மண்ணெய் விளக்கு
மண்ணெய் விளக்கு என்பது, மண்ணெய்யை (மண்ணெண்ணெய் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) எரிபொருளாகப் பயன்படுத்தும் விளக்கு ஆகும். செயற்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு மண்ணெய் விளக்குகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று திரிகளைப் பயன்படுத்தும் விளக்குகள், மற்றது அமுக்க விளக்குகள் (அல்லது அழுத்த விளக்குகள்) . 9 ஆம் நூற்றாண்டில், பாக்தாக்தைச் சேர்ந்த அல் ராசி என்பவரால் எழுதப்பட்ட கிதாப் அல் அஸ்ரார் (மறைபொருள்களின் நூல்) என்னும் நூலில், நஃபாத்தா என்னும் பெயரில், மண்ணெய் விளக்குப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[1]1853 ஆம் ஆண்டில் மேம்பட்ட மண்ணெய் விளக்கு ஒன்றைப் போலந்து நாட்டினரான இக்னாசி லூக்காசியேவிக்ஸ் (Ignacy Łukasiewicz) என்பவர் உருவாக்கினார்.ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே 77 பில்லியன் லிட்டர் மண்ணெய் பயன்படுகிறது.[2] இதை ஐக்கிய அமெரிக்காவின் தாரைவிமான ஆண்டு எரிபொருள் நுகரவான 76 பில்லியன் லிட்டரோடு ஒப்பிடலாம்.[3]
திரி விளக்குகள்
[தொகு]மண்ணெய்யை எரிபொருளாகக் கொண்டு செயற்படும் திரி விளக்குகள் எளிமையானவை. இவை ஒரு மெழுகுதிரியைப் போலவே செயற்படுகிறது. திரி விளக்குகளின் கீழ்ப் பகுதியில் ஒரு சிறிய எரிபொருள் கொள்கலன் இருக்கும். இதில், பொதுவாகப் பருத்தியினால் செய்யப்பட்ட திரி ஒன்றும் இருக்கும். இத் திரி, அதன் கீழ்ப்பகுதி கொள்கலனுள் இருக்கும் மண்ணெய்யுள் தோய்ந்து இருக்குமாறு நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்டிருக்கும். மண்ணெய் நுண்புழைமை (அல்லது மயிர்த்துளைத் தாக்கம்) காரணமாக திரியின் மேல் நுனிவரை ஏறும். திரியின் நுனி உலோகத்தினால் செய்யப்பட்ட மெல்லிய குழாய் போன்ற அமைப்பினூடாக வெளியே சிறிதளவு நீண்டிருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு நீண்டிருக்கும் பகுதியில் தீ இடும்போது மண்ணெய் எரிந்து சுவாலை உண்டாவதால் வெளிச்சம் கிடைக்கும். திரியின் முனையில் உள்ள எரிபொருள் எரிந்து முடியும்போது மண்ணெய் தொடர்ச்சியாக மேலெழும்பும். கொள்கலனில் உள்ள மண்ணெய் முடியும் வரை இது தொடர்ந்து நடைபெறும்.
திரி வெளியே நீண்டிருக்கும் அளவைக் கூட்டிக் குறைப்பதன் மூலம் சுவாலையின் அளவையும் கூட்டிக் குறைக்க முடியும். சுவாலை பெரிதாகும்போது கூடிய ஒளி கிடைக்கும். இவ்வாறு திரியை மேலும் கீழும் அசைப்பதற்காக ஒரு பொறிமுறையும் சில விளக்குகளில் உண்டு. திரியை அளவுக்கு அதிகமாக வெளித்தள்ளும்போது எரிதல் முழுமையாக நடைபெற முடியாததால், கரிமத் துகள்கள் உருவாகிப் புகை உண்டாகும்.
சுவாலை பொதுவாக, மேலும் கீழும் திறந்த ஒரு கண்ணாடி உருளையினால் மூடப்பட்டிருக்கும். இது, காற்றினால் சுவாலை அணைந்துவிடாமல் இருப்பதற்கு உதவுவதுடன், தீப்பிடிக்கும் ஆபத்தையும் குறைக்கிறது. அத்துடன் இது சுவாலையைச் சுற்றிலும் காற்றோட்டத்தை உருவாக்கித் தேவையான அளவு ஒட்சிசனை வழங்குவதால், முழுமையான எரிதலுக்குத் துணை புரிகிறது. இதன் மூலம் திறந்த சுவாலையில் இருந்து கிடைப்பதிலும் கூடிய ஒளியும் கிடைக்கிறது.
சுடர்வலை விளக்கு
[தொகு]சுடர்வலை (Mantle) விளக்கு, திரி விளக்கின் ஒரு வேறுபாடு ஆகும். இதில் திரி ஒரு கூம்பு வடிவச் சுடர்வலையால் மூடப்பட்டிருக்கும். சுடர்வலை தோரியம் அல்லது வேறு அரிய வகைப் பொருளினால் செய்யப்பட்டிருக்கும். சுவாலையினால் சுடர்வலை சூடாகும்போது அது ஒளிர்ந்து ஒளியை வெளிவிடும். பெரும்பாலும் அமுக்க விளக்குகளில் சுடர்வலைகள் பயன்படுத்தப்படுவது உண்டு ஆனால் மேல் குறிப்பிட்ட விளக்கு அமுக்க விளக்கு அல்ல.
அமுக்க விளக்கு
[தொகு]இவ்வகை விளக்குகள் திரி விளக்குகளிலும் கூடுதல் சிக்கலானவை. பயன்படுத்துவதற்கு இலகுவானவை அல்ல எனினும் இவை மிகவும் கூடுதலான ஒளியைத் தர வல்லவை. பெட்ரோமாக்ஸ் எனவும் அழைக்கப்படும் இவை, ஐக்கிய இராச்சியத்தில் டில்லி விளக்கு (Tilley lamp) என்றும் ஐக்கிய அமெரிக்காவில் கோல்மன் விளக்கு என்றும் வழங்கப்படுகிறது. இப் பெயர்கள் அவ்வப் பகுதிகளில் இவ் விளக்கை அறிமுகப் படுத்திய நிறுவனங்களின் பெயரைத் தழுவியவை ஆகும்.
அமுக்க விளக்குகளின் கீழ்ப் பகுதியில் எரிபொருள் தாங்கியும், அதிலுள்ள மண்ணெய்க்கு அமுக்கம் கொடுப்பதற்காக அதில் பொருத்தப்பட்ட சிறிய காற்றமுக்கி (pump) ஒன்றும் இருக்கும். தாங்கியிலிருந்து விளக்கின் மேல் பகுதிவரை செல்லும் ஒடுங்கிய குழாய் ஒன்று மேல் பகுதியில் இருக்கும் எரிவானுக்கு எரிபொருளைக் கொண்டு செல்கிறது. எரிவானுக்கு நேரே கீழே சுடர்வலை பொருத்தப்பட்டிருக்கும். அமுக்கத்துடன் வரும் மண்ணெய் ஆவி எரிந்து ஏற்படும் சுவாலையினால் சுடர்வலை ஒளிரும்.
அமுக்க விளக்குச் சரியாகச் செயற்படுவதற்கு மண்ணெய் ஆவியாகும் வெப்பநிலைக்கு உயர்த்தப்படவேண்டும். மண்ணெய் ஆவி, நீர்ம மண்ணெய்யிலும் கூடிய வெப்பத்துடன் எரியக்கூடியது. இதனால் அமுக்க விளக்கின் செயற்பாட்டைத் தொடக்கி வைப்பதற்காக எரிவானைச் சூடாக்க வேண்டியுள்ளது. இதற்காக சிறு அளவு மதுசாரத்தை (spirit) இதற்கென அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மதுசாரத்தை ஊற்றிப் பற்றவைக்கப்படும். காற்றமுக்கியை இயக்கி மண்ணெய்யை அமுக்கத்துக்கு உள்ளாக்குவதன்மூலம் மண்ணெய் ஒடுங்கிய குழாயூடாக எரிவானுக்கு அனுப்பப்படுகின்றது. அங்கே மதுசாரம் எரிவதனால் உருவான வெப்பத்தில் மண்ணெய் ஆவியாகி எரியத்தொடங்கும். இதனால் உருவாகும் வெப்பம் மதுசாரம் எரிந்து முடிந்த பின்பும் தொடர்ச்சியான ஆவியாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆவி, அமுக்கத்துடன் சுடர்வலையை நோக்கிச் செலுத்தப்பட்டு எரியும். அதனால் உருவாகும் வெப்பத்தால் சுடர்வலை ஒளிரும்.
கலங்கரை விளக்கங்களில் பயன்படும் பெரிய மண்ணெய் அமுக்க விளக்குகள், திரி விளக்குகளோடு ஒப்பிடும்போது குறைந்த எரிபொருள் நுகர்வில் பொலிவாக எரிகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zayn Bilkadi (University of California, Berkeley), "The Oil Weapons", Saudi Aramco World, January–February 1995, pp. 20–27.
- ↑ Jean-Claude Bolay, Alexandre Schmid, Gabriela Tejada Technologies and Innovations for Development: Scientific Cooperation for a Sustainable Future, Springer, 2012 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8178-0267-5 page 308
- ↑ ^ Energy Information Administration. "U.S. Prime Supplier Sales Volumes of Petroleum Products". http://tonto.eia.doe.gov/dnav/pet/pet_cons_prim_dcu_nus_a.htm.
- ↑ Dennis L. Noble Lighthouses & Keepers: The U.S. Lighthouse Service and Its Legacy, Naval Institute Press, 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59114-626-7, page 34
வெளி இணைப்புகள்
[தொகு]- International Guild of Lamp Researchers
- Making and Repairing Kerosene Lamps
- Information concerning kerosene burners (German) by Gerhard Bruder
- Coffee shop decorative lights
- Oil Lamp Basics for Survivalists
- Information on Dietz Kerosene Lamps and Lanterns
- The kerosene lamp BAT № 158
- How to Assemble a Kerosene Lamp – Antique Lamp Supply
- Information on blinking kerosene lamps