மீ சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீ சன்
பெயர்
பெயர்:மீ சன்
அமைவிடம்
நாடு:வியட்நாம்
மாகாணம்:குவாங் நாம்
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன், பத்ரவேச்வரன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:சாம்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:கி.பி. 4 ஆம் நூற்றாண்டு

மீ சன் (வியட்நாமிய உச்சரிப்பு: [mǐˀ səːn]) வியட்நாம் நாட்டில் உள்ள பண்டையகால இந்து கோயில்களின் தொகுதியாகும். இவை, 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் சம்பா அரசர்களால் கட்டப்பட்டவையாகும். மீ சன், மத்திய வியட்நாமில் குவாங் நாம் மாகாணம்,டுய் சுயென் மாவட்டம், டுய் பூ கிராமத்திற்கு அருகில் உள்ளது. இரு மலைத்தொடர்களால் சூழப்பட்டு, இரு கிமீ அகலமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இக்கோயில்கள் உள்ளன. சம்பா அரசர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகவும், அரச பரம்பரையினர் மற்றும் பெரும் வீர்ர்களின் நினைவிடமாகவும் இருந்துவந்துள்ளது. சமச்கிருதம் மற்றும் சம் மொழி கல்வெட்டுகள், 70 இக்கும் மேற்பட்டக் கோயில்கள் ஒருகாலத்தில் இங்கு இருந்தன. ஆனால், வியட்நாம் போரின்போது இவற்றில் பெரும்பாலனவை அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அழிந்துபோயின. 1999 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

70 இக்கும் மேற்பட்ட கோயில்கள், கல்லறைகளைக் கொண்ட மீ சன்னின் காலகட்டம், 4 ஆவது முதல் 14 ஆவது நூற்றாண்டு வரை எனக் கருதப்படுகிறது. எனினும், சில இடிபாடுகள் மற்றும் கல்வெட்டுக்கள் நான்காம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவையாக உள்ளன. டோங் டுவாங் நகரை தலைநகராகக் கொண்ட பண்டையகால சம்பா அரசின், கலாச்சார மற்றும் சமய புனிதத் தலைநகராக மீ சன் விளங்கியிருக்கூடும்.

பத்ரவர்மனும் பத்ரேச்வரரும்[தொகு]

10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிவலிங்கம்

மீ சன்னில் கிடைத்துள்ள ஆதாரத்தின்படி பத்ரவர்மன் (380-413), பத்ரவேச்வரன் சிவாலயத்தை அமைத்தார். சிவன் இங்கு லிங்க வடிவில் உள்ளார். மீ சன் பள்ளத்தாக்கு முழுமையையும் இவ்வாலயத்திற்கு அர்பணிப்பதாக பத்ரவர்மன் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளார். சம்புவர்மன் பத்ரவர்மன் மறைவிற்கு இரு நூறாண்டுகள் கழித்து நெருப்பினால் பத்ரவேச்வரன் சிவாலயம் அழிவுற்றது. ஏழாம் நூற்றாண்டில், அரசர் சம்புவர்மன் (577-629) ஆலயத்தைப் புதுப்பித்து சம்பு-பத்ரவேச்வரன் என்று சிவலிங்கத்தை மறுநிர்மாணம் செய்தார். சம்புவர்மன் ஆட்சிக்காலத்தில் கி.பி. 605 இல், சீனத்தளபதி லீய் ஃபாங் சாம் நாட்டின்மீது படையெடுத்தார். சாம் பெரிதும் அழிவுற்றது. ஆனால், திரும்பிச் செல்லும்வழியில் கொள்ளை நோய்க்கு லீய் ஃபாங் உட்பட பெரும்பாலோனர் மாண்டனர் 20 ஆம் நூற்றாண்டு ஆய்வாளர்களால் கட்டிடக்கலையின் அற்புதம் என வர்ணிக்கப்பட்ட இவ்வாலயம் வியாட்நாம் போரின்போது அமெரிக்கக் குண்டுவீச்சில் முற்றிலும் அழிந்தது. தற்போது ஒரு செங்கற்குவியலே மிஞ்சியுள்ளது.

பிரகாசதர்மன்[தொகு]

பிரகாசதர்மன் (653-687), விகராந்தவவர்மன் என்ற பெயரில் அரியணை ஏறினார். தெற்கே அரசை விரிவுபடுத்தினார். சிவலிங்கங்களுக்கு கோசா எனும் உலோகக் கவசங்கள் வழங்கப்பட்டது. இவர் சிவன் மட்டுமல்லாது திருமாலையும் வழிபட்டார். 657 இல் இவர் நிறுவிய கல்வெட்டின் மூலம் சம்பா அரசர்களின் வம்ச மரபை அறிய முடிகிறது.

பிற்காலம்[தொகு]

மீ சன் கோபுரம்

அடுத்தடுத்த அரசர்கள் பழையக் கோயில்களை புதுப்பித்ததுடன், புதிய கோயில்களையும் நிர்மாணித்தனர். பின்வந்த பல நூற்றாண்டுகளுக்கு, மத்திய வியட்நாமின் கலாச்சார மற்றும் சமய புனிதத் தலைநகராக மீ சன் விளங்கியது. ஈசனபத்ரேச்வரா உள்ளிட்ட பல கோயில்கள் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. கி.பி.1243 இல் ஐந்தாம் செய இந்திவர்மன் சில திருப்பணிகள் செய்துள்ளார். 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாம் அரசு, வியட் அரசிடம் மீ சன் உள்ளிட்டப் பகுதிகளை இழந்தது. தற்காலத்திய ஆய்வுகள் மத்திய வியட்நாமை வியட் கைப்பற்றியதும் சாம்பா அரசு வீழ்ந்தது. 1898 இல் பிரெஞ்சு ஆய்வாளர் எம்.சி.பாரிச் கண்டுபிடிக்கும்வரை, மீ சன் முற்றிலும் கைவிடப்பட்டிருந்தது.

மறுசீரமைப்பு[தொகு]

1937-1938 இல் சில சிறு கோயில்கள் மறுசீரமைக்கப்பட்டன. 1939-1943 இல் பெரிய கோயில்கள் மறுசீரமைக்கப்பட்டன. 1969 இல் வியாட்நாம் போரின்போது அமெரிக்கக் குண்டுவீச்சில் இவை அழிந்தன. சில சிலைகள் பிரான்சு, வியாட்நாம் அருங்காட்சியகங்களில் உள்ளன.

கட்டிடமைப்பு[தொகு]

இவை பெரும்பாலும் செங்கற்கட்டிடங்களாகும். சுடப்பட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டனவா அல்லது கட்டப்பட்டப் பிறகு மொத்தமாகக் கட்டிடம் சுடவைக்கப்பட்டதா என்ற சர்ச்சை நிலவுகிறது. வேலைப்பாடுகள் தனியாகச் செய்து செருகப்படாமல், செங்கல் அமைப்பு கட்டி முடிவுற்றதும், அச்செங்கல்மீதே செதுக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு கால கட்டிடங்கள் வெவ்வேறு பாணியில் உள்ளன.

கல்வெட்டுகள்[தொகு]

சமச்கிருதம் மற்றும் சம் மொழியில் கல்வெட்டுகள் தனியான கற்பலகை, கற்தூண்களில் எழுதி நிறுவப்பட்டுள்ளன. இந்திய வரிவடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீ_சன்&oldid=3224883" இலிருந்து மீள்விக்கப்பட்டது