மெக்டொனால்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்டொனால்ட்சு பிளாசா

மக்டொனால்ட்சு(McDonalds) (தமிழக வழக்கு: மெக் டொனால்ட்சு) ஒரு புகழ்பெற்ற வேக உணவுச்சாலை ஆகும். தரப்படுத்தப்பட்ட உணவுகளை குறைந்த விலைக்கு (மேற்கத்தைய நாட்டு மதிப்பில்) வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். இது 1940 களில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பர்கர், கோழி இறைச்சி உணவுகள், முட்டையில் செய்யப்பட்ட உணவுகள், உருளைக்கிழங்குப் பொரியல் மற்றும் சைவ வகை உணவுகளும் கிடைக்கும்.

மக்டொனால்ட்சு நிறுவனம் அமெரிக்க வாழ்வுமுறைக்கும் அதன் உலகமய பரவலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் முன்வைக்கப்படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் மக்டொனால்ட்ஸ் மத்தியவர்க்க அல்லது கீழ்த்தட்டு மக்களை நோக்கியே சந்தைப்படுத்தப்படுகின்றது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் மக்டொனால்ட்சு ஓர் புது அல்லது நவீன அனுபவமாக பார்க்கப்பட்டுகின்றது. வளர்முக நாடுகளில் மத்திய-மேல் உயர் வர்க்க வாடிக்கையாளரே மக்டொனால்ட்சை நாடுகின்றனர். மக்டொனால்ட்சு போன்ற அதிவேகஉணவுகளைத் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ உண்டால் உடலுக்கு கேடு விளைவிக்க தக்கவை[1]

வரலாறு[தொகு]

ரேமெண்ட் ஆல்பர்ட் க்ராக் என்பவர் பொருட்கள் விற்பனை செய்யும் முகவராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆரம்பத்தில் லில்லி சூலிட் கப் கம்பெனி என்ற நிறுவனத்திற்காக காகித கப் மற்றும் தட்டுகளை விற்பனை செய்து வந்தார். பின்னர் பால் பானம் (மில்க்‌ஷேக்) தயாரிக்கும் இயந்திரங்களை விற்கத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மில்க்‌ஷேக் இயந்திரங்களை விற்றார். கிட்டதட்ட 30 ஆண்டுகள் விற்பனைத் துறையில் இருந்த பிறகுஉணவகம் திறக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது.

கலிஃபோர்னியாவில் சான் பெர்னார்டினோ (San Bernardino) என்ற பகுதியில் இரண்டு சகோதரர்கள் ("Dick" McDonald , "Mac" McDonald) ஒரு ஹம்பர்கர் உணவகத்தை நடத்தி வந்தனர். 1954 ஆம் ஆண்டில் அந்த சகோதரர்கள் எட்டு மில்க்‌ஷேக் இயந்திரங்களை ரே க்ராக்கிடமிருந்து வாங்கினர். ஏன் அவர்களுக்கு இத்தனை இயந்திரங்கள் தேவைப்படுகிறது என்று வியந்த ரே க்ராக் அந்த சகோதரர்களின் உணவகத்தைச் சென்று பார்வையிட்டார். மக்கள் வரிசைப் பிடித்து உணவு வாங்கிச் செல்வதைக் கண்டார். தேவையை சமாளிக்கத்தான் அந்த சகோதரர்களுக்கு அத்தனை இயந்திரங்கள் தேவைப்பட்டது என்பதை உணர்ந்தார். அந்த உணவகத்தின் தூய்மையும், எளிமையும், உணவின் நியாயமான விலையும் அதிக நேரம் காக்க வைக்காமல் உணவை விரைவாகத் தயாரித்த பாங்கும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.

15 காசுக்கு ஒரு பர்கர், 10 காசுக்கு (அமெரிக்க டாலர்) ஒரு மெதுபானம் இப்படி என அவற்றை விரைவாக வாங்கிச் செல்வது மக்களுக்கு பிடித்திருந்ததையும் அவர் கவனித்தார். அம்மாதிரியான உணவகங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்பதை அந்தக்கணமே கண்டுகொண்டார் ரே க்ராக். உடனே அந்த சகோதரர்களிடம் பேசி அதே போன்ற உணவகங்களை நிறுவன உரிமம் முறையில்('franchised') நாடு முழுவதும் திறக்கலாம் என்று ஆலோசனை கூறியதோடு தானே அதற்கு முகவராக இருப்பதாகவும் கூறினார். அந்த சகோதரர்களும் இணங்கவே அடுத்த ஆண்டே அதாவது 1955 ஆம் ஆண்டு தனது முதல் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை இலினோயின் டெஸ் பிலைனிஸ்(Des Plaines) என்ற பகுதியில் திறந்தார். நிறுவன உரிமத் தொகையிலிருந்து முகவருக்கான தொகை மட்டும்தான் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அந்த உணவகத்தின் வருமானம் அவர் பெற்ற தொகையை விட அதிகமாக இருந்தது. இருப்பினும் அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை நிறுவன உரிம அடிப்படையில் திறப்பதிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார்.


ஆறு ஆண்டுகள் கழித்து மெக்டொனால்ட் சகோதரர்களுக்கும், ரேக் க்ராக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க அவர்களுக்கு 2.7 மில்லியன் டாலரைக் கொடுத்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் ரே க்ராக் பெற்றார். ஆனால் தங்கள் முதல் உணவகத்தை மட்டும் விற்க அந்த சகோதரர்கள் மறுத்து விட்டனர். ரே க்ராக் அந்த உணவகத்திற்கு நேர் எதிரே ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைத் தொடங்கினார் அந்த சகோதரர்கள் தங்கள் சொந்த உணவகத்தை மூட வேண்டியதாயிற்று. தரம், தூய்மை, விரைவான சேவை, நியாயமான விலை இவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. முதல் உணவகம் திறக்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் அமெரிக்க முழுவதும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டன. பத்தே ஆண்டுகளில் ரே க்ராக்கின் மெக்டொனால்ட்ஸ் உணவகம் பங்குசந்தையில் இடம் பிடித்தது.

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை முதலாளித்துவத்தின் சின்னம் என்று ஒதுக்கிய சோவியத் மண்ணிலும் 1990 ஆம் ஆண்டில் அது கால் பதித்தது. உலகின் ஆக சுறுசுறுப்பான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ரஷ்யாவில்தான் இயங்குகிறது. உலகின் மிகப்பெரிய மெக்டொனால்ட்ஸ் உணவகம் 1992 ல் சீனாவில் திறக்கப்பட்டது. உலகின் எந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்திலும் உணவின் சுவை கிட்டதட்ட ஒன்றாகவே இருக்கும். அதற்கு காரணம் உணவு தயாரிக்கும் முறையும் அளவுகளும் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப் பட்டிருப்பதுதான். மெக்டொனால்ட்ஸ் காலத்துக்கேற்பவும் அது மாறி வந்திருக்கிறது. அந்த உணவகங்களில் வேலை செய்ய ஆரம்பத்தில் பதின்ம வயதினரே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 1980 களுக்கு பிறகு பெரியவர்களும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மேலும் மாறும் சுவைகளுக்கு ஏற்றவாறு ஹம்பர்கரைத் தவிர்த்து மீன், கோழி பர்கர்களும், காலை உணவுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.[2]மேற்கோள்கள்[தொகு]

McDonald’s Menu

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்டொனால்ட்சு&oldid=3795513" இலிருந்து மீள்விக்கப்பட்டது