மரபணு இருக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிறப்புரியின் பகுதிகள்:

(1) அரை நிறப்புரி
(2) மையமூர்த்தம்
(3) குறுகிய (p) பகுதி
(4) நீண்ட (q) பகுதி
பட்டிகளின் எடுத்துக்காட்டு

மரபியல் அல்லது மரபியல் கணிப்பீட்டில், மரபணு இருக்கை (Locus) என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும். ஒரு மரபணு இருக்கையில் உள்ள டி.என்.ஏ வரிசையில் காணப்படக்கூடிய வேற்று வடிவங்களே எதிருருக்கள் எனப்படும். ஒரு மரபணுத்தொகையில் மரபணு இருக்கைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வரிசை மரபியல் வரைபடம் எனப்படும். ஒரு குறிப்பிட்ட உயிரியல் இயல்புக்குரிய மரபணு இருக்கையைத் தீர்மானிக்கும் செயல்முறை மரபணு வரைபடமாக்கல் எனப்படும்.

இருமடிய, பல்மடிய உயிரணுக்களில் ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையிலுள்ள ஒரு மரபணுவின் எதிருருக்கள் ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பின் அவை, குறிப்பிட்ட மரபணுவுக்குரிய ஒத்தினக் கருவணு (சமநுகம்/ ஓரின நுகம்) (homozygoous) எனப்படும். அதேவேளை குறிப்பிட்ட மரபணுவின் எதிருருக்கள் வேறுபட்ட மாற்று வடிவங்களில் இருப்பின் அவை, அந்த மரபணுவுக்குரிய கலப்பினக் கருவணு (இதரநுகம்/ கலப்பினக் கருவணு) (heterozygous) எனப்படும்.

பெயரீடு[தொகு]

ஒரு குறிப்பிட்ட மரபணுவுக்குரிய மரபணு இருக்கையானது பின்வருமாறு குறிப்பிடப்படலாம். "6p21.3"

பாகம் விளக்கம்
6 நிறப்புரியின் எண்
p நிறப்புரியின் குறுகிய பாகத்தில் (p என்பது பிரெஞ்சு மொழியில் petit என்பதைக் குறிக்கும்) குறிப்பிட்ட இருப்பிடம் உள்ளது. q எனக் குறிப்பிடப்பட்டிருப்பின் அது நிறப்புரியின் நீண்ட பாகத்தைக் கிறிக்கும்.
21.3 நிறப்புரியில் குறிப்பாக எந்தப் பகுதியில் இருப்பிடம் உள்ளதென்பதைக் குறிக்கும்: பட்டி (band) 2, பிரிவு (section) 1, துணைப்பட்டி 3. நிறப்புரியானது பொருத்தமான முறையில் சாயமூட்டப்பட்டு இருப்பின் பட்டிகள் நுணுக்குக்காட்டியின் கீழ் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு பட்டியும் மையமூர்த்தத்திற்கு அருகாகவுள்ளது 1 என ஆரம்பித்து இலக்கமிடப்படும். அதிகரித்த நுணுக்க ஆய்விலேயே துணைப்பட்டிகள், துணை-துணைப்பட்டிகள் தெரியும்.

தொடராக உள்ள மரபணு இருக்கையையும் இவ்வாறே விளக்க முடியும். எடுத்துக் காட்டாக OCA1[1] இன் மரபணு இருக்கை "11q1.4-q2.1" எனும்போது, அது 11 ஆவது நிறப்புரியில், நீண்ட பாகத்தில், 1 ஆவது பட்டியின் 4 ஆவது துணைப்பட்டிக்கும், 2 ஆவது பட்டியின் 1 ஆவது துணைப்பட்டிக்கும் இடையில் இருப்பிடம் உள்ளது என்பதைக் குறிக்கும்.

நிறப்புரியின் முனைப் பகுதிகளில் உள்ள மரபணு இருக்கைகள் "pter", "qter" எனக் குறிக்கப்படும். எடுத்துக் காட்டாக, "2qter" என்பது 2 ஆவது நிறப்புரியின் நீண்ட பாகத்தின் முனைப்பகுதியைக் குறிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபணு_இருக்கை&oldid=2745047" இருந்து மீள்விக்கப்பட்டது