மகான் ஸ்ரீ படேசாயுபு சுவாமி ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகான் ஸ்ரீ படேசாயுப் சித்தர் ஜீவ சமாதி

மகான் ஸ்ரீ படே சாயுப் சித்தர் ஜீவ சமாதியானது, விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னபாபுசமுத்திரம் என்னும் கிராமத்தில் உள்ளது. இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். இவர் மதங்களை கடந்து அருள் செயல் புரிபவர் ஆவார். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.[1]

பாம்பிற்கு மோட்சம் அளித்தல்[தொகு]

ஆலயத்தினுள் வடிவமைக்கப்பட்ட மகானின் சிலை

ஒருநாள் வனத்தாம்பாளையம் சென்று பண்ணக்குப்பத்திற்கு மகான் படே சாகிப் திரும்பி வந்துகொண்டிருந்தார், ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக்கண்ட மக்கள் நடுநடுங்கினார்கள் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எவ்வித உணர்ச்சியும் இன்றி நடந்துக்கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி விச முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதை கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார். மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணக்குப்பம் போய் சேர்ந்தார்கள். இரவு முழுவதும் மகானை கவனித்துக் கொண்டு உண்ணாமல், உறங்காமல் கவலையோடு இருந்தார்கள். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை, மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார், அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது. பகவானிடத்தில், சர்வேஸ்வரனின் பெரிய பிள்ளையான ஞானசொருபமான உள்ளாழ்ந்த பக்தியை செலுத்தினார். இமைகள் மூடி கொண்டன நிஷ்டை நிலைக்கிறது ஒரே ஏகாந்த நிலை தொடர்கிறது, குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்து எய்துகிறது. பேசுவதற்கு ஏதும் இல்லை, சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை, ஏங்குவதற்கும் ஏதும் இல்லை. இத்தைகைய விவரிக்க தெரியாத தெய்வீக சக்திவாய்ந்த நிலையில் மகான் படே சாகிப் அமர்ந்திருந்தார்.

அப்போது அவரை தீண்டிய பாம்பு (கருநாகம்) ஆனந்தமாக கோவிலுக்குள் நுழைந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தார்கள். மகான் ஆனந்தத்தில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் ஒன்றும் செய்யவில்லை. அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டி இடத்தில வாய் வைத்து விஷத்தை உறிஞ்சிய உடன் விநாயகப் பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவர்களை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் தலையின் மேல் படம் எடுத்தது. பின் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியது, அவரது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. ஒருமணி நேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறந்தது. நிஷ்டை கலைந்து, தன்னை பார்த்துக் கொண்டு இருக்கும் கருநாகத்தை பார்த்தார். தன் தலையை சுருட்டி தலை குனிந்து வணங்கியது. அவர் பாதத்தில் அந்த கருநாகம் தன் உயிரை விட்டது. அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் வாழ்த்தி மோட்சம் அளித்தார். அந்த பூஉடலுக்கு தன் கைகளாலே இறுதி சடங்குகளையும் செய்து முடித்தார். மக்கள் இந்த நிகழ்ச்சியை பிரமிப்புடன் கண்டனர். கொடிய விசத்தை தந்த நாகத்திற்கு கூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது. மேலும் அந்த ஊர் மக்களுக்கு விசம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாத படியும் விச உயிரினங்களுக்கு ஆணையிட்டு வாழ்த்தினார். மக்கள் மனதில் அந்த ஆத்மஞானி "தெய்வம்" என்ற நிலையில் வைத்து போற்றபடுகிறார்.[2]

மகானின் சிறப்பு[தொகு]

மகான் வீணையுடன் மரத்தின் அடியில் அமர்ந்தவாறு இருக்கும் சிலை

மகான் அவர்கள் தன்வந்திரி லோக தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். அருகில் ஒரு மண் கலயமும், சிறு பானை மற்றும் கொட்டாங்குச்சிகளும் இருக்கும். அதில் சில பச்சிலைகளும், புனித நீரும் இருக்கும். தம்மை நாடி வருபவரின் குறைகளை செவிமடுத்துக் கேட்பார். சிலரை அருகே உள்ள மகிழ மரத்தைச் சுற்றி வரும் படி சாடையாகக் கூறுவார். அவ்வாறு அவர்கள் சுற்றி வந்ததும் அவர்களின் கண்களையே உற்றுப் பார்ப்பார். சிலர் அந்த கருணை விழிகளின் தீட்சண்யம் தாங்காது மயங்கி விழுவர். சிறிது நேரத்தில் விழித்து எழுந்ததும் தமது நோய் முற்றிலுமாக நீங்கி இருப்பதை அறிந்து மகானை வணங்கி மகிழ்வர். சிலர் மகானை வணங்கி விபூதிப் பிரசாதம் பெற்று அணிந்ததுமே தமது நோய் நீங்கியதை அறிந்து மகானைத் தொழுவர் மற்றும் சிலருக்கு மகான் தன் கையால் ஒரு சிறு கொட்டாங்குச்சியில் நீரை அளிப்பார். அதை அருந்தியதுமே அவர்களைப் பீடித்திருந்த நோய்கள் விலகி விடும். குறைகள் அகன்று விடும், சிலருக்கு தமது கைகளால் தீண்டி ஆசிர்வதிப்பார். சிலருக்கு தாம் இமயமலைக் காடுகளில் சுற்றித் திரிந்த போது கண்டறிந்த பச்சிலைகளை அளித்து நோய் தீர்ப்பார். இவ்வாறு பலதரப்பட்ட மக்களின் நோயினை நீக்கும் ஒரு மகாபுரசராக மகான் சிவஸ்ரீ படே சாகிப் விளங்கி வந்தார்.[3]

மகானின் ஜீவ சமாதி[தொகு]

படே சாகிப் எங்கே, எப்போது பிறந்தார்? அவருடைய அவதார தினம் எது போன்ற தகவல்கள் தெரியவில்லை, என்றாலும், அவர் ஜீவ சமாதி ஆனது கி.பி. 1868-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி என்கிற குறிப்பு இருக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆகும். ஆயில்ய நட்சத்திரம் எனவே, இவரது ஜீவ சமாதியில் பிரதி செவ்வாய்க்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு சிறப்பாக இருக்கும். ஜீவ சமாதி எண்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மகானின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது, சமாதியின் முன்பு அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. காற்றிலும் மழையிலும் கூட அணைவதே இல்லை. மக்கள் சுற்றி வருவதற்கு விசாலமான இடம் உள்ளது. நிழல் தரும் மரங்கள் உண்டு. அவரின் மறைவுக்குப் பின் மகானின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் சமாதிக்குத் தினமும் சென்று வருகிறார்கள்.[4]

ஆலயத்தின் சிறப்பு[தொகு]

மக்கள் தங்கள் குறைகளைச் சமாதியின் முன் நின்று மனம் விட்டுச் சொல்லுகிறார்கள். கொடிய தொற்று மற்றும் தீராத நோய்களால் அவதியுறுவோர் படேசாகிப் ஜீவ சமாதியை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்து, இயன்ற அளவு அன்னதானம், நீர் மோர், பிஸ்கெட், பழ வகைகளை தானம் செய்தால் உத்தமமான பலன்களைப் பெறலாம். தாமரை இலையின் பின்பக்கம் அன்னம் வைத்து தானம் செய்வது கூடுதலான பலனைத் தரும். மகானின் அருளாசி வேண்டி பக்தர்கள் திரளாக கலந்துக் கொள்வார்கள். மேலும் வழிபாடுகளும் சிறப்பாக இருக்கும்.

இருப்பிடம்[தொகு]

மகான் ஸ்ரீ படேசாயுபு சுவாமி ஆலயத்தின் நுழைவு வாயில்

விழுப்புரம் - பாண்டிச்சேரி மெயின் ரோட்டில் (வில்லியனூர் வழி) உள்ளது கண்டமங்கலம் ஊராட்சி. கண்டமங்கலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு சுமார் 22 கி.மீ, பாண்டிச்சேரிக்கும் சுமார் 18 கி.மீ தொலைவு ஆகும். இந்தப் பேருந்து தடத்தில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் இறங்கிக் சுமார் 2 கி. மீ. தொலைவில் சின்னபாபுசமுத்திரம் என்கிற ஊரில் உள்ளது. இங்கு தான் ஸ்ரீபடே சாகிப்பின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=14929&cat=3
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=4045
  3. "மகான் ஸ்ரீபடேசாகிப் ஆலயம்".
  4. "படேசாயுப் ஜீவ சமாதி".