மறைந்த தமிழியல் மரபுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழியல் என்பது தமிழ் மொழியின் இயல்பு. இந்த இயல்பானது முன்னோர் காலந்தொட்டு நமக்கு வழிவழியாக வருகிறது. வழிவழியாக வந்த இது நம் மொழியில் மரத்துப்போய் இருக்கிறது. வாக்கிய அமைப்புகளும், அதில் உள்ள சொல் குறியீடுகளும், சொல்லை ஒலிக்கும் பாங்கும்,சொல்லிருள்ள எழுத்தை ஒலிக்கும் பாங்கும், அவற்றை எழுதிக்காட்டும் பாங்கும் தமிழியலில் உள்ள மரபுகள். இவை தமிழியல் மரபுகள். தமிழில் உள்ள மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சில பழமையான மரபுகள் பிற்காலத் தமிழிலும், இன்றைய தமிழிலும் இல்லை. இப்படிப்பட்ட மறைந்த தமிழியல் மரபுகள் பல. அவற்றைத் தொகுத்துக் காணும்போது தொல்காப்பியத்தின் பழைமை புலனாகும். அத்துடன் பிற்காலத்தில் தோன்றிய சில மொழியியல் மரபுகளுக்கான அடிப்படையும் விளங்கும்.

ஒலியியல் மரபுகள்[தொகு]

'ஏ'-இறுதி

இடைச்சொல் ஏ மொழியின் (வாக்கியத்தின்) இறுதியில் வந்து ஒலிக்கும்போது ஏ என்னும் எழுத்துக்கு உரிய தன் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்காமல் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் நிலை தொல்காப்பியர் காலத்தில் இருந்தது.[1] இதற்கு எடுத்துக்காட்டாகத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே [2]
என்னும் பாடல் தொடரைத் தந்துள்ளார். ஆசிரியப்பாவின் இறுதியில் வரும் ஏகாரம் இவ்வாறு ஓரலகு ஒலியைப் பெற்றிருந்தது. இப்படி ஒலிக்கும் பழக்கம் இன்று நடைமுறையில் இல்லை. எனினும் இதன் தாக்கம் சிலப்பதிகாலக் காதை முடிவு ஆசிரியப்பாப் பாடல் முடிவுகளில் ஏ என்பது என் என்னும் முடிபாக மாறி வருவதில் காணமுடிகிறது.
ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே [3]
விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென் [4]

எழுத்தியல் மரபுகள்[தொகு]

 • நாய் என்பதை நாஇ என எழுதுதல்,
 • ஐயர் என்பதை அய்யர் என எழுதுவதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[5] இதனை நாம் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் அஇயர் என எழுதும் தொல்காப்பியர் கால மரபு [6] இன்று நம்மிடையே இல்லை.
 • அதேபோல ஔவை என்பதை அவ்வை என எழுதும் தொல்காப்பியர் காலப் பழக்கம் இன்று நம்மிடையே உள்ளது. ஆனால் அஉவை என எழுதும் தொல்காப்பியர் கால மரபு [7] இன்று நம்மிடையே இல்லை.

நூல்நெறி மரபுகள்[தொகு]

எழுத்துக்களின் எண்ணிக்கையில் குறளடி, சிந்தடி, அளவடி என வகுக்கும் மரபியல் பாங்கினைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இந்த மரபு மறைந்து போய் சீர் அடிப்படையில் அடிகளை பகுத்துப் பார்க்கும் பாங்கு நடைமுறைக்கு வந்துவிட்டது.

அடிக்குறிப்பு[தொகு]

 1. ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி
  கூற்றுவயின் ஓர் அளபு ஆகலும் உரித்தே (தொல்காப்பியம் இடையியல் 38)
 2. அகநானூறு 1
 3. சிலப்பதிகாரம் 1 மங்கலவாழ்த்துக் காதை ஈற்றடி
 4. சிலப்பதிகாரம் 5 இந்திர விழவு ஊர் எடுத்த காதை ஈற்றடி
 5. அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
  'ஐ' என் நெடுஞ் சினை மெய் பெறத் தோன்றும். (தொல்காப்பியம் 56)
 6. அகர இகரம் ஐகாரம் ஆகும். (தொல்காப்பியம் 54)
 7. அகர உகரம் ஒளகாரம் ஆகும் (தொல்காப்பியம் 55)