மைமனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைமனா (ஆங்கிலம் : Maymana; பாரசீக மொழி / உசுபேகிய மொழி : میمنه) என்பது ஆப்கானித்தான் நாட்டின் நகரமாகும். துருக்மெனிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள வடமேற்கு ஆப்கானித்தானின் பரியாப் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது நாட்டின் தலைநகர் காபூலுக்கு வடமேற்கே சுமார் 400 கிமீ (250 மைல்) தொலைவில் உள்ளது. இந்த நகரம் முர்காப் ஆற்றின் துணை நதியான மைமனா நதியில் அமைந்துள்ளது. மைமனா நகரின் மக்கட் தொகை 2015 ஆம் ஆண்டில் 149,040 ஆக இருந்தது.[1] இந்த நகரம் வடமேற்கு ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும்.

புவியியல்[தொகு]

முர்காப் ஆற்றின் துணை நதியான மைமனா நதியின் ஆற்றடுக்குத் திட்டில் 877 மீ (2,877 அடி) உயரத்தில் டோர்கெஸ்தான் மலைத்தொடரின் வடக்கு அடிவாரத்தில் மைமனா நகரம் அமைந்துள்ளது . நகரத்திற்கு 50 கி.மீ தெற்கே பேண்ட்-இ துர்கிஸ்தான் ஆற்றிலிருந்து மேமானா நதி கிளைக்கிறது. மைமனா பிராந்தியத்தின் மலைப்பகுதிகள் பொதுவாக பருவகால விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்ற வளமான மேல் மண்ணைக் கொண்டுள்ளன.

காலநிலை[தொகு]

கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் படி வெப்பமான கோடைகால மத்திய தரைக்கடல் காலநிலையை கொண்டுள்ளது.

மக்கட் தொகை[தொகு]

19 ஆம் நூற்றாண்டின் குடியேற்றத்தின் மக்கட் தொகை 15,000–18,000 என மதிப்பிடப்பட்டது. இந்த பிராந்தியத்தில் உசுபேகிய மொழி பரவலாக பயன்படுத்தப்படுவதால் இந் நகரம் இது உசுபெக் நகரமாக கருதப்பட்டது. இருப்பினும் வெவ்வேறு இனங்களான தஜிக்குகள், துர்க்மென்கள், பஷ்தூன் மக்கள் மற்றும் பலூச் போன்றவர்கள் வாழ்ந்ததாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 1958 ஆம் ஆண்டில் சனத் தொகை 30,000 என மதிப்பிடப்பட்டது. 1979 ஆண்டுகளில் இது 38,250 ஆகவும், 1982 ஆண்டுகளில் 56,973 ஆகவும் உயர்ந்தது. இவை உத்தியோகப்பூர்வ கணக்கெடுப்புக்களாக இருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டில் மைமனாவின் மக்கட் தொகை 75,900 என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் போதிய சான்றுகள் காணப்படவில்லை. 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. ஆதரவில் மக்கட் தொகை 149,040 ஆக மதிப்பிடப்பட்டது.[1] மைமனாவின் மொத்த நிலப்பரப்பு 3,461 ஹெக்டேயர்கள் ஆகும்.[2] மேலும் இந்த நகரத்தின் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 16,560 ஆகும்.[2]

பொருளாதாரம்[தொகு]

இந்த நகரம் விவசாயப் பகுதியாகும். கெய்சர் ஆற்றில் இருந்து நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. மேலும் நாடோடிகள் கரகுல் ஆடுகளின் வர்த்தகத்தை மேற்கொள்கின்றனர். மைமனா ஆப்கானிஸ்தானில் முக்கியமான கால்நடை மையமாகும். 1970 ஆண்டுகளில் கம்பளி மற்றும் பருத்தி பதப்படுத்தும் தொழில் நகரத்தில் வளர்ந்து வந்தது. இந்த நகரமானது தோல் பொருட்கள், பட்டு, தரைவிரிப்புகள், கோதுமை, பார்லி, முலாம்பழம் மற்றும் திராட்சை ஆகியவற்றிற்கான சந்தையாகும்.

மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் மைமனாவிற்கு மேற்கே 2 மைல் (3.2 கி.மீ) தொலைவில் ஒரு விமான நிலையம் அமைந்துள்ளது.

காபூல், காந்தாரம் , ஹெராத் , மசார்-இ-ஷெரீப் , ஜலாலாபாத் , குந்தூசு மற்றும் காசுனி ஆகிய நகரங்களுக்கு பிறகு மைமனா ஆப்கானித்தானின் எட்டாவது பெரிய நகரமாகும். இந்த நகரத்தில் 2005 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பெண்கள் நிர்வகிக்கும் சுயாதீன வானொலி நிலையமான ரேடியோ குயாஷ் நிறுவப்பட்டது.

போக்குவரத்து[தொகு]

இந்த நகரத்திற்கு மைமனா விமான நிலையம் சேவை புரிகின்றது. 2014 ஆம் ஆண்டில் இருந்து ஹெறாத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டுள்ளது.[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "State of Afghan Cities report 2015 (Volume-I English)". web.archive.org. 2015-10-31. Archived from the original on 2015-10-31. Retrieved 2019-11-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. 2.0 2.1 "The State of Afghan Cities report 2015". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "2014 East Horizon Airlines". Archived from the original on 2018-10-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைமனா&oldid=3568989" இலிருந்து மீள்விக்கப்பட்டது