உருசியாவின் முதலாம் பேதுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரஷ்யாவின் முதலாம் பீட்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரஷ்யாவின் முதலாம் பேதுரு
பேரரசரும் சர்வாதிகாரியும்
எஸ்தோனியாவினதும் லிவோனியாவினதும் டியூக்
Peter der-Grosse 1838.jpg
ஆட்சிக்காலம் மே 7, 1682 - பெப்ரவரி 8, 1725
முடிசூடல் ஜூன் 25, 1682
முன்னிருந்தோர் பியோதர் III
பின்வந்தோர் கத்தரீன் I
Consort இயுடொக்சியா லோபுகினா
மார்த்தா ஸ்கவ்ரோன்ஸ்காயா
பிள்ளைகள்
அலெக்சி பெட்ரோவிச், ரஷ்யாவின் இளவரசர்
பெரிய டியூக் அலெக்சாண்டர்
பெரிய டியூச்சஸ் அன்னா
எலிசபெத்
பெரிய டியூச்சஸ் நத்தாலியா
பெரிய டியூச்சஸ் நத்தாலியா
தந்தை அலெக்சிஸ் I
தாய் நத்தாலியா நரிஷ்கினா
பிறப்பு சூன் 9, 1672(1672-06-09)
மாஸ்கோ
இறப்பு 8 பெப்ரவரி 1725(1725-02-08) (அகவை 52)

முதலாம் பேதுரு அல்லது பியோத்தர் அலெக்சியேவிச் ரொமானோவ் (ரஷ்ய மொழி: Пётр Алексе́евич Рома́нов, Пётр I, பியோத்தர் I, அல்லது Пётр Вели́кий, பியோட்டர் வெலிகிய்; (ஜூன் 9 [யூ.நா. மே 30] 1672–பெப்ரவரி 8 [யூ.நா. ஜனவரி 28] 1725)[1] இலிருந்து இறக்கும்வரை ரஷ்யாவையும் பின்னர் ரஷ்யப் பேரரசையும் ஆண்டவர். 1696 ஆம் ஆண்டிற்கு முன் இவர் தனது தந்தையின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவரும் நோய் வாய்ப்பட்டவருமான சகோதரர் ஐந்தாம் இவானுடன் கூட்டாக ஆட்சி நடத்தினார். பீட்டர் ரஷ்யாவை மேற்கத்திய மயமாக்கும் கொள்கையையும், நாட்டை விரிவாக்கும் கொள்கையையும் கடைப்பிடித்து வந்தார். இக் கொள்கை ரஷ்யச் சாரகத்தை (Tsardom) 3 பில்லியன் ஏக்கர் பரப்பளவு கொண்டதும் ஐரோப்பாவின் முக்கிய வல்லரசுமான ரஷ்யப் பேரரசாக மாற்றியது. இவர் 17 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அரசராகக் கணிக்கப்படுவதுடன், சீனத்துச் சிங் பேரரசின் பேரரசர் காங்சி, பிரான்சின் பதினான்காம் லூயிஸ் ஆகியோருக்குச் சமமாக வைத்து எண்ணப்படுகிறார்.

வரலாறு[தொகு]

பேதுரு 1672 ஆம் ஆண்டு ரஷ்யாவின் முதலாம் அலெக்சிஸ் அரசருக்கும் அவரது இரண்டாவது மனைவியான நத்தாலியா கிரிலோவ்னா நரிஷ்கினாவுக்கும் மாஸ்கோவில் பிறந்தார். 1676 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் முதலாம் அலெக்சிஸ் இறக்க அரசுரிமை அலெக்சிசின் முதல் மனைவியின் மகனும் பீட்டருக்கு மூத்தவருமான மூன்றாம் பியோடோருக்குக் கிடைத்தது. ஆனால் பியோடோர் வலுவற்றவராகவும், நோயாளியாகவும் இருந்தார். இவர் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 1682 ஆம் ஆண்டு இறந்தார்.

அரசுரிமைப் பிணக்கு[தொகு]

பியோடோருக்குப் பிள்ளைகள் இல்லாததால் அரசுரிமை குறித்து நரிஸ்கின் குடும்பத்துக்கும், மிலோலவ்ஸ்கி குடும்பத்துக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. பீட்டரின் இன்னொரு அரைச் சகோதரரான ஐந்தாம் இவான் வாரிசு உரிமைப்படி அடுத்த இடத்தில் இருந்தார். ஆனால் அவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததோடு உறுதியற்ற மனநிலை கொண்டவராகவும் இருந்தார். முடிவில் போயர் டூமா எனப்படும் ரஷ்யப் பிரபுக்கள் அவை 10 வயதேயான பீட்டரை அரசராகத் தெரிவு செய்தது. பீட்டரின் தாயார் பீட்டருக்காக அரசைக் கவனித்துக் கொண்டார். ஆனால் அலெக்சியின் முதல் மனைவியின் மகளான சோபியா அலெக்சேயெவ்னா என்பவர் ஸ்ட்ரெல்சி எனப்படும் ரஷ்யச் சிறப்புப் படையணியின் உதவியுடன் கலகம் விளைவித்தார். பீட்டரின் உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் இதில் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைகள் சிலவற்றைப் பீட்டரும் கண்டார்.

சோபியாவின் வெற்றி[தொகு]

இக் கலகத்தின் விளைவாக 1682 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சோபியாவும் அவரது ஆதரவாளர்களும், பீட்டருடன், இவானையும் இணை அரசர்களாக ஏற்றுக் கொள்வதில் வெற்றி கண்டனர். சோபியா பராயம் அடையாத அரசர்களுக்காக ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்க நியமிக்கப்பட்டார். ஏழு ஆண்டுகள் சோபியா, அளவற்ற அதிகாரத்துடன் ஆட்சி நடத்தினார்.

அரச ஆடை அணிகளுடன் இளம் பீட்டர்.

தன்னுடைய பெயரில் பிறர் ஆட்சி நடத்துவது பற்றி பீட்டர் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. அவர் கப்பல் கட்டுதல், கப்பலோட்டுதல், விளையாட்டுப் படைகளுடன் போர் விளையாட்டு விளையாடுதல் என்று பொழுதைக் கழித்து வந்தார். பீட்டரின் தாயார் அவரை முறையான அணுகு முறைகளைக் கையாளுமாறு வற்புறுத்தியதுடன், இயுடொக்சியா லோபுகினா என்பவரை 1689 ஆம் ஆண்டில் பீட்டருக்கு மணம் செய்தும் வைத்தார். இந்தத் திருமணம் தோல்வியில் முடிந்தது. 10 ஆண்டுகளுக்குப் பின் தனது மனைவியை கிறிஸ்தவத் துறவியாக்கித் திருமணப் பிணைப்பில் இருந்து விடுபட்டார்.

சோபியாவின் வீழ்ச்சி[தொகு]

1689 ஆம் ஆண்டு கோடையில், தனது அரைச் சகோதரி சோபியாவிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள பீட்டர் திட்டமிட்டார். கிரீமியாவில் இரண்டு படை நடவடிக்கைகள் வெற்றி பெறாததால் சோபியாவின் நிலை வலுக் குறைந்து இருந்தது. பீட்டரின் திட்டத்தை அறிந்த சோபியா "ஸ்ட்ரெல்சி"யின் தலைவர்களுடன் சேர்ந்து சதி செய்து மன்னருக்கு எதிராகக் குழப்பங்களை ஏற்படுத்தினார். இவரது திட்டங்களை முன்னரே அறிந்து கொண்ட பீட்டர் இரவோடிரவாக டிரொயிட்ஸ்கி (Troitsky) துறவி மடத்துக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்தபடியே சிறிது சிறிதாக ஆதரவாளர்களைத் திரட்டிய பீட்டர் சோபியாவை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்தார். எனினும், பீட்டர், தொடர்ந்தும் இவானுடன் சேர்ந்து ஆட்சி நடத்தி வந்தார். பீட்டர், சோபியாவைக் கட்டாயப்படுத்தி பெண் துறவியர் மடத்தில் சேர்த்தார். அங்கே, அரச குடும்பத்துக்குரிய பெயர், நிலை அனைத்தையுமே விட்டுக் கொடுக்கவேண்டி ஏற்பட்டது.

பீட்டர் முழு அதிகாரம் பெறல்[தொகு]

பீட்டர் பால்ட்டிக் கடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி.

இத்தனைக்குப் பின்னரும் பீட்டரால் அரசின் கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பீட்டரின் தாயே ஆட்சியை நடத்தி வந்தார். 1694ல் பீட்டரின் தாய் இறந்த பின்னரே பீட்டரின் கையில் முழுமையான ஆட்சிப் பொறுப்புக் கிடைத்தது. எனினும், செயற்திறன் இல்லாதிருந்தாலும், இவானும் இணையரசனாகவே இருந்து வந்தார். 1696 ஆம் ஆண்டில் இவான் இறக்க ஆட்சிப் பொறுப்பு முழுமையாகப் பீட்டரிடம் வந்தது.

உடல் தோற்றம்[தொகு]

பேதுரு மிகவும் உயரமானவராக இருந்தார் 6'8" (200 சமீ) உயரம் கொண்டிருந்த அவர் சமகாலத்து ஐரோப்பிய அரசர்கள் அனைவரையும்விட உயரமானவர். எனினும் அவரது உடல் முறையான அளவு விகிதங்களைக் கொண்டிருக்கவில்லை. இவரது கைகளும் பாதங்களும் சிறியனவாக இருந்தன. உயரத்துக்குப் பொருத்தமில்லாத வகையில் தோள் ஒடுங்கியிருந்தது. தலையும் சிறிதாக இருந்தது. இவற்றுடன் இவரது முகத்தில் தசை நடுக்கமும் காணப்பட்டது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது பீட்டருக்கு "பெட்டி மல்" எனப்படும் ஒருவகை வலிப்புநோய் இருந்திருக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.

உடல் வலிமை[தொகு]

பேதுரு ஒரு அறிவாளியின் மூளையையும், இராட்சத உடல் வலிமையையும் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. ஒருமுறை வெள்ளித் தட்டொன்றைக் கடதாசியைப் போல் மிக இலகுவாக சுருட்டிக் கசக்கிய நிகழ்வை அவரது வலிமைக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வர். இவரை யாராவது கோபப்படுத்தினால் அவரது அடியில் கோபப்படுத்தியவர் மயக்கம் அடைவார் என்றும் சொல்லப்படுகிறது.

பிள்ளைகள்[தொகு]

பேதுருக்கு இரண்டு மனைவியரும் அவர்கள் வாயிலாகப் பதினொரு பிள்ளைகளும் இருந்தனர். இவர்களில் மூத்தவனும், முடிக்கு உரியவனுமான அலெக்சிஸ், தந்தையைப் பதவியில் இருந்து தூக்கியெறியச் சதி செய்ததாக ஐயுறவு ஏற்பட்டது. இதனால் சிறையிடப்பட்ட அவன் சிறையிலேயே மர்மமான முறையில் இறந்துவிட்டான்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. இங்கு யூ.நா. எனக் குறிப்பிடப்பட்டது பழைய நாட்காட்டி ஆகும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தேதிகள் புதிய கிரெகொரியின் நாட்காட்டியில் தரப்பட்டுள்ளது.