முகம்மது மன்சுருதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது மன்சுருதீன்
தொழில்ஆசிரியர், எழுத்தாளர், நாட்டுப்புறக் கலை ஆர்வலர்
தேசியம்வங்கதேசம்
காலம்வங்காள மறுமலர்ச்சி
வகைநாட்டுப்புறவியல், புதினம், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாற்று நூல்கள், அகராதியியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆர்மோனி
குறிப்பிடத்தக்க விருதுகள்எகுசே படக்
சுதந்திர தின விருது

முகம்மது மன்சுருதீன் (Muhammad Mansuruddin) (31 ஜனவரி 1904 - 19 செப்டம்பர் 1987) ஒரு வங்காள எழுத்தாளரும், இலக்கிய விமர்சகரும், கட்டுரையாளரும் ஆவார். இவர் அகராதிகள் உருவாக்கத்தில் பங்கு பெறுபவரும், வாழ்க்கை வரலாற்று ஆசிரியரும் ஆவார்.[1] அவர் நாட்டுப்புறக் கதைகள் எழுதுவதில் ஒரு முன்னோடியாகவும், வல்லுநராகவும் இருந்தார். மேலும், மிகப்பழமையான நாட்டுப்புறப் பாடல்களை ஆர்மோனி என்ற 13 தொகுதிகளாக தொகுத்துள்ளார். நாட்டுப்புறப் பாடல்களின் சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக அவர் வாழ்நாள் முழுவதும் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் 1987 ஆம் ஆண்டில் அவருக்கு டி.லிட் பட்டத்தை வழங்கியது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

1904 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி, பிரித்தானிய இந்தியாவின் கிழக்கு வங்காளத்தின் பப்னா மாவட்டத்தின் (தற்போதைய வங்கதேசம்) சுஜாநகர் தானாவின் கீழ் உள்ள முராரிபூர் கிராமத்தில் முஹம்மது ஜெய்தர் அலி (தந்தை) மற்றும் ஜியாருன் நிசா (தாய்) ஆகியோருக்கு மன்சுருதீன் பிறந்தார். இவர் மாதபச்சந்திர நந்தி பாத்ஷாலா என்ற கிராமப்புற பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். கலில்பூர் உயர்நிலைப் பள்ளியில் 1921 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் படித்தார். பாப்னாவில் எட்வர்ட் கல்லூரியில் ஐஎஸ்சி படிப்பை முடித்தார். 1923 ஆம் ஆண்டில் ஐ.ஏ ஐ ராஜசாகி கல்லூரியிலும் முடித்தார். 1926ஆம் ஆண்டில் ராஜ்சாகி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இந்திய வட்டார மொழியியல் துறையில் படித்தார். அங்கு இருந்து 1928 ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டத்தினைப் பெற்றார். [1] ராஜ்சாகி கல்லூரியின் மாணவராக இருந்தபோது, 1925 ஆம் ஆண்டில் செரிபூன் நிசாவை மணந்தார். அவர்களுக்கு ஆறு மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர்.

கற்பித்தல் தொழில்[தொகு]

1929 ஆம் ஆண்டில் பள்ளி துணை ஆய்வாளராக அரசு சேவையில் சேர்ந்தார். நெளகெளனில் பணியமர்த்தப்பட்டபோது, அப்போது மண்டல துணை அதிகாரியாக இருந்த அன்னதசங்கர் ராயை சந்திக்க வந்தார். ஆசிரியராக அவரது வாழ்க்கை 1932 ஆம் ஆண்டில் டாக்கா இஸ்லாமிய இடைநிலைக் கல்லூரியில் தொடங்கியது. இப்பணியில் ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் கற்பித்தார். 1935ஆம் ஆண்டு முதல் 1938 ஆம் ஆண்டு வரை கல்கத்தாவின் ஹவுரா இடைநிலைக் கல்லூரியில் கற்பித்தார். 1938 முதல் 1941 வரை சிட்டகாங் கல்லூரியில் பெங்காலி மொழியையும் இலக்கியத்தையும் கற்பித்தார். பின்னர் ராஜ்சாகி கல்லூரியில் சேர்ந்து 1941 முதல் 1943 வரை கற்பித்தார். 1948 முதல் 1952 வரை சில்ஹெட்டில் உள்ள முர்ரே சந்த் கல்லூரியில் வங்காள மொழி மற்றும் இலக்கியப் பேராசிரியராக இருந்தார். பேராசிரியர் மன்சூருதீன் 1952 முதல் டாக்கா கல்லூரியில் கற்பித்தார். அதே நேரத்தில், டாக்கா பல்கலைக்கழகத்தின் வங்க மொழித்துறையில் ஒரு பகுதிநேர ஆசிரிய-உறுப்பினராக பணிபுரிந்துள்ளார். மேலும், சர்தா என்ற போலீஸ் அகாடமியில் பயிற்றுவிப்பாளராக சிறிது காலம் பணியாற்றினார். ஒரு ஆசிரியராக அவர் தனது மாணவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானவராகவும் கவர்ச்சிகரமானவராகவும் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை[தொகு]

மன்சுருதீன் மிக ஆரம்ப கட்டத்திலேயே எழுதத் தொடங்கினார். நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்பு அவரது மிகப் பெரிய படைப்பாக இருந்தாலும், அவர் தனது வாழ்நாள் முழுவதும் இலக்கியக் கட்டுரைகளையும் புனைகதைகளையும் எழுதினார். வங்காளத்தின் பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களின் தொகுப்புதான் அவரது மிகவும் குறிப்பிடத்தக்க இலக்கிய பங்களிப்பாகும். 1952 ஆம் ஆண்டில் அவர் மாதாந்திர இலக்கியமான மஹ்-இ நவ் பத்திரிகையின் ஆசிரியராக சுமார் ஆறு மாதங்கள் பணியாற்றினார் (அரசாங்க சேவையில் மாற்றுப்பணியாக).

பவுல் பாடல்களையும் பிற கிராமப்புற பாடல்களையும் சேகரிப்பதில் ஐம்பது முதல் அறுபது ஆண்டுகள் செலவிட்டார். மொழி அகராதியின் துல்லியத்தை கவனிக்காமல் அவர் பாடல்களைப் படியெடுத்தார். பாடகர்களின் வாய் மொழியாகக் கேட்டவாறே அவர் பாடல்களை வார்த்தைகளாகப் பதிவு செய்தார். அவர் தனது வாழ்நாளில் பதின்மூன்று தொகுதிகளாக சேகரிக்கப்பட்ட ஏராளமான நாட்டுப்புறக் கவிதைகள் மற்றும் பாடல்களை சேகரித்தார். லாலோன் ஃபக்கீரின் பாடல்களையும் சேகரித்து அத்தோடு உள்ளடக்கினார். மேலும், 1974 ஆம் ஆண்டில், லாலன் ஃபக்கீரின் சில பாடல்களை சர்வதேச பார்வையாளர்களுக்காக மொழிபெயர்த்தார். [2] சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞான மரபுகளைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய இளைய நாட்டுப்புறவியலாளர்களை அவர் அடிக்கடி ஊக்குவித்தார். அதே நேரத்தில் நாட்டுப்புற ஆராய்ச்சியாளர்களுக்கு நாட்டுப்புறப் பாடல்களின் கிராமப்புற மூலங்களுக்குச் சென்று அதன் பின்னணியில் உள்ள வாழ்க்கையைக் கண்டறிய அறிவுறுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Wakil Ahmed. "Mansuruddin, Muhammad". வங்காளப்பீடியா. பார்க்கப்பட்ட நாள் June 15, 2015.
  2. http://www.thedailystar.net/story.php?nid=79564 The long tradition of Bengal mysticism
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_மன்சுருதீன்&oldid=2937912" இலிருந்து மீள்விக்கப்பட்டது