மாங்காடு (சங்ககாலம்)
மாங்காடு என்னும் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே உள்ளன. பண்டைக் காலத்திலும் இருந்தன.
அவற்றில் ஒன்று குடமலையில் இருந்தது. இந்த ஊரைச் சேர்ந்தவர் மாங்காட்டு மறையோன். கோவலன், கண்ணகி, காவுந்தி ஐயை ஆகியோருக்கு உறையூரிலிருந்து மதுரை செல்லும் முப்பெரு வழிகளைப் பற்றி விளக்கியவர். [1]
விற்றூற்று மூதெயினனார் என்னும் சங்ககாலப் புலவர் ஒரு மாங்காட்டைக் குறிப்பிடுகிறார். இந்த மாங்காடு பனி பொழியும் மலையடுக்கத்தில் இருந்ததாம். அங்கு இட்டாறு என்னும் அருவி கொட்டுமாம். தந்தைக் குரங்கு குட்டி வைத்திருக்கும் தாய்க் குரங்குக்கு பலாப்பழத்தைப் பிளக்கும்போது குளிரால் நடுங்கித் துன்புறுமாம். அந்த மாங்காட்டிலுள்ள மகளிர் தம் கூந்தலில் மலர்களைக் கொத்தோடு சூடிக்கொள்வார்களாம். (அந்த மகளிர் போன்றவளாம் தலைவி. தந்தையின் கட்டுக்காப்பில் இருக்கிறாளாம். தலைவன் திருமணம் செய்துகொண்டால்தான் அவளைப் பெறமுடியும் என்கிறாள் தோழி) [2]
இவற்றை ஒப்பிட்டு எண்ணும்போது சங்ககால மாங்காடு பனிமூட்டம் மிக்க மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதியில் இருந்தது என உணரமுடிகிறது.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ “குடமலை மாங்காட்டு உள்ளேன்” - சிலப்பதிகாரம் காடுகாண் காதை
- ↑ நண்ணிக்
கொடியோர் குறுகும் நெடி இருங்குன்றத்து
இட்டாறு இரங்கும் விட்டொளிர் அருவி
அருவரை இழிதரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்குபசி களைமார்
பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும்
நனிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து
மகளிர் மாங்காடு அற்றே துகளறக்
கொந்தோடு உதிர்ந்த கதுப்பின்
அந்தீங் கிளவி தந்தை காப்பே – அகநானூறு 288