்கும் இவற்றை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறுந்தட்டின் முதல் பதிப்பு நவம்பர் 3, 2008 அன்று வெளியிடப்பட்டது. இக்குறுந்தட்டு நுண்ணோக்கியின் வழியாகப் பார்த்து படிக்கக் கூடிய வகையில் 13,000 பக்கங்கள் சேமிக்கப்பட்டிருந்தன.

மேலும் பார்க்கவும்

[தொகு]

தொடர்புடைய கட்டுரைகள்:

வெளியிணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Rosetta Project". ABC Radio National (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). 2012-03-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.
  2. "Dr. Laura Welcher - The Rosetta Project & The Language Commons". Long Now (in ஆங்கிலம்). 2011-03-07. பார்க்கப்பட்ட நாள் 2023-09-26.
  3. A.V. (24 July 2017). "Papua New Guinea's incredible linguistic diversity". The Economist. https://www.economist.com/blogs/economist-explains/2017/07/economist-explains-14. பார்த்த நாள்: 20 July 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொசெட்டா_திட்டம்&oldid=4102619" இலிருந்து மீள்விக்கப்பட்டது