முகவை கண்ண முருகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

முகவை கண்ண முருகனார் (1890 - ஆகஸ்ட் 28, 1973) 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு தேச பக்தக் கவிஞராகத் தமிழ்நாடெங்கும் அறியப்பட்டார். சம காலத்தியவரான சுப்பிரமணிய பாரதியாருக்கு இணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர்.

கவி முருகனாரின் "ஸ்வதந்திர கீதங்கள்' என்ற பாடல் தொகுப்பு, 1918-இல் நூல் வடிவம் பெற்றது. அது வெளியாவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே "தேசிய சிந்தனை செறிந்த மகாகவிராயர்' என்று புகழ்ந்துரைக்கப்பட்டார் முருகனார். தென்னிந்தியர் அனைவரும் இந்திமொழி கற்க வேண்டும் என முதன்முதலாக வாதிட்டவர் கவி முருகனார்.. இது குறித்து, அவரது "ஸ்வதந்திர கீதங்க'ளில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

பிற்காலத்தில் துறவறம் பூண்டு ரமண மகரிஷியின் சீடராக வாழ்ந்து பல்லாயிரக்கணக்கான கவிகளைப் புனைந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இராமநாதபுரம் மாவட்டத்தில் (ராமநாதபுரத்துக்கு மற்றொரு பெயர் முகவை) ஓர் எளிய அந்தணர் குடும்பத்தில், ஆகஸ்டு 1890 -ஆம் ஆண்டு கிருஷ்ணய்யர்-சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். ஆரம்பக்கல்வியை ஸ்காட் மிஷன் பள்ளியில் படித்தார். இரண்டாண்டுகள் மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தார்.

கல்லூரி நாட்களிலேயே அவருக்கிருந்த தமிழ்ப்பற்றின் விளைவாக, தமது பெயரை முருகனார் என்று தூய தமிழாக்கிக் கொண்டார். பிறந்த இடம் முகவை என்பதால், "முகவைக் கண்ண முருகனார்' என்ற பெயரில் பிரபலமானார்.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஓரிரு ஆண்டுகள் ராமநாதபுரம் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேலுச்சாமித் தேவர் என்பவருக்கு திருக்குறள் கற்பிக்க நியமனம் பெற்றார். இதற்கிடையில் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது.

பிறகு தமது மனைவி மற்றும் விதவைத் தாயாருடன் சென்னை நகருக்குக் குடி பெயர்ந்தார். நார்விக் மகளிர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். அப்போது தேசியப் பாடல்கள் பல இயற்றிப் பிரபலமாகி வந்தார்.

ராவ்சாஹிப், மு. ராகவையங்கார் முதலான தமிழ் வல்லுனர்களுடன் தமிழ்ச் சொல்லகராதிக் (Lexicon)​ குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

துறவறம்[தொகு]

அந்தக் காலகட்டத்திலேதான் ரமண மகரிஷியின் எளிய அத்வைத உபதேசம் தாங்கிய "நான் யார்?' என்ற சிறு நூலை 1922-இல் படிக்க நேர்ந்தது. அதே ஆண்டு திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியைத் தரிசித்தார்.

1926-இல் தமது அருமை அன்னை மறைந்ததும், கடைசி உலகப்பற்றும் அறுந்தது. தமிழ்ப் பண்டிதர் வேலையை உதறித் தள்ளினார். வீடு வாசல் துறந்தார். தனியாகத் திருவண்ணாமலை சென்று ஸ்ரீரமணரின் காலடி பணிந்து, புற வாழ்வை அறவே துறந்தார். கடைசிவரை ஒரு துறவியாய் வாழ்ந்தார்.

கவி புனைதல்[தொகு]

ரமணர் பக்தர்களுக்கு அருளிய உபதேச வாசகங்களையும், எளிய ஆன்ம விசாரத் தத்துவ சாரத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக் கொண்டு அவற்றைக் கருத்துச் செறிவான செந்தமிழ்ச் செய்யுள்களாகச் செதுக்கலானார். அவ்வப்போது மகரிஷி ரமணரிடமும் காண்பித்து, அவரது ஆலோசனை மற்றும் அனுமதியும் பெற்று வந்தார். ஆங்காங்கே மகரிஷி அளித்த திருத்தங்களைப் புகுத்தி, பாடலைப் புனரமைத்தார்.

இவ்வாறு கோத்தமைத்த நூலே குருவாசகக் கோவை என்பது. மொத்தம் 1,282 நாலடி வெண்பாக்கள் கொண்ட நூல். அவற்றுள் 28 வெண்பாக்கள் ஸ்ரீரமணர் இயற்றியவை. இக் கோவை, குரு ரமணரின் ஒப்புதல் பெற்றது. இப்பாடல்கள் அனைத்தையும் பேராசிரியர் கே. சுவாமிநாதன் (1896-1994) என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்துள்ளார்.

இயற்றிய நூல்கள்[தொகு]

1928-இல் முருகனாரின் முயற்சியால், ரமணர் அவ்வப்போது இயற்றிய பாடல்கள் ஒன்றுதிரட்டப்பட்டுச் சீரமைத்துத் தொகுக்கப்பட்டன. இவையே "உள்ளது நாற்பது' என்ற தலைப்புடன் ஒரு நூலை எழுதினார் கண்ண முருகனார்.

இவை தவிர,

  • ஸ்ரீரமண சந்நிதி முறை,
  • ஸ்ரீரமண தேவமாலை,
  • ஸ்ரீரமண சரணப்பல்லாண்டு,
  • ஸ்ரீரமணானுபூதி முதலிய தோத்திர நூல்களையும் இயற்றியுள்ளார்.

மேலும், ரமண-அனுபூதி பற்றி முருகனார் நூற்றுக்கணக்கான பாடல்களைப் புனைந்திருக்கிறார்.

பதினான்காயிரம் (14,000) பாக்கள் இயற்றிய முருகனாரின் பாடல்கள், "ரமண ஞான போதம்' என்ற தலைப்பில் ஒன்பது தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீரமண மகரிஷி 1950-இல் மகா நிர்வாணம் எய்திய பிறகு 23 ஆண்டுகாலம் முருகனார் வாழ்ந்து, ஆன்மிகப் பாக்களை புனைந்து வந்தார். சுமார் 30,000-க்கும் மேற்பட்ட தீந்தமிழ்ப் பாக்களை இயற்றி பெருஞ்சாதனை படைத்துள்ளார். கடைசி ஆண்டுகளில் ரமணாசிரமத்திலேயே தங்கியிருந்து பக்தர்களுக்கு தெள்ளிய விளக்கங்கள் அளித்து வந்தார்.

மறைவு[தொகு]

முருகனார், 1973-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 28 ஆம் தேதி காலமானார். இவரது சமாதி ரமணாச்சிரமத்துக்கு வடக்கே அருணை மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

நினைவகம்[தொகு]

இராமநாதபுரத்தில் பிறந்து, வசித்த முருகனாரது இல்லம், அன்னாரது நினைவகமாக "ஸ்ரீமுருகனார் மந்திரம்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு, ரமண பக்தர்கள் வணங்கும் ஒரு புனிதத் தலமாக இருந்து வருகிறது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகவை_கண்ண_முருகனார்&oldid=2231414" இருந்து மீள்விக்கப்பட்டது