யூரோமிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யூரோமிர் திட்டத்தின் இலச்சினைகள்

யூரோமிர் (Euromir) 1990களில் அமைக்கப்பட்ட ஒரு அனைத்துலக விண்வெளித் திட்டமாகும். உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் மற்றும் பன்னாட்டு அமைப்பான ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியனவற்றைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி வீரர்களை மீர் விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

1990 களின் தொடக்கத்தில், அக்காலத்தில் திட்டமிடப்பட்டிருந்த பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்காக, விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளிப்பது இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்து விண்வெளி வீரர்கள், அமெரிக்க விண்ணோடத்தில் மேற்கொண்ட பயணங்களும், உருசியாவின் மீர் விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்த பயணங்களும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் கொலம்பசு முன்னோடி பறத்தல் திட்டம்) அவர்களுக்கு நல்ல வின்வெளி அனுபவங்களை கொடுத்தன. மேலும், பன்னாட்டு ஒத்துழைப்புடன் உதவிகள் பெறுவதற்கான அனுபவங்களும் அவர்களுக்குக் கிடைத்தன.

1992 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு விண்வெளி வீரர்கள் பயிற்சிக்குப் பின்னர் விண்ணோடத் திட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர். நான்கு நபர்கள் மீர் விண்வெளி நிலையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். யூரி ககாரின் விண்வெளி பயிற்சி நிலையத்தில் மேலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்ற ஒப்பந்தமும் கையெழுத்தானது.

உல்ஃப் மெர்போல்டு, தாமசு இரெயிட்டர் ஆகிய இருவரும் முறையே 1994, 1995 இல் பறப்பதற்குரிய முதன்மையான நபர்கள் ஆவர் என்ற ஒப்பந்தம் 1993 ஆம் ஆண்டில் கையெழுத்தானது. பெத்ரோ துக்கியுவும் கிரிசுடர் ஃபக்ளசாங்கும் அவர்களுக்கு உதவியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். சோயுசு விண்கலத் தொகுப்பிலும், மீர் விண்வெளி நிலையத்திலும் இவர்கள் உருசிய மொழியில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

மெர்போல்டும், தாமசு இரெயிட்டரும் முறையே யூரோமிர் 94 ( சோயுசு டி.எம்-20) மற்றும் யூரோமிர் 95 ( சோயுசு டி.எம்-22) திட்டங்களில் விண்னில் பறந்தனர். இரெயிட்டர் இத்திட்டத்தில் விண்வெளியில் நடைபோட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோமிர்&oldid=3371770" இருந்து மீள்விக்கப்பட்டது