மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்க நூலான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன.

பாடிய புலவர்[தொகு]

இந்தத் தொகுப்பில் உள்ள 10 பாடல்களைப் பாடிய புலவர் பாலைக் கௌதமனார் (பாலை = பாலக்காடு)

பாடப்பட்ட அரசன்[தொகு]

பாடப்பட்ட அரசன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். | பல்யானைச் செல் | குட்டுவன். இவன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தம்பி.

பாடிப் பெற்ற பரிசில்[தொகு]

இந்த அரசன் தன்னைப் பாடிய புலவரிடம் வேண்டியதைக் கேட்டுப் பரிசிலாகப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். புலவரோ தானும் தன் பார்பனியும் சுவர்க்கம் புக ஆவன செய்யவேண்டும் என்றார். அரசன் பார்ப்பாரில் சிறந்தவரைக்கொண்டு அதற்காக வேள்வி செய்தான். 10-ஆவது வேள்வியின் முடிவில் புலவர் பார்ப்பானும், அவர் மனைவி பார்ப்பனியும் மக்களின் பார்வையிலிருந்து மறைந்தனர்.

பாடல் சொல்லும் செய்தியின் சுருக்கம்[தொகு]

21 'அடுநெய் ஆவுதி'[தொகு]

கடவுளுக்குப் படைக்கும் 'பெரும்பெயர் ஆவுதி' என்னும் வேள்வியையும், மக்களை விருந்தோம்பும் 'அடுநெய் ஆவுதி' என்னும் வேள்வியையும் அரசன் செய்தான். பூழியர் நாட்டுக்கு அரசனாகவும், மழவர் நாட்டுக்குப் பாதுகாவலனாகவும் விளங்கினான். இவன் பரிவேள்வி (அஸ்வமேத யாகம்) செய்தபோது எதிர்த்த அயிரைமலை மன்னனோடு வென்று அந்த நாட்டைத் தனதாக்கிக் கொண்டான்.

22 'கயிறு குறு முகவை'[தொகு]

கொங்கரை வென்றான். அகப்பா நகரின் கோட்டையைக் கைப்பற்றினான். கொங்கர் தம் நாட்டில் பாறைகளை உடைத்து ஆழமாகக் கிணறு தோண்டி, கயிற்றில் 'பத்தல்' (வாளி) கட்டி நீர் இறைக்கும்போது பாட்டுப் பாடிக்கொண்டே நீர் இறைப்பார்களாம். இந்தப் பாட்டுதான் 'கயிறுகுறு முகவை'

23 'ததைந்த காஞ்சி'[தொகு]

வளமுடன் விளங்கிய பகைநாடு இவன் தாக்குதலுக்குப் பின் வளம் குன்றிப்போன காட்சி இப் பாடலில் சொல்லப்படுகிறது. 'பொலந்தார்க் குட்டுவன்' என்று இவன் சிறப்பிக்கப்படுகிறன். வயிரியர் பாடல் இவனுக்குச் சிறிதளவே மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும் இவன் அவர்களுக்குப் 'பெருங்கலம் வீசி' மகிழ்பவன்.

24 'சீர்சால் வெள்ளி'[தொகு]

நாட்டில் நல்லமழை பெய்யவும், மனைவி, மக்கள், மறவர் நலமுடன் வாழவும் வகைசெய்து நல்லாட்சி நடத்தினான்.

25 'கான் உணங்கு கடுநெறி'[தொகு]

தோட்டிமலைக் கோட்டையை அழித்தான். தோட்டி = பார்க்க; தொட்டபெட்டா \ தோட்டி மலை

26 'காடுறு கடுநெறி'[தொகு]

'பெரும்பல் யானைக் குட்டுவன்' என்று இவன் குறிப்பிடப்படுகிறான். இரும்பில் கூற்றம் என்னும் நாட்டுப்பகுதியை வென்றான். அதன் அழிநிலையைச் சுட்டிக் காட்டிப் புலவர் அந்நாட்டுக்கு உதவுமாறு குறிப்பால் அறிவுறுத்துகிறார்.

27 'தொடர்ந்த குவளை'[தொகு]

குட்டுவன் நாட்டில் மக்கள் பூசலிடும் ஒலி கேட்கும். எருது சாகாட்டை (வண்டியை) இழுத்துக்கொண்டு நெய்தல் வயல்களில் செல்லும்போது அதன் உருளி சேற்றில் மாட்டிக்கொள்ளும். அப்போது சாகாட்டாளர் (வண்டிக்காரர்) சக்கரத்தைத் தூக்கிக்கொண்டே எருதுகளை ஓட்டும் ஓசையை எழுப்புவர். இந்த ஓசைதான் அவன் நாட்டில் கேட்கும் பூசல்.

28 'உருத்துவரு மலிர் நிறை'[தொகு]

குட்டுவன் நாட்டில் ஒரே ஒரு பூசல். அது மக்கள் பூசல் அன்று. உவலைப் பூக்கள் மிதக்கப் பேரியாற்றில் பெருகிவரும் வெள்ளத்தின் பூசல். (பூசல் = போரிடும் ஓசை)

29 'வெண்கை மகளிர்'[தொகு]

'பெரும்பல் யானைக் குட்டுவன்' என்று இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளதால் இவனது யானைப்படையின் பெருக்கத்தை உணரமுடிகிறது.

30 'புகன்ற வாயம்'[தொகு]

வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து குட்டுவனைத் தாக்கினர். குட்டுவன் கடவுள் பேணிப் பெருஞ்சோற்றுப் பிண்டம் கொடுக்கப்போவதாக் கூறிக்கொண்டு முரசை முழக்கினான். அதனைக் கேட்ட வேந்தரும் வேளிரும் தமக்கு அரண்களைக் கடலில் அமைத்துக்கொள்ளலாமா, காட்டில் அமைத்துக்கொள்ளலாமா என்று எண்ணிப் பார்த்துக்கொண்டு நடுங்கலாயினர்.

காலச்செய்திகள்[தொகு]

 • அந்தணர் - அறுதொழில்; 1 ஓதல், 2 வேட்டல், 3 பிறரை ஓதும்படி செய்தல், 4 பிறரை வேள்வி செய்யும்படி செய்தல், 5 ஈதல், 6 ஏற்றல் (24)

பழக்க வழக்கங்கள்[தொகு]

 • எஃகம் (வாள்) புலித்தோல் உறையில் தொங்கவிட்டுக் கொண்டிருந்தனர்.(24)
 • கழுதை ஏர் - வெற்றி கொண்ட நாட்டில் கழுதையை ஏரில் பூட்டி உயுதனர் (25)
 • போர்முரசம் மயிரோடு கூடிய தோலால் போர்த்தப்பட்டிருக்கும், அதனை முழங்கத் தொடங்கும்போது பல்வேறு கூலங்களை (தானியங்களை)க் குருதியில் கலந்து தூவுவார்கள். (29)
 • அவல் இடித்தல் \ ஈரப்பதம் கொண்ட நெல்லை உரலில் போட்டு மகளிர் அவல் இடிப்பர். அறுவடைப் பதத்தில் முடம்பட்டுச் சாய்ந்து கிடக்கும் நெல்வயலில் மேயும் அயிரை மீன்களை மேய்வதற்காக நாரைகள் வரும். அவற்றால் முதிர்ந்த நெல் வயலில் உதிர்ந்து சேதமாகும். எனவே அவல் இடிக்கும் மகளிர் தம் உலக்கைகளை வாழைமரத்தில் சாய்த்து வைத்துவிட்டு நாரைகளை ஓட்டுவர் (29)

அரிய தொடர்[தொகு]

 • உணவு - 'உண்மருந்து' (24)
 • பெருஞ்சோறு \ போரில் பேய், காக்கை, கழுகு அருந்தும் பிணச்சோறு \ இதனை எறும்பு மொய்க்காதாம். அதனால் அது பெருச்சோறு. காண்க; பெருஞ்சோறு

கோள்[தொகு]

 • வெள்ளிக்கோள் வடக்கில் சாய்ந்து ஆநியம் பாதையில் செல்லும்போது நேரநாட்டில் நல்லமழை பெய்யும் (24, 69)

ஐவகை நிலம் - வளம்[தொகு]

காண்க; ஐந்திணை வளம் பாடல் 30

 • தண்கடற் படப்பை \ நெய்தல் \ துறையில் கொத்துக் கொத்தாக ஞாழல் பூ (நீல நிறத்தில்) பூத்திருக்கும். அதனோடு கலந்து நெய்தல் பூ பணி கலந்தது போல் பூத்திருக்கும். அதனோடு பசுமைநிற இலைகள். துறையின் கரையில் புன்னைமரம். அதில் வெண்ணிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதன் பூக்களுக்கு இடையே தன்னை மறைத்துக்கொண்டு குலுகு அமர்ந்திருக்கும். அருகே கானல் நில மணல். மணலோரம் அடும்பு பூத்திருக்கும். அலையில் வரும் சங்குகளின் ஒலி அங்குக் கேட்கும்
 • குன்றுதலை மணந்த புன்புல வைப்பு \ குறிஞ்சி \
 • செழும்பல் வைப்பு \ மருதம் \
 • புன்புலம் தழீஇய புறவணி வைப்பு \ முல்லை \
 • விண் உயர்ந்து ஓங்கிய கடறு \ பாலை \

கருவிநூல்[தொகு]

 • பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், வே. சாமிநாதைய்யர் பதிப்பு, 1920