மயுமி ரகீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயுமி ரகீம் (mayumi raheem பிறப்பு 15 செப்டம்பர் 1991) இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் 50 மீற்றர், 100 மீற்றர், 200 மீற்றர் பிரஸ்ட்ஸ்ரோக் நீச்சலில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்றார். மேலும் நான்கு வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கல பதக்கங்கள் வென்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்தார்.[1][2]

2006 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் 50 மீற்றர் பிரஸ்ட்ஸ்ரோக் நீச்சலில் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானார். 2005, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்சிப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியிட்டார்.[3]

இலங்கையில் பல தேசியப் பதிவுகளை நிகழ்த்தியுள்ளார். தனது எட்டாவது வயதில் இருந்து நீச்சல் பயில ஆரம்பித்தார். 2006 ஆம் ஆண்டு தென் ஆசிய விளையாட்டுப் போட்டியின் இலங்கை தேசியக் குழுவின் தலைவராக செயற்பட்டார்.

மயுமி தற்சமயம் சிங்கப்பூரில் வசிக்கின்றார். அங்கு தென் கிழக்காசியாவின் யுனைடட் வேர்ல்ட் கல்லூரியில் சர்வதேச இளங்கலைப் பட்டத்தை நிறைவு செய்தார். மயுமி முன்னர் இலங்கையிலும், நியுசிலாந்திலும் வசித்துள்ளார். 2006 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய திறந்த சாம்பியன்சிப்பில் 200 மீற்றர் பிரஸ்ட்ஸ்ரோக் நீச்சலில் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றினார். இவர் 2004-07 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் நீச்சல் கழக உறுப்பினராக இருந்தார். அங்கு ஆஸ்திரேலியப் பயிற்சியாளரான ஜான் மர்பி என்பவரின் கீழ் பயிற்சி பெற்றார். அவர் ஆஸ்திரேலியா திரும்பிய பின் முன்னால் சிங்கப்பூர் தேசிய வீரரான டேவிட் லிம் என்பவரிடம் பயிற்சி பெற்றார். பின்பு கிராஸ்ரூட் சங்கத்தில் அமெரிக்க பயிற்றுவிப்பாளரான ஜக் சிம்மன் என்பவரிடம் பயிற்சி பெறுகின்றார்.

2010 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் தென் ஆசிய விளையாட்டுக்களில் பங்குபற்றவில்லையென அறிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயுமி_ரகீம்&oldid=3383474" இலிருந்து மீள்விக்கப்பட்டது