மயில் உள்ளான்
மயில் உள்ளான் | |
---|---|
![]() | |
மயில் உள்ளான் (ஆண்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | சரத்ரீபார்மசு |
துணைவரிசை: | தினோகோரி |
குடும்பம்: | இராசுடுராடுலிடே |
பேரினம்: | இராசுடுராடுலா |
இனம்: | இரா. பெங்காலென்சிசு |
இருசொற் பெயரீடு | |
இராசுடுராடுலா பெங்காலென்சிசு (லின்னேயஸ், 1758) | |
![]() | |
பரம்பல் |
மயில் உள்ளான் ஒரு கரையோரப் பறவையாகும். பொதுவாக இவை ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா, மற்றும் தென்இந்தியாவின் சதுப்பு நிலங்களில் காணப்படுகின்றன.[2]
பெயர்கள்[தொகு]
தமிழில் :மயில் உள்ளான் ஆங்கிலப்பெயர் :Greater Painted - Snipe அறிவியல் பெயர் :இராசுடுராடுலாபெங்காலென்சிசு [3]
விளக்கம்[தொகு]
இது காடையைவிட அளவில் பெரியது சுமார் 25 செ.மீ. நீளமிருக்கும். அலகு சிறுத்து நேராக நுனியில் சற்று வளைந்து பழுப்பு நிறமாக இருக்கும். விழிப்படலம் பழுப்பு, கால்கள் பச்சை நிறத்தில் இருக்கும். ஆணும் பெண்ணும் உருவத்தில் வேறுபட்டவையாகக் காட்சிதரும்.[4]
பெண் பறவையின் உடலின் மேற்பகுதி பசுமை கலந்த ஆலிவ் நிறமாக அல்லது வெண்கலப் பச்சை நிறமாக இருக்கும். வெளிர் மஞ்சளும் மறுப்புமான கோடுகளும் புள்ளிகளும் உடலின் மேற்பகுதியை அழகுபடுத்தும். கண்களைச் சுற்றிக் கண்ணாடி அணிந்தது போல வெள்ளை வளையங்கள் காணப்படும். தோளின் மேற்பகுதியில் ஒரு வெள்ளை வளையம் மார்புவரை வரும். மோவாய் தொண்டை, மேல்மார்பு ஆகியன செம்பழுப்பு நிறமாக இருக்கும். கீழ் மார்பு கருப்பு கலந்த செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். வயிறு, பக்கங்கள், வாலடி ஆகியன வெண்மை நிறத்தில் இருக்கும். இனப்பெருக்கம் செய்யாத காலத்தில் இந்த தோற்றம் மறைந்து ஆணின் தோற்றத்தை அடையும்.[4]
ஆண்பறவை தோற்றத்தில் பெண்ணை ஒத்ததாக இருக்கும், என்றாலும் கழுத்திலும் மார்பிலும் காணப்படும் செம்பழுப்புக்கும் கரும்பழுப்புக்கும் பதிலாகச் சாதாரணச் சாம்பல் பழுப்பு நிறம் பெற்றிருக்கும்.[4]
காணப்படும் பகுதிகள், உணவு[தொகு]
தமிழகம் எங்கும் தாவரங்கள் நிறைந்த ஏரி குளங்குட்டைகளை அடுத்த சதுப்பு நிலங்களில் தனித்தோ சிறு கூட்டமாகவோ காலை மாலை அந்திவேளைகளிலும் இரவிலும் நத்தை, நண்டு, புழு, பூச்சி ஆகியவற்றோடு புல் விதைகள், நெல் ஆகியவற்றையும் தேடித் தின்பது. கால்வாயின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு இரைதேட நீந்தியே செல்லும். சேற்றில் அலகை நுழைத்து இரைதேடும். பெண் ஊக் என நீட்டி இழுத்துக் குரல் கொடுக்கும். முழுநிலா நாட்களில் இரவு முழுதும் இக்கத்தலைக் கேட்கலாம். [5]
இனப்பெருக்கம்[தொகு]
இனப்பெருக்க காலத்தில் பெண் பறவை காதலூட்டங்களை நிகழ்த்தி ஆணைக் கவரும். போட்டிக்கு வரும் பெண் பறவைகளிடன் சண்டையிட்டு அவற்றை விரட்டும். சூலை முதல் செப்டம்பர் முடிய தரையில் புல் கொத்தாக வளர்ந்துள்ள இடத்தில் தரையில் ஆண் தட்டு வடிவில் கூடுகட்டித் தர பெண் 4 முட்டைகளிடும். முட்டைகளிட்ட பின்னர் அடைகாக்கும் பொறுப்பையும், குஞ்சுகளைப் போணும் பொறுப்பையும் ஆண் பறவையிடம் ஒப்புவித்து பெண் பறவை வேறு ஆண் துணையை நாடிச் செல்லும்.[4]
படங்கள்[தொகு]
-
மயில் உள்ளான்
-
பாரிதாபாத் அரியானா .
-
அரியானா இந்தியா.
-
அரியானா இந்தியா.
-
மயில் உள்ளான் முட்டைகள்.
-
பெங்களூரு
-
மாஞ்சிரா வனவிலங்கு சரணாலயம் தெலுங்கானா இந்தியா
-
ஆண் மயில் உள்ளான் தன் குஞ்சுகளுடன்.
வெளி இணைப்புகள்[தொகு]
- (Greater) Painted snipe - Species text in The Atlas of Southern African Birds
- BirdLife Species Factsheet.[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Rostratula benghalensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Rostratula benghalensis (Greater Painted-snipe) - Avibase". avibase.bsc-eoc.org. 2017-10-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மயில் உள்ளான்Greater_painted-snipe". 31 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 4.0 4.1 4.2 4.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 174-176.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:41